ஏழெழுபது தரம் மன்னிப்பாய்

மன்னிப்பு ஒரு தெய்வ குணம், உயர்ந்தோர் அன்புள்ளவர், தெய்வபக்தியுள்ளவர்கள் மன்னிப்பர், மறந்து விடுவர். மனதில் ஒன்றும் வைக்கமாட்டார்கள்.
ஏழெழுபது தரம் மன்னிப்பாய்

மன்னிப்பு ஒரு தெய்வ குணம், உயர்ந்தோர் அன்புள்ளவர், தெய்வபக்தியுள்ளவர்கள் மன்னிப்பர், மறந்து விடுவர். மனதில் ஒன்றும் வைக்கமாட்டார்கள். விட்டுக்கொடுத்து விடுவர். ஆனால் மனிதர்கள் மன்னிப்பது இல்லை. மனதில் தீராத வைராக்கியம் வைத்து தமக்கு தீங்குச் செய்தவரை பழிவாங்க காத்திருப்பர். சமயம் வரும்போது கொடூரமாக தண்டித்து விடுவர். பல குடும்பங்கள் மன்னியாத குணத்தால் பிரிந்துப் போய் பகைமை பாராட்டி வஞ்சம் தீர்த்துக்கொள்வர்.
 தம் பெற்றோர் தம்மிடம் கடுமையாக நடந்துகொண்ட நிகழ்ச்சிகளை மனதில் வைத்து, வயதான இயலாத நிலையில் உள்ள பெற்றோரை கடுமையாக நடத்தும் பிள்ளைகளும் உண்டு. அன்பின் மிகுதியால் பிள்ளைகள் கெட்டுவிடாதபடி பெற்றோர் கண்டிப்பாக நடத்தினர் என்பதை உளமார நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
 வேதாகமத்தில் மன்னிப்பு குறித்து நல்ல கதையை இயேசு ஆண்டவர் கூறினார். சீடர் பேதுரு இயேசுவிடம், ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாக குற்றம் செய்தால் நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்? ஏழு தரம் மட்டுமே மாத்திரம் அல்ல, ஏழெழுபது தரம் மட்டும் என்று உனக்கு சொல்லுகிறேன் (மத்தேயு 18: 21, 22) என்றார். இதை தொடர்ந்து இயேசு ஓர் உவமை கதையை கூறினார்:
 "ஒரு ராஜா தன் ஊழியக்காரரிடத்தில் கணக்கு பார்க்கத் தொடங்கினார். அப்போது தன்னிடம் பதினாயிரம் தாலந்து (ஒரு கோடி) அளவுக்கு கடன்பட்டிருந்த ஊழியக்காரன் ஒருவனை கொண்டு வந்து நிறுத்தினர். ராஜா கடும் கோபம் கொண்டு கடன்பட்டவனை மிகவும் கடுமையாக தண்டிக்க முனைந்தார். அவன் சொத்துகளையும் மனைவி, பிள்ளைகளையும் விற்று கடனைக் கட்டச் சொன்னார். கடன்பட்டவனோ, தன்மேல் இரக்கம் காட்டும்படியும் தாழ்மையாக வேண்டி நின்றான். அரசனோ, அவன் பரிதாப நிலைக்கண்டு, மனதில் இரக்கம் கொண்டார். அவரின் இரக்கத்தால் மிகவும் பெரிய மன்னிப்பு அவர் மனதில் வந்தது. கடன்பட்டவனை நோக்கி, " உன் கடன் முழுவதும் மன்னித்து விட்டேன். இனி, கடன் கட்டத் தேவையில்லை, சுதந்திரமாகப் போகலாம்' என்றார்.
 கடன்பட்டவன் மிகவும் மகிழ்ந்தான். கடன் மன்னிக்கப்பட்டவனாய் திரும்பக் கட்ட வேண்டியது இல்லை என்று மிக மகிழ்வாய் தன் வீடு நோக்கிப் போனான். வரும் வழியில் தன்னிடம் சில தாலந்து கடன்பட்ட தன்னிடம் வேலைப்பார்க்கும் வேலைக்காரனைக் கண்டான். கடும் கோபம் கொண்டான். கடன்பட்டவனைப் பிடித்து கழுத்தை நெருக்கி தன்னிடம் பட்ட சில தாலந்து (நூறு ரூபாய்) திருப்பிக் கொடுக்க கேட்டான். கடன்பட்டவனோ, சிறிது காலம் தாரும் கடனை கட்டி விடுவேன் என்று மிகவும் கெஞ்சினான். ஆனால் இரக்கமில்லாத அவன் கடன் பெற்றவனை காவலில் போட்டுவித்து அவனை அடித்து கொடுமைப்படுத்தச்செய்தான்.
 இந்த கொடுமையை கண்டவர்கள் ராஜாவிடம் சென்று நடந்ததைக் கூறினர். ராஜாவுக்கோ கடும் கோபம் வந்தது. ஒரு கோடி பணம் மன்னிப்பு பெற்றவன், நூறு பணம் கடன்பட்டவனை மன்னியாமல் மிகக் கடுமையான சிறையில் போட்டானா? அவனை கொண்டு வாருங்கள்... கடனை அவன் கட்ட வேண்டும்; அவன் மனைவி பிள்ளைகள், வீடு, சொத்துகளை விற்று கடன் கட்டப்பட வேண்டும். மன்னியாதவனை சிறையில் போட்டு மிகக் கடுமையாக தண்டிக்கச் செய்தார்'.
 இக்கதையை இயேசு சொல்லி, "மன்னியுங்கள் மன்னிக்கப்படும்' என்றார். நாமும் மன்னிப்போம்; மன்னிப்பு பெறுவோம்.
 - தே. பால் பிரேம்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com