முருகனுக்கு "அரோகரா!'

சிவபெருமான் ஆணைப்படி, அகத்தியர் பொதிகைக்கு வந்து வாசம் செய்து தமிழ் வளர்த்து வந்தார். இடையில் அகத்தியமுனிவர் கந்தகிரியில் முருகனை வணங்கிடும் எண்ணத்தோடு
முருகனுக்கு "அரோகரா!'

சிவபெருமான் ஆணைப்படி, அகத்தியர் பொதிகைக்கு வந்து வாசம் செய்து தமிழ் வளர்த்து வந்தார். இடையில் அகத்தியமுனிவர் கந்தகிரியில் முருகனை வணங்கிடும் எண்ணத்தோடு சென்றபோது சிவசக்தி சொரூபமாக விளங்கும் சிவமலை, சக்திமலை ஆகிய மலைச்சிகரங்களைக் கண்டு தரிசித்தார். அவற்றை தான் எடுத்துச் சென்று வணங்க தன்னிடம் தரக்கேட்டார். முருகன் முறுவலுடன் அனுமதிக்க, இரண்டு மலைகளையும் பெயர்த்து எடுத்துக் கொண்டு தென்னகம் வரும் வழியில் சுமக்க இயலாமல் திருக்கேதாரத்திற்கு அருகில் பூர்ச்சவனம் என்ற இடத்தில் இறக்கி வைத்து பொதிகைமலை நோக்கிச் சென்றார்.
 இடும்பன் வன சஞ்சாரத்தில் அகத்தியரைக் கண்டான். முருகப்பெருமானை தரிசிக்க விரும்புவதைக் கூறினான். அகத்தியர் , பூர்ச்சவனத்திலிருக்கும் சிவமலை, சக்திமலை பொதிகைக்கு வந்தால் முருகனின் தரிசனம் கிடைக்கும் என்றார்.
 இடும்பனும் இடும்பியும் பூர்ச்சவனம் சென்று அகத்தியர் சொன்னபடி சிவனை வேண்டி தவமிருந்து மந்திரங்களை உச்சரிக்க பிரமதண்டமும் அட்டதிக்கு நாகங்களும் அவன் முன் வந்தன!
 இடும்பன் அந்த நாகங்களை உறியாக்கி இரு மலைகளையும் அதில் வைத்து பிரமதண்டத்துடன் கட்டி, காவடியாக்கி தோள்களில் தூக்கிக் கொண்டு, "அரோகரா! அரோகரா!'' என்று கூவிக்கொண்டு தென்திசை நோக்கி நடந்தான்.
 வழியில் முருகன் குதிரை மேல் வீரனாக வடிவெடுத்து வந்தார். தடமறியாது தவித்துக் கொண்டு இருந்த இடும்பனை திருவாவினன்குடிக்கு அழைத்து வந்து இளைப்பாறிச் செல்லக் கூறினார். இடும்பனும் இளைப்பாறிவிட்டு எழுந்து மீண்டும் காவடியைத் தூக்க முடியவில்லை. சிறுவன் ஒருவன் கையில் ஒரு சிறு தண்டு ஏந்தி சிவகிரி குன்றில் நிற்பதைக்கண்ட இடும்பன் அச்சிறுவனை மலையை விட்டுக் கீழிறங்க அதட்டினான். சிறுவனோ மலை தன்னுடையதென்று உரிமை கொண்டாடினான். சினமடைந்த இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்று, முடியாமல் வீழ்ந்து மூர்ச்சையானான்.
