சிவ வழிபாட்டில் உருத்ராட்சம்!

சிவபெருமான் வழிபாட்டில் உருத்ராட்சமும், வில்வ இலையும் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது.
சிவ வழிபாட்டில் உருத்ராட்சம்!

சிவபெருமான் வழிபாட்டில் உருத்ராட்சமும், வில்வ இலையும் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. திரிபுர அசுரர்களை அழித்தபோது சிவபெருமான் கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளிகளே உருத்ராட்சமாக மாறியதாக புராண வரலாறு கூறுகிறது. ருத்ரன் கண்
 களிலிருந்து தோன்றியதால் "ருத்ராக்ஷம்' எனப்படுகிறது.
 இது ருத்ரமணி, தெய்வமணி, சிவமணி, சிரமணி, கண்டிகை, பூதநாசனம், பாவனம், நீலகண்டாக்ஷம், சிவாக்ஷம் என்றும் அழைக்கப்படுகிறது. உருத்ராட்ச காய் ஒரு மரத்திலிருந்து கிடைக்கிறது. இம்மரத்தினை தமிழகத்தில் ஒரு சில கோயில்களில் காணலாம். ஜாவாதீவு, நேபாளம், ஹரித்வார், இந்தோனேஷியா ஆகிய இடங்களில் உருத்ராட்சமரம் வளர்கிறது. மேலும் இமயமலைச்சாரல் பகுதிகளான கங்கோத்ரி, யமுனோத்ரி, ருத்ர பிரயாகை போன்ற இடங்களில் இம்மரம் வளர்வதால் "தேவபூமி' எனச்சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
 உருத்ராட்சத்தில் ஒரு முகம் முதல் 14 முகம் வரை உள்ளது எனவும், அதனை அணிந்தால் உண்டாகும் பலன்கள் பற்றி ஆகமத்திலும், உபநிஷத்களிலும் கூறப்படுகிறது. உருத்ராட்ச மாலையை அணியும் பொழுது என்ன மந்திரம் கூறவேண்டும் என்பதை பத்மபுராணத்திலும், சிவமகாத்மியத்திலும் காணலாம்.
 இதற்கு மருத்துவ குணமும் உண்டு. புற்றுநோய், ரத்த அழுத்தம், தலைவலி போன்ற நோய்களுக்கு மருந்தாகிறது. மன நோய்களுக்கும் நலமளிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. மன அமைதியை அளிக்கிறது.
 உருத்ராட்சத்தை தங்கம், வெள்ளி, தாமிரம், பஞ்ச உலோகம் ஆகியவற்றோடு இணைத்து அணிவதால் பலன் அதிகம் எனக் கூறப்படுகிறது. மனிதனிடம் உள்ள ஒலி அலையை இறைவனிடம் ஒளி அலையாகக் கொண்டு சேர்க்கும் தன்மை ருத்ராட்சத்திற்கு உள்ளதாகக் கூறுகின்றனர்.
 இத்தகைய சிறப்பு வாய்ந்த உருத்ராட்ச மாலையை சைவசமயம் போற்றும் அப்பர் பெருமான், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், சுந்தரர் மற்றும் நாயன்மார்கள் அணிந்திருப்பதை திருக்கோயில்களில் உள்ள சிற்பங்களிலும், செப்புத்திரு மேனிகளிலும் காணலாம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் திருமேனிகளுக்கு பொன்னால் ஆன இழையில் (நூலில்) இணைத்து உருத்ராட்சத்தை அணிவிக்க தானம் அளித்ததை தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.
 சிவபெருமானுக்கு திருக்கோயில்களை எழுப்பி தொண்டு செய்த மன்னர்கள் பலர் உருத்ராட்சத்தினால் ஆன முடியை அணிந்திருந்ததாக செப்பேடுகளும், கல்வெட்டுகளும் கூறுகின்றன. பல்லவ மன்னன் பரமேசுவர்மனும் அவன் மைந்தன் சிவசூடாமணி - ஆகமப்பிரியன் - ரிஷபலாஞ்சனன், சைவசித்தாந்தப்படி நடப்பவன் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் பெற்ற ராஜசிம்ம பல்லவன் உருத்ராட்ச மணிகளால் ஆன சிவலிங்கத்தை முடியில் தரித்தவன் என காஞ்சி கைலாச நாதர் கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன.
 திருவதிகை வீராட்டானம் கோயில் வரலாற்றில் திரிபுர அசுரர்களான மூவரும் சிவபக்தி நிறைந்தவர்கள். தமது தலை மீது எப்பொழுதும் சிவலிங்கத்தை தாங்கியிருப்பவர்கள் என்பதை தஞ்சை கோயில்களில் காணப்படும் சிற்பங்களினால் அறிய முடிகிறது. எனவே இறைவன் அவர்களை அழிக்காமல் இருவரை தமது வாயிற்காவலராகவும் (துவாரபாலகர்கள்), மற்றொருவரை தான் நடனமாடும் பொழுது "குடமுழா' என்னும் இசைக்கருவியை வாசிக்கவும் அருள் செய்ததாக திருமுறைப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

 பல திருக்கோயில்களில் சிவலிங்கத்திற்கும், நடராஜப்பெருமானுக்கும் உருத்திராட்சத்தினால் ஆன மண்டபத்தை அமைத்திருப்பதைக் காணலாம். வேலூர் மாவட்டம், ஆரணி அருகே அவதரித்த மகான் அப்பய்ய தீட்சதர் தனது கழுத்தில் உருத்திராட்ச மாலைகளும், தலையில் சிவலிங்க வடிவம் உள்ள ருத்ராட்ச கீரீடமும் அணிந்து அதன் பெருமையை உணர்த்திய சிறப்பினைக் கொண்டவர் ஆவார். நம்மிடையே வாழ்ந்த காஞ்சி மகா பெரியவர் தனது உடல் முழுவதும் உருத்ராட்சம் அணிந்து அருள் வழங்கியிருக்கிறார்.
 "சிவராத்திரி வழிபாட்டின் போதும், எப்பொழுதும் நன்மை அளிக்கும் உருத்ராட்சத்தை அணிந்து பயன் பெறுவோம்'
 - கி.ஸ்ரீதரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com