தாம்பத்யம் பேணும் திவ்ய தம்பதிகள்!

"திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்பது பழமொழி! அதாவது, ஆயிரம்... ஆயிரம் ஆண்டுகளாக பரம்பரை, பரம்பரையாக மாசு படாத புனிதத் தன்மையுடன் அதன் சம்பிரதாயம் செழுமையாகப் பாதுகாக்கப்பட்டு
தாம்பத்யம் பேணும் திவ்ய தம்பதிகள்!

"திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்பது பழமொழி! அதாவது, ஆயிரம்... ஆயிரம் ஆண்டுகளாக பரம்பரை, பரம்பரையாக மாசு படாத புனிதத் தன்மையுடன் அதன் சம்பிரதாயம் செழுமையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது இதன் கருத்து. இதற்கு உறுதுணையாக இருப்பது "கிருஹஸ்தாஸ்ரமம்' என அழைக்கப்படும் இல்லற வாழ்க்கை. இதன் முக்கிய நோக்கமே, தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் வாழ்க்கையில் ஈடுபடுவதாகும்.

இத்தகைய ஒற்றுமையும், அன்யோன்யமும் எந்நாளும் சிறந்து விளங்கிட திருமாலும் திருமகளும் ஒரே திருத்தலத்தில் அமைந்து அருள்புரிகின்றனர்.

தல இருப்பிடம்: பகவானே தனது பரம கருணையால் சுயம்புவாக (ஸ்வயம்வ்யக்தம்) எழுந்தருளி அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தின் பெயர் "மேல் வெண்பாக்கம்!' பல மகான்கள், மகரிஷிகள் மற்றும் அருளாளர்கள் பாதம்பட்ட புண்ணிய பூமி பாலுசெட்டிசத்திரம். இங்குள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் மிகப்பழைமையானதாகும். இத்திருக்கோயில் காஞ்சி ஸ்ரீ சங்கரமடத்தின் உபமடமான ஸ்ரீ உபநிஷத் பிரம்மேந்திர மடத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. தொல்பொருள் ஆய்வின்படி, சுமார் 1700 ஆண்டுகள் பழைமையானதாகும். தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி தாலுக்காவில் உள்ளது.

தலச்சிறப்பு: ஆஞ்சநேய சுவாமி தனக்குரிய பெரிய பிரார்த்தனை நிறைவேற வேண்டி மூன்று மண்டலங்கள் தவம் செய்த இடம். ஆதிசேஷன் தனக்கு ஆற்றும் திவ்ய கைங்கர்யத்தில் மனமகிழ்ந்து அவருக்கு ஓர் ஏற்றம் தர எண்ணிய திருமால், தனது திருமார்பிலேயே கௌஸ்துப மாலையாக அலங்கரிக்க அங்கீகாரம் அளித்த தலம்!

பெருமாள், தாயார் பிரதிஷ்டை சிறப்பு: சூட்சுமங்கள் பல நிறைந்த கருவறையில் தாயாரும், பெருமாளும் ஐக்கிய பாவத்தில், சற்றும் இடைவெளி இல்லாமல், நேர்கோட்டில் எழுந்தருளியிருக்கின்றனர். தாயார் இங்கு பெருமாளின் திருத்தொடையிலே தனது வலது திருக்கையை ஊன்றி ஸ்வதந்திர லட்சுமியாய் (சர்வ சந்தோஷத்துடன்) திருச்சேவை தரும் அற்புதக் கோலம். சாளக்ராம திருமேனி!

ஸ்ரீ சூக்த மந்திரமே இங்கு தாயார் வடிவில், அஷ்டலட்சுமிகளும் ஒருமுகப்பட்டு ஒரே லட்சுமியாய் சேவை சாதிப்பதாக ஐதீகம்! பெருமாளை விட தாயாருக்கு ஏற்றம் என்று சொல்லப்படுகின்றது.

காஞ்சிமகா சுவாமிகள் விஜயம்: மகா சுவாமிகள் இந்த பெருமாள், தாயாரின் பேரழகில் ஈர்க்கப்பட்டு அடிக்கடி இங்கு வந்து தரிசனம் செய்திருக்கிறார். அதுவும் 1957 -ஆம் ஆண்டு மூன்று நாள்கள் இத்திருச்சந்நிதியிலேயே இருந்ததாக இவ்வூர் மக்கள் உவகையுடன் நினைவு கூறுகின்றனர்.