 இடும்பியும், அகத்திய முனிவரும் வந்து இடும்பனுக்காக மன்னிப்பு வேண்ட , அவர்களுக்காக முருகன் மனமிறங்குவது போல், இடும்பனை மீள எழுப்பி முருகன் மயில்மீது அமர்ந்தவாறு அவனுக்குக் காட்சி தந்தார். இடும்பனைப் பார்த்து ""இடும்பா... இந்த மலைகள் இங்கேயே இருக்கட்டும். அகத்தியரும் இங்கு வந்து வழிபடுவார். நீ இங்கேயே என் கணங்களுக்குத் தலைவனாக இருந்து செயல்படு. என்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் வேண்டுதலை கேட்டு என்னிடம் சொல்லுவாய் உன்னைப்போல் காவடி கட்டிக் கொண்டு வந்து முதலில் உன்னை வணங்கி வழிபட்டு, என்னை வந்து வழிபட்ட பின்பே பக்தர்களுக்கு பூரண பலன் கிடைக்கும்!'' என்று கூறி மறைந்தார். அதிலிருந்து பழனிமலைக்கு வரும் காவடிகளை சுமந்து வரும் பக்தர்கள், முதலில் இடும்பனையும் பின் தண்டபாணியையும் வழிபட்டு பலனடைந்தனர்.
 சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கருங்கல் கட்டடமாகக் கட்டப்பட்டிருக்கிறது. மூலவர் இடும்பன் வடக்கு நோக்கி ஜடாமுடியோடு நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இடது தோளில் சிவகிரி, சக்திகிரி ஆகிய இரண்டு மலைக்காவடி தூக்கிக் கொண்டு வலது கையில் அரிவாளும்; பிரம்மதண்டத்தோடு காட்சி தருகிறார்.மேலும் விநாயகர், கோபாலகிருஷ்ணன், கடம்பன், உமாமகேஸ்வரி உடனுறை சிவகுருநாதர், பாலமுருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன.
 சிவன் சந்நிதியில் அருள்மிகு உமா மகேஸ்வரி உடனுறை சிவகுருநாதன் அபயவரத முத்திரைகளுடன் காட்சி தருகிறார். அருள்மிகு பாலமுருகன் மயில் வாகனத்தில் அலங்கார ஆசனத்தில் அமர்ந்த கோலத்தில் அபயவரத முத்திரையுடன் காட்சி தருகிறார்.
 உள்பிரகாரத்தின் வாயுமூலையில் மகாலட்சுமி சந்நிதியும் மகாமண்டபத்தின் ஈசானப்பகுதியில் நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ளன. கோயிலின் எதிர்ப்புறம் கருப்பண சுவாமி சந்நிதியும் அதற்கு எதிரில் கருங்கல்லினால் ஆன தீபஸ்தம்பம், வலதுபுறம் குழந்தை வேலப்பர் சந்நிதியும் அமைந்துள்ளன. அதன் கீழ்பாக்கத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச்சிற்பமாக எழுந்தருளியிருக்கிறார். அருகில் கன்னிமார் சந்நிதியும் உள்ளது. தலவிருட்சம்- கடம்ப மரம்; தீர்த்தம்- இடும்பன் குளம் ஆகும்.
 இத்திருக்கோயிலுக்கு என தனிப்பட்ட திருவிழா எதுவும் இல்லை. பழனி முருகன் கோயில் திருவிழாவுக்கு வரும் மக்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்வர். விவரமறிந்த சுற்றுப்பகுதி மக்கள் முதலில் இடும்பன் கோயிலில் முடிகாணிக்கையை செலுத்தி இடும்பன் குளத்தில் நீராடி முருகனுக்குச் செலுத்தும் காணிக்கையின் பகுதியை இங்கு செலுத்துகின்றனர். அதிலும் தைப்பூசத்துக்கு பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் தங்கள் வழிபாடு மற்றும் பிரார்த்தனையை இந்த கோயிலிலிருந்தே துவங்குகின்றனர்.
 திண்டுக்கல் பழனி நெடுஞ்சாலையில் சிவகிரிபட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து 1/2 கி.மீ. தூரத்திலும்; பழனி ரயில் நிலையத்திலிருந்து 3 கி. மீ. தூரத்திலும்; பழனிமலை அடிவாரத்திலிருந்து 1/2 கி.மீ. தொலைவுக்குள் இடும்பன் திருக்கோயில் உள்ளது.
 தொடர்புக்கு: 96776 35285/ 94888 77919.
 - மா.கெளசல்யா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com