பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் (03/01/2020)

நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்? அனைத்து துன்பங்களிலிருந்தும் உங்களை விடுவித்துக்கொள்வதற்கும், என் பிரபு பாண்டுரங்கனின் கருணையைப் பெற்று, அவனை அடைவதற்கும் நான்கு சாதனங்கள் இருக்கும்போது
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் (03/01/2020)

• நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்? அனைத்து துன்பங்களிலிருந்தும் உங்களை விடுவித்துக்கொள்வதற்கும், என் பிரபு பாண்டுரங்கனின் கருணையைப் பெற்று, அவனை அடைவதற்கும் நான்கு சாதனங்கள் இருக்கும்போது நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? 
கங்கா ஸ்நானம், துங்கா பானம், ராம ஸ்மரணம், ரங்க வாசம் என்ற நான்கு சாதனங்கள் இருக்கின்றவே! விட்டலனே உங்களைத் தேடிவருவான்!! அத்தகைய கருணைக் கனிஅமுது என் விட்டலன்...! 
பொருள்: பரம பவித்திரமான கங்கா நதியில் ஸ்நானம் செய்வதாலும், மகத்தான புண்ணிய நதியான துங்கபத்ரா புனித நீரைப் பருகுவதாலும், ஸ்ரீ ராமனை மனதால் பூஜிப்பதாலும், புண்ணிய பூமியான ஸ்ரீ ரங்கத்தில் தனது இறுதிநாள்களிலாவது வாசம் செய்வதாலும், பாவங்கள் அனைத்திலிருந்தும் ஒருவன் விடுபட்டு, பகவான் ஸ்ரீ பாண்டுரங்கனின் திருவடிகளை எளிதில் அடைந்துவிட முடியும்.
- மகான் ஸ்ரீ புரந்தரதாஸர் 
• மனிதன் என்ன என்ன கர்மங்கள் செய்கிறானோ, அந்தக் கர்மங்களின் பலன் அவன் பின்னாலேயே நிற்கின்றன. அவன் வேகமாக ஓடினால் அவையும் அவன் பின்னால் வேகமாக ஓடுகின்றன. அவன் தூங்கினால் அவனுடைய கர்மபலன் தானும் அவன் கூடவே தூங்குகிறது. அவன் நின்றால் அதுவும் கூடவே நிற்கிறது. அவன் நடந்தால் அதுவும் அவன் பின்னால் நடக்கிறது.
• அவன் ஏதாவது வேலை செய்தால், அவனுடைய கர்மபலன் அவனுடன் அங்கேயே இருக்கிறது. எப்பொழுதும் நிழலைப் போல அது அவனைப் பின் தொடர்கிறது.
- மகாபாரதம்
• பிரம்மா ஒருவனுடைய தலையில் எழுதியபடி, ஒருவன் குறைவாகவோ நிறைவாகவோ பொருளைப் பாலைவனத்தில் இருந்தாலும் அடைவான்; அவன் பொன்மலையான மேருவில் இருந்தாலும் அதிகம் அடையமாட்டான். ஆகையால் தைரியமாக இரு.
• பொருளை நாடிக் கோழைத்தனமான நடத்தையை வீணாக கைக்கொள்ளாதே. ஒரு குடமானது ஒரு கிணற்றினாலும் கடலினாலும் சமமாகவே நீரை எடுத்துக்கொள்ளும் என்பதை யோசித்துப் பார்.
- பர்துருஹரியின் நீதி சதகம்
• நீ உன் மனிதர்களைப் பற்றியோ, செல்வம் பற்றியோ, இளமை பற்றியோ தற்பெருமை கொள்ளாதே. எல்லாவற்றையுமே விழுங்கிக்கொண்டிருக்கும் காலம் இவற்றை ஒரு நொடிப்பொழுதில் எடுத்துக் கொண்டுவிடும். உண்மையற்ற இவற்றைத் துச்சமெனத் தள்ளி, பிரம்மத்தை உணர்ந்துகொண்டு அதில் நீ ஐக்கியமாகிவிடு.
- ஆதிசங்கரர் 
• ஒருவன் மூன்று உலகங்களையும் அவற்றில் கிடைக்கும் சுகபோகங்களையும் உலர்ந்த புல்லுக்குச் சமமாக நினைத்து, உள்நோக்கிய மனதுடன் ஞானம் என்ற நெருப்பில் அந்தச் சுகபோக இச்சைகளை எரித்துவிட வேண்டும். அவ்விதம் செய்பவன் மனதின் கற்பனையாகிய பொய்யான மாயத் தோற்றங்களிலிருந்து விடுபடுகிறான்.
- யோகவாஷிட்ட சாரம்
• தினமும் பகவானை தியானம் செய்வது, திருக்கோயிலுக்குச் சென்று, அவனது திவ்ய மங்கள விக்கிரகத் திருமேனியை தரிசிப்பது, பகவானின் புண்ணிய சரித்திரங்களைக் கேட்பது, அவனது திருநாமங்களைப் பாடுவது (திவ்யநாம சங்கீர்த்தனம்), தீர்த்த யாத்திரை தல யாத்திரை செல்வது, துளசி மற்றும் இதர புஷ்ப தோட்டங்கள் அமைத்து, பகவானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வது, பெற்றோர்கள், பெரியோர்கள் ஆகியோரை தினமும் பூஜிப்பது, பிறருக்கு தான் செய்த உதவிகள், தான தர்மங்கள் ஆகியவற்றை மற்றவர்களிடம் கூறாமல் அடக்கத்துடன் இருத்தல், சாத்வீக உணவு, தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தாயாக நினைத்தல் ஆகியவை, வாழ்நாள்களில் துணைநின்று, மரணத்தருவாயிலும் ஒருவனுக்கு மரண வேதனை ஏற்படாமல் பாதுகாக்கும்.
- சமர்த்த ராமதாசர் (சத்ரபதி சிவாஜியின் குரு)
• ஜாதி, குலம், கூட்டம், தர்மம், பெருமை, பலம், குடும்பம், குணம், சாமர்த்தியம் ஆகிய எல்லாம் இருந்தும்கூட பக்தி இல்லாதவன் நீரில்லாத மேகம் போன்றவன்.
- துளசிதாசர் இயற்றிய, "ராமசரித மானஸ்’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com