சிவாலயம் சிறக்க சிவராத்திரியில் சங்கல்பம்!

ஈசன் வீற்றிருக்கும் இடம் "கயிலாயம்' என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. நம்முன்னோர்கள் தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் குடிக்கொண்டிருக்கும் இறைவனுக்கு

ஈசன் வீற்றிருக்கும் இடம் "கயிலாயம்' என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. நம்முன்னோர்கள் தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் குடிக்கொண்டிருக்கும் இறைவனுக்கு "கயிலாயநாதன்' என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். புனிதமான அந்த திருநாமத்துடன் திகழும் ஒரு பழைமையான சிவாலயம், தற்போது புத்துயிர் பெற்று வருகிறது !
 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் உள்ளது சாக்கை கிராமம். இது திருத்துறைப்பூண்டியிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இவ்வூரில் அமைந்துள்ளதுதான் மன்னர்களால் கட்டப்பட்ட 1000 ஆண்டுக்கு மேல் பழைமையான அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயில்.
 ஒரு காலத்தில் வேதங்களின் பிரிவுகளான "சாகைகள்' தினமும் ஓதப்பட்டு வேதமந்திரங்களின் அதிர்வலைகளால் நிரம்பியிருந்த இடமாக திகழ்ந்ததால் "சாகை' என்ற பெயரிலேயே இக்கிராமம் அழைக்கப்பட்டு, நாளடைவில் சாக்கை என்று வழங்கப்படலாயிற்று. எப்போதும் ஆலயம் விழாக்கோலம் பூண்டிருந்து, வேத விற்பன்னர்கள் நிறைய அளவில் இங்கு வசித்து வந்ததால் வெளியூர் அன்பர்கள் ஆவணி அவிட்டம் நன்னாளன்று இவ்வூருக்கு திரண்டு வந்து பூணூல் மாற்றிக் கொள்ளும் வழக்கமும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், காலப்போக்கில் நிலைமைகள் மாறின. பலர் ஊரிலிருந்து இடம் பெயர்ந்ததால் வழிபாடுகள் குன்றி சரிவர பராமரிக்கப்படாமல் ஆலயம் சிதிலமடைந்து விட்டது.
 சுவாமி, அம்பாள், கணபதி, நந்தி கற்திருமேனிகள் மட்டுமே பின்னத்திலிருந்து தப்பியது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் இறைவனும், இறைவியும் கொட்டகையில் தான் வாசம்! அந்நிலையிலும் இந்த தெய்வீக தம்பதிகளின் அருள் எந்தக் குறையையும் வைக்கவில்லை. ஒவ்வொரு பிரதோஷ நாள்களிலும் விசேஷ பிராத்தனையாக பக்தர்கள் தங்கள் பெயர், நட்சத்திரம் எழுதிய தாளில் "ஓம் நமசிவாய' பஞ்சாட்சர மந்திரத்தை எழுதி நந்திதேவரின் பாதத்தில் வைத்து வழிபடுகின்றனர். இறையருளால் அவர்கள் பிரார்த்தனை பலிதம் ஆகின்றது.
 இந்த ஆலயத்தை புதுப்பித்து பழைய நிலைக்கு கொணர வேண்டும் என்ற தணியாத ஆவலில், ஊர் மக்கள் பக்தர்கள் உதவியுடன் திருப்பணிக்குழு ஒன்று ஏற்படுத்தி ஆலயத்தின் பெயரிலேயே வங்கி கணக்கு தொடங்கி புனாரவர்த்தன வேலைகளைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். மார்ச் மாத இறுதியில் குடமுழுக்கு நடத்த தீர்மானித்துள்ளார்கள். இந்நிலையில் கடைசி கட்ட, கட்டட வேலைகள் நிறைவேற்றுவதில் பொருளாதார ரீதியாக சிரமம் ஏற்பட்டுள்ளது.
 திருப்பணி வேலைகள் நன்கு நிறைவேறி வேதநாயகனின் இவ்வாலய குடமுழுக்கு நன்னீராட்டு விழா இனிது நடைபெற பக்தர்கள் இந்த சிவராத்திரி நந்நாளில் சங்கல்பித்து, திருப்பணியில் பங்குகொண்டு நலம்பெறலாம்.
 தொடர்புக்கு: 85088 76533 / 96292 92864.
 - எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com