பொருநை போற்றுதும்! -100

உள்ளம் கொள்ளையடித்த கள்ளபிரான் திருட்டுக்கு உடந்தையாகி, திருட்டு வேடம் பூண்டு, உள்ளம் திருடிய பெருமாளுக்குக் "கள்ளப்பிரான்' என்றும் "சோரநாதன்' என்றும் திருநாமங்கள் உண்டாயின. 
பொருநை போற்றுதும்! -100


உள்ளம் கொள்ளையடித்த கள்ளபிரான் திருட்டுக்கு உடந்தையாகி, திருட்டு வேடம் பூண்டு, உள்ளம் திருடிய பெருமாளுக்குக் "கள்ளப்பிரான்' என்றும் "சோரநாதன்' என்றும் திருநாமங்கள் உண்டாயின. 

திருவழுதி வளநாட்டு ஸ்ரீவைகுண்டத்து நாயனார் கள்ளப்பிரான் என்னும் இவர் நிரம்ப அழகானவர். இவரின் சிலாரூபத்தை வடித்த சிற்பிக்கே, இவருடைய அழகு களிப்பைத் தர, அந்தச் சிற்பி அப்படியே கன்னத்தில் கிள்ளி உச்சி மோந்தாராம். கன்னத்துக் கிள்ளல், சின்ன வடுவாகக் கள்ளப்பிரானிடம் தங்கிவிட்டது. இன்றும் இதனைக் காணலாம். 

கள்ளப்பிரானுக்குப் "பால்பாண்டி' என்றும் ஒரு பெயர். வித்தியாசமாக தொனிக்கிறதே! 

காலதூஷனுக்காகத் திருட்டு வேடம் சுமந்த வைகுண்டநாதப் பெருமாளும், இவருடைய கோயிலும் காலப்போக்கில் மண்மேடிட்டன. 

நெல்லை-கொற்கைப் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில், பசு மேய்ப்பவர் வந்து பசுக்கள் இங்குப் பாலைப் பொழிவதாகக் கூற, மன்னர் வந்து, மண்ணைத் தோண்டித் திருப்பணி செய்து, பாலாபிஷேகமும் செய்தாராம். இதனால்,  பாண்டியரால் பாலாபிஷேகம் பெற்றுப் "பால்பாண்டி'யும் ஆனார் கள்ளப்பிரானார். 

இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு - சூரியதேவன் வழிபாடு. சித்திரை 6-ஆம் தேதி, ஐப்பசி 6-ஆம் தேதி - இந்த இரு தினங்களிலும், அதிகாலைச் சூரியனின் பொன்கிரணங்கள், கோபுர வாயில் வழியே உள்புகுந்து, வைகுண்டநாதனுக்கு ஒளி அபிஷேகம் புரிகின்றன. திருக்கோயிலின் கட்டுமான அதிசயம் இது. 

இது மட்டுமில்லை, கோயில் முழுவதும் எழிலார்ந்த சிலைகளும் சிற்பங்களும் கண்களையும் கருத்தையும் கட்டுகின்றன. கல் மேவிய தளம், வண்ண வேறுபாடு கொண்ட பெரிய, சிறிய திருவடித் திருவுருவங்கள், வாமனனாக மாவலியிடம் கைநீட்டித் திரிவிக்கிரமனாகும் உலகளந்தான், அழகுக்கு அழகாகும் மன்மதன் - ரதி, பரசுராமர் போர்ப் பராக்கிரமம், நரம்புகளும் தசைநாண்களும் புலப்படும் நாயக்கர் வடிவங்கள்,  நூறு கால்கள் கொண்ட திருவேங்கடமுடையான் மண்டபம், வீரபத்திரர் - சட்டநாதர் வடிவங்கள், கைமடித்து வாய் பொத்திய அனுமன், பாதுகை அணியாத இலக்குவன், சுக்ரீவனை அரவணைக்கும் இராமன், இவ்வளவு கம்பீரமா? என்று வியக்க வைக்கும் யாளிகள்  - இப்படிப் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.  

குமரகுருபரரின் அவதாரத் தலமான ஸ்ரீவைகுண்டத்தின் இன்னொரு வரலாற்றுப் பெருமை - "கோட்டைப் பிள்ளைமார்!'

ஸ்ரீ வைகுண்டத்தின் வரலாற்றுச் சிறப்புகளில் ஒன்று - "கோட்டைப் பிள்ளைமார்' குடியிருப்பு. 

ஊரின் வடகோடியில் இருந்தது பிள்ளைமார் கோட்டை. பத்தடி உயரத்திற்கு மண் சுவர்கள் அமைக்கப்பட்ட கோட்டை. இந்தக் கோட்டைக்குள், சுமார் 20-30 குடும்பங்கள் வாழ்ந்தன. வேளாளர்களான இவர்கள், கோட்டைப் பிள்ளைமார் என்றழைக்கப்பட்டனர். 

இவர்களைப் பற்றிப் பரவலாக அறியப்படுகிற வரலாறு சுவாரசியமானது. பாண்டிய மன்னர்களுக்கு முடிசூட்டுகிற உரிமை பெற்ற வேளாளப் பெருமக்களாக இவர்கள் இருந்தனர். ஏதோவொரு மனத்தாங்கலால், மன்னர் பரம்பரையோடு இவர்களுக்கு முரண் தோன்றியது. மதுரை, ராமநாதபுரம் பகுதிகளைவிட்டு அகன்று, திருநெல்வேலிப் பகுதிகளை நாடினர். 

இவ்வகையில், ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் குடியேறி, தங்களுக்கென்று கோட்டை கட்டிக் கொண்டு வாழ்ந்தனர். "கோட்டை கட்டி வாழும் வேளாளர்' என்று வரலாறு அழைத்த இவர்களை, ஊர்மக்கள் "கோட்டைப் பிள்ளைமார்' என்றழைத்தனர். 

தங்கள் இனப் பெண்ணைப் பாண்டிய மன்னருக்கு மணம் செய்துகொடுக்க மறுத்ததால் அரச குடும்பத்தோடு மனத்தாங்கல் ஏற்பட்டதென்றும், திருவிதாங்கூர் மஹாராஜாவோடு பிணக்கு கொண்ட எட்டு வீட்டில் பிள்ளைமாரின் கிளையினர் இவர் என்றும் செவிவழிக் கதைகள் உண்டு. 

எப்படியிருந்தாலும், 20- ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை, கோட்டைப் பிள்ளைமாரின் வாழ்க்கை, ஸ்ரீ வைகுண்டத்தின் தனி வரலாறாகவே திகழ்ந்தது. கோட்டைக் குடும்பங்களுக்குள் மட்டுமே திருமணம் நிகழும். கோட்டைக் குடும்பத்துப் பெண்கள், கோட்டையை விட்டு வெளியில் வரமாட்டார்கள். 

கோட்டைப் பிள்ளைமாரைப் பற்றி, தம்முடைய 1958 -ஆம் ஆண்டு நூலில் பதிவு செய்கிறார் வரலாற்றாசிரியரும் தமிழ்ப் பேரறிஞருமான டாக்டர் மா. ராசமாணிக்கனார்: 

கோட்டையுள் வெளி ஆடவர் யாரும் செல்ல அனுமதியில்லை; அரசாங்க ஆடவரும் போதல் இயலாது. ஊர்ப் பெண்கள் கோட்டையுள் செல்லலாம். பட்டணத்துப் பிராமணர