பொருநை போற்றுதும்! 81 - டாக்டர் சுதா சேஷய்யன்

இந்தச் செய்தி பரவியதும், நெல்லை நகரம் கொதித்துப் போனது. சில ஆண்டுகளாகத் தொடங்கி, சில மாதங்களாகப் பெருகியிருந்த சுதேசி எண்ணங்கள், சுதேசித் தலைவர்கள் விசாரணைக்
பொருநை போற்றுதும்! 81 - டாக்டர் சுதா சேஷய்யன்

வீரராகவபுர எழுச்சி
 இந்தச் செய்தி பரவியதும், நெல்லை நகரம் கொதித்துப் போனது. சில ஆண்டுகளாகத் தொடங்கி, சில மாதங்களாகப் பெருகியிருந்த சுதேசி எண்ணங்கள், சுதேசித் தலைவர்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்ட செய்தியால் பொங்கிப் பிரவகித்தன.
 13.03.1908 - நெல்லைப் பாலத்திலும் வீரராகவபுரத்திலும் எழுச்சியின் அறிகுறிகள் தென்படலாயின. மக்கள் பலவிதங்களில் தங்களின் எதிர்ப்பையும் சினத்தையும் வெளிக்காட்டினர். தத்தம் அங்காடிகளை மூடிவிட்டுத் தூத்துக்குடியிலிருந்து ரயிலில் புறப்பட்டு வந்தவர்கள், வீரராகவபுரத்தில் குழுமியிருந்தவர்களோடு சேர்ந்தனர். வணிகமும் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. 3000 }க்கும் மேற்பட்டோர், இந்துக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களைப் போராட்டத்திற்கு அழைத்தனர். தடை செய்யமுயன்ற கல்லூரி முதல்வர் சேம்பியன், ஆத்திரமடைந்த மக்களை எதிர்கொள்ளும் திராணியின்றி, பாரி கம்பெனிக்குள் ஓடி ஒளிந்தார். கூட்டம், சி எம் எஸ் கல்லூரிக்குள் புகுந்தது. முதல்வர் ஷாஃப்டர் தடுக்க முயல... சாளரங்களும் அறைகலன்களும் சேதம் கண்டன. பற்பல கட்டடங்களும் இடங்களும் மக்களின் சினத்துக்கு இரையாயின.
 தவித்துப் போன வின்ச், பாளையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் சேமக் (ரிசர்வ்) காவல் படையை வரவழைத்தார். மேலும் கலவரமடைந்த மக்கள், வீரராகவபுரத்திலிருந்த அரசாங்கக் கட்டடங்களின்மீது தங்களின் கோபத்தைக் காட்டினர். நெல்லையின் அணிகலனாக வர்ணிக்கப்பட்டிருந்த நகராட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.
 வெள்ளையரின் வெறித்தனம்
 வின்ச், ஆஷ் ஆகியோரோடு காவல்துறை அதிகாரி ஸ்வீட்டிங் என்பவரும் சேர்ந்துகொள்ள, மூவரும் நேஷனல் எம்போரியம் என்னும் கடைக்குச் சென்றனர். உள்நாட்டுச் சரக்குகளை விற்பனை செய்த இக்கடையில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. கடைச் சிப்பந்தி ஒருவரிடம் என்ன கூட்டம் என்று வின்ச் விசாரிக்க, பால் அவர்களின் விடுதலைக் கொண்டாட்டம் என்று சிப்பந்தி விடையிறுக்க... கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத வின்ச், கையிலிருந்த சாட்டையால் சிப்பந்தியின் முகத்தில் அடித்துக் காயம் ஏற்படுத்தினார்.
 வின்ச்சின் வெறித்தனத்தைக் கண்ட மக்கள் கூட்டம், கல்லெறியத் தொடங்கியது. கூட்டத்தைக் கலையச் சொல்லி ஆஷ் ஆணையிட்டார். மக்கள் மறுத்தனர்.
 இந்த நிலையில்தான் -ஆஷ் சொல்லி வின்ச், அல்லது வின்ச் சொல்லி ஆஷ், எவரோ ஒருவர், அல்லது இருவரும் சேர்ந்து - எப்படியோ துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிடப்பட்டது. அந்த இடத்திலேயே நான்கு அப்பாவிகள் கொல்லப்பட்டனர். தேங்காய் வாங்கவந்தச் சிறுவன் ஒருவன், கையிலெடுத்த தேங்காய் உருண்டுவிட, அதை எடுப்பதற்காகக் குனிந்த நிலையில், ஈவிரக்கமின்றிச் சுடப்பட்டான். குண்டு வைக்க முயன்றான் என்றும் அதனால் அவனைச் சுட்டதாகவும் நிர்வாகம் பொய் சொன்னது.
 தமிழக எழுச்சி
 வீரராகவபுர வீதிகளில் வீறுகொண்ட இந்த எழுச்சியைத் திருநெல்வேலிக் கலகம் என்று பெயர்சூட்டி ஒதுக்கியது பிரிட்டிஷ் அரசாங்கம். தொடர்ந்து வந்த நாட்களில், பவழ ஆலைத் தொழிலாளர்கள், சுதேசித் தலைவர்களின் பெயரால் சத்தியம் செய்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வீரராகவபுரத் தகவல்கள் சென்னையை அடைய, திருநெல்வேலி நிவாரண நிதி என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. சென்னை ஜன சங்கத்தின் சார்பில், பல்வேறு இடங்களில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சுப்பிரமணிய பாரதியாரும் சுரேந்திரநாத் ஆர்யாவும் மக்களை ஒன்றுதிரட்ட முயன்றனர். விழித்துக்கொண்ட வெள்ளை அரசாங்கம், சென்னை மூர்மார்க்கெட்டிலும், மெரீனா கடற்கரையிலும் கூட்டம் போட தடை விதித்தது.
 இதைத் தொடர்ந்துதான், பொதுக் கூட்டம் போட முனைபவர்கள், எழுத்துப்பூர்வமான முன் அனுமதி பெறவேண்டும் என்னும் விதி மதராஸ் மாகாணம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. வின்ச் மீதும் ஆஷ் மீதும் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட எல்லையற்ற வெறுப்புக்கான தொடக்கப் புள்ளியாகவும், ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் சுட்டது உள்ளிட்ட அடுத்த சில ஆண்டுகளின் விடுதலைப் போராட்ட நிகழ்வுகளின் ஆணிவேராகவும், இந்த எழுச்சியே திகழ்ந்தது.
 சமீப காலங்களில்தான், கலகம் என்னும் பெயரைக் கைவிட்டு, திருநெல்வேலி எழுச்சி என்றே இந்நிகழ்வை அழைக்கவேண்டும் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்னனுக்கு வீரராகவராகக் காட்சிகொடுத்த வரதராஜப் பெருமாள், பொருநைப் புதல்வர்களுக்கும் வீரத்தை ஊட்டி எழச் செய்தார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
 (தொடரும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com