பிரார்த்தனை மற்றும் பரிகாரச் சிறப்பு: இத்தல பெருமாளின் திருநட்சத்திரம் உத்ராடம். பிரதிமாதம் உத்ராட திருநட்சத்திரன்று தகுந்த வேதபண்டிதர்களைக் கொண்டு மிகவும் பவித்ரமான ஸ்ரீலட்சுமி நாராயண நவ கலச ஹோமம் நடைபெறுகின்றது. இந்த ஹோமத்தில் பங்கேற்று அவ்வமயம் நடைபெறும் ஸ்ரீலட்சுமி நாராயண ஹ்ருதய மந்திர பாராயண முடிவில் அளிக்கப்படும் பால் பாயச பிரசாதத்தை அருந்த தாம்பத்ய அன்யோன்யம் ஏற்படுதல், சந்தானப்பேறு வாய்க்கப்படுதல், திருமண வரம் கை கூடுதல் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது கண் கூடு.

நம்பிக்கையுடன் இந்த வைபவத்தில் பக்தர்கள் பல பகுதிகளிலிருந்தும் பங்கேற்கின்றனர். ஆதிசேஷனே பெருமாள் மார்பில் அலங்கரிப்பதால் ராகு, கேது, அங்காரக மற்றும் சர்ப்ப தோஷங்கள் இப்பெருமாளை தரிசிப்பதால் நிவர்த்தியாகின்றது என கூறப்படுகிறது. சுருங்கச் சொன்னால், தங்கள் பார்வையினாலேயே (நேத்ர கடாட்சம்) அனைத்து பலன்களையும் அருளுகின்றார்கள் பெருமாளும், தாயாரும் எனலாம்.

நடைபெறும் திருப்பணிகள்: பல ஆண்டுகளுக்குப் பிறகு சிதிலமடைந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 2006 -ஆம் ஆண்டு முதல் சம்ப்ரோக்ஷண வைபவம் நடைபெற்றது. தற்போது, நூதனமான ஸ்ரீ ராமர், யோக நரசிம்மர், சுதர்சனர், ருக்மாயி சமேத பாண்டுரங்கன், தன்வந்திரி பகவான், யோக ஆஞ்சநேயர், பெரிய திருவடி, தும்பிக்கை அழ்வார் போன்ற தெய்வ மூர்த்தங்களுக்கும்; உடையவர், சுவாமிதேசிகர், பன்னிரு ஆழ்வார் போன்றவர்களுக்கும் சிறு கோயில்களும், சந்நிதிகளும் அமைக்கப்பட்டு துவஜஸ்தம்பமும் நிர்மாணிக்கப்பட உள்ளது. அனைத்து திருப்பணி வேலைகளும் கிராமமக்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் "மேல் வெண்பாக்கம் ஸ்ரீ லட்சுமி நாராயண சாரிடபிள் டிரஸ்ட் (பதிவு)' என்ற அமைப்பின் மூலம் முறைப்படி நடத்தப்படுகின்றது.

நடைபெற உள்ள நிகழ்வுகள்: இத்திருத்தலத்தில் ஜனவரி 20 -பிரதான சந்நிதியின் பாலாலயமும்; துவஜஸ்தம்ப யந்திர பிரதிஷ்டையும் நடைபெற உள்ளது. ஜனவரி 25 - உத்ராட நட்சத்திரத்தன்று நவகலச ஹோமமும்; திருப்பணி முழுமை பெறும் நிலையில், பிப்ரவரி 7- அஷ்டபந்தன மகாசம்ப்ரோக்ஷணமும் சிறப்பாக நடைபெறுகின்றது.

இவ்வாலய புனருத்தாரண கைங்கர்யத்தில் பக்தர்களும், திருமாலடியார்களும் அனைத்து விதத்திலும் பங்கேற்று உதவுவதால் பெருமாளின் அருளைப் பெறலாம்.

இருப்பிடம்: சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் பாலுசெட்டிசத்திரம், தாமலை அடுத்த பனப்பாக்கத்திற்கு அருகில் உள்ளது.

தொடர்புக்கு: 90031 77722 / 93831 45661.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com