மந்திரம் போற்றுதும்...  திருமந்திரம் போற்றுதும்... - 13

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரிவடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச் செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்று
மந்திரம் போற்றுதும்...  திருமந்திரம் போற்றுதும்... - 13

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி...


தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச் 
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்று
அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே 
(பாடல் 1151)

பொருள்: அழகிய வளையல்களை அணிந்த திருக்கையை உடையவள் அம்பிகை பராசக்தி. அவளே சுகங்களையும், இன்பங்களையும் அருள்பவள். அழகானவள். திரிபுரை மங்கை. கங்கையாகிய சலமகளும் அவளே. சூரியனுக்கும் ஒளி கொடுப்பவள். அடியவர்களின் துன்பங்களைத் துடைத்து, ஆனந்தம் அளிப்பவள் அந்த அம்பிகை.

பாடலைத் தொடங்கும்போதே அம்பிகை அழகிய வளையல்களை அணிந்திருப்பவள் என்கிறார். ஆடி மாதத்தில் அம்பிகைக்கு வளைகாப்பு வைபவம் நடப்பது நாம் அறிந்ததே. ஞான சம்பந்தப் பெருமான், "அங்கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி' எனத் தொடங்கும் தேவார பதிகத்தில், உமா தேவி அழகிய கொடி போல வரிசையாக வளையல்களை அணிந்திருப்பவள் எனக் குறிப்பிடுகிறார்.

திருவைகாவூர் அருள்மிகு வில்வவனேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள அம்பிகைக்கு "வளைக்கை நாயகி' என்று பெயர்.

குரங்கணில் முட்டம் அருள்மிகு வாலீஸ்வரர் கோயிலில் அருள் பாலிக்கும் அம்பிகைக்கு "இறையார் வளையம்மை' என்பது திருநாமம்.

இப்படி வளையல்களை அணிந்திருப்பவளாகிய அம்பிகை, மிக அழகானவளாக சுந்தரியாக இருக்கிறாள். அபிராமி பட்டர் அம்பிகையை "அணியும் அணிக்கு அழகே' என்கிறார். நகை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம். அந்த நகைகள் நம் அழகை கூடுதலாகக் காட்டும். ஆனால் அம்பிகைக்கு ஏதேனும் நகைகளை அணிவித்தால் அந்த நகைகளுக்கு அழகு சேருமாம். அந்த அளவிற்கு அழகானவள் அம்பிகை.

அம்பிகையை "திரிபுரை' என இப்பாடலில் குறிப்பிடுவது போலவே வேறு சில இடங்களிலும் "திரிபுரை' எனப் பாடுகிறார் திருமூலர். அபிராமி பட்டரும் "அம்மை நாமம் திரிபுரை' என்றும், "திரிபுரை பாதங்கள் சேர்மினகளே' என்றும் பாடுகிறார். திரிபுரை என்றால் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மும்மலங்களை அழிப்பவள் என்று பொருள். மும்மலங்களை அழித்து ஞானத்தை அருள்பவள் அம்பிகை.

அவள் கங்கை என்னும் சலமகளாக இருக்கிறாள் என திருமூலர் குறிப்பிடுவதற்குக் காரணம், நம் பாவங்களைப் போக்குபவளாக இருக்கிறாள் என்பதால். "செüந்தர்ய லஹரி' யின் 54-ஆவது ஸ்லோகம், "úஸôணோ கங்கா தபந தநயேதி த்ருவமும்' என அம்பிகையைப் போற்றுகிறது. அதாவது, சோணா நதி, கங்கை நதி, யமுனை நதி ஆகியவை அம்பிகையின் கண்களில் பாய்கின்றனவாம். திரிவேணி சங்கமத்தை அம்பிகையின் கண்களில் தரிசிக்கலாம். அவள் அடியவர்களின் பாவத்தைப் போக்கும் கங்கையானவள்.

சூரியனுக்கும் ஒளி கொடுப்பவள் அம்பிகை. "உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்' என உதிக்கின்ற சூரியனை தன் உச்சியில் திலகமாகச் சூடியிருக்கிறாள் அம்பிகை என அபிராமி பட்டர் போற்றுவதைப் போலவே, ஆதிசங்கரர் "மீனாட்சி பஞ்சரத்ன துதி'யில் "உத்யத் பானு சஹஸ்ரகோடி சத்ருஸôம்' எனஅம்பிகை ஆயிரம் கோடி உதிக்கின்ற சூரியனின் பிரகாசத்தை உடையவள் என்கிறார். சூரியனுக்கே வெளிச்சத்தைத் தருகிற அம்பிகை, தன் பக்தர்களின் வாழ்விலும் துன்ப இருளை அகற்றி, ஒளி தருபவளாக இருக்கிறாள் என்கிறது அபிராமி அன்னை பதிகம்.

அம்பாள் அப்படித்தான்... ஒன்றைப் பலவாக ஆக்குபவள். தன்னை சரண்டைந்தோரை வாழ்வில்  மிக உயரத்திற்குச் செல்ல ஆசீர்வதிப்பவள். நம் துன்ப இருளை நீக்கி வாழ்வில் ஒளியேற்றுபவள் அவள். ஏனெனில், ஆயிரம் கோடி  சூரியனின் பிரகாசத்துடன் சூரியனுக்கு ஒளிதருபவளாயிற்றே அவள்..!

- (தொடரும் )

(கட்டுரையாசிரியர்:  இலக்கியச் சொற்பொழிவாளர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com