ஒரு முகம், ஆறு கரங்களுடன் முருகப் பெருமான்!

முற்காலத்தில் புல்லமங்லம் என்று அழைக்கப்பட்டு தற்போது மருவி இப்போது பில்லமங்கலம் என்றழைக்கப்படுகிறது.  
ஒரு முகம், ஆறு கரங்களுடன் முருகப் பெருமான்!

முற்காலத்தில் புல்லமங்லம் என்று அழைக்கப்பட்டு தற்போது மருவி இப்போது பில்லமங்கலம் என்றழைக்கப்படுகிறது.  இந்த பில்லமங்கலம் என்ற பெயர் மத்திய காலத்தில் சுந்தரபாண்டியபுரம் என்றும் அரசநாராயணப் பெருந்தெரு என்றும் அழைக்கப்பட்டதை பில்லமங்கலம் கல்வெட்டும், நெய்வாசல் அகத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டும் தெரிவிக்கிறது. பெருந்தெரு என்பது நகரத்தார் பெருமக்கள் வாழ்ந்த தெருவிற்கு பெயராகும். அதனால் சுந்தரபாண்டிய புரத்தில் நகரத்தார்கள் பெருமளவில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அறியலாம். 

தென்புறத்தில் ஆகமலீசுவரர், ஆகமேஸ்வரர்} என்ற திருநாமம் உடைய சிவனும், ஆளுடையம்பிகை என்ற திருநாமம் கொண்ட அம்பாள் கோயில் உள்ளது. பெரும்பான்மையான சிவன் கோயில் போல இக்கோயிலும் கிழக்கு பார்த்த கோயிலாகவே காட்சி தருகிறது. கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முன் மண்டபம், கோயில் கருவறை அர்த்த மண்டபத்தோடு சேர்ந்த திருச்சுற்று மண்டபத்தை உடையதாகக் காணப்படுகிறது. 

இக்கோயிலுள்ள அம்மன் கோயில் முன்; மண்டபத்திற்கு வடபுறம் கருவறை அர்த்த மண்டபம் ஆகிய அங்கங்களுடன் முன் மண்டபத்தோடு இணைக்கப்பட்டு தெற்கு பார்த்த நிலையில் உள்ளது. இக்கோயிலைப் பொருத்தவரை கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவைகள் மட்டும் கி.பி.13}ஆம் நூற்றாண்டு பிற்கால பாண்டியர் கலைப்பாணியில் கட்டப்பட்ட கோயிலாகும். கருவறை முதல் மகாமண்டபம் வரை உபானம், ஜகதி, முப்பட்டைக்குமுதம் பட்டி, பட்டிக்குமேல் சுவர், போதிகை, வியாழவரி அல்லது பிரஸ்தரம், பிரஸ்தரத்திற்கு மேல் யாளிவரியும், விமானமும் அமைக்கப்பட்டுள்ளது. 

கருவறையினைச் சுற்றியுள்ள சுற்றுக்கால் மண்டபம், முன் மண்டபம், மதில் சுவர் ஆகியன சுமார் 200ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நகரத்தார் கலைப்பாணியாகும். கருவறையின் தெற்கு தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், மேற்கு தேவகோட்டத்தில் லிங்கோத்பவரும், வடக்கு தேவகோட்டத்தில் பிரம்மாவும் காட்சி தருகின்றனர். கட்டடக்கலையினைப் பொருத்தவரை அதிட்டானம், உபானம், ஜகதி, கண்டம,; முப்பட்டைக்குமுதம் பட்டி, சுவர், போதிகை, வியாழவரி, யாளிவரி, கூரைக்குமேல் விமானம் ஆகியவைகளும் சுவரில் ஆங்காங்கே அரைத்தூண்களும், கும்பபஞ்சரங்களும், சாலைகளும் காணப்படுகின்றன. அரைத்தூண்கள் பரதம் கால்கள், கலசம், குடம், பலகை போன்ற வழக்கமான உறுப்புகளை கொண்டுள்ளன. கருவறையின் தேவகோட்டங்களில் தெற்கில் தட்சீணாமூர்த்தியும் மேற்கு தேவகோட்டத்தில் அண்ணாமலையாரும் (லிங்கோத்பவர்) வடக்கு தேவகோட்டத்தில் பிரம்மாவும் காட்சி தருகின்றனர். சுற்றுக்கால் மண்டபத்தின் அறைகள் உருவாக்கப்பட்டு கன்னமூல கணபதி, விஸ்வநாதர், விசுவேசுவரர்}விசாலாட்சி, சுப்பிரமணியர் சந்நிதிகளும், கருவறையின் வடதுபுறம் சண்டிகேசுவரரும், முன் மண்டபத்தின் வடபுறம் அம்பாளுக்கு தனிச்சந்நிதி கருவறை, அர்த்த மண்டபம் ஆகிய அங்கங்களுடன் தெற்குப் பார்த்த கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. அம்பாளுக்கு இடது புறத்தில் பைரவருக்கு தெற்கு பார்த்த கோயிலாக தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது. தனிசனீஸ்வரர், சூரியன், சந்திரன் உருவங்களும் உள்ளன. நந்தி முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. கோயில் இரண்டாம் பிரகாரம் உள்ளது. 

இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் மூலம்  கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட அரசர்கள் குறித்து தெரிந்து கொள்ள முடிகிறது.  மேலும், கோயில் கட்டுவதற்காக நிலங்களையும், குளங்களையும் விற்றுக் கொடுத்தவர்கள் பற்றியும்,  அந்நிலங்களுக்குரிய வரிகள் நீக்கப்பட்டது குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.  

இக்கோயிலுள்ள முருகனுக்கு ஒரு முகமும், ஆறு கரங்களும் இருப்பது ஒரு தனிச்சிறப்பு.  திருச்செந்தூர், பழனி போன்ற ஆறுபடை வீடுகளுக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து தரிசனம் செய்து  இம்முருகனை வேண்டு
கின்றனர். 

அதைப்போல தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி போன்ற நாட்களில் நிறையபேர் வந்து அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

இத்திருக்கோயிலில் குடிகொண்டுள்ள பைரவர் பெரும் சிறப்புப்பெற்ற வரப்பிரசாதியும், வலிமைமிக்க வழிபடு தெய்வமும் ஆவார். வழிபடும் பக்தர்களுக்கு வேண்டுவன வேண்டியாங்கு அருள்பாலித்து வருகிறார். இந்தச் சிவன் கோயிலுக்கு மேற்கே உள்ள இடிந்துபோன பெருமாள் கோயிலும், மிகவும் தொன்மையானதும் அருள் ஆற்றல் மிக்கதுமாகும். இடிந்து போன பெருமாள் கோயிலில் இருந்த மூலவர் சிலைகளும் இந்த சிவன் கோயிலேயே காணப்படுவது ஒரு பேரதிசயமாகும். 

புதுக்கோட்டை - கீழச்சேவல்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி பில்லமங்கலத்தில் இறங்கவேண்டும்.  மதுரை - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கோயில் அமைந்துள்ளது. தொடர்புக்கு} 9789686817}9443273917

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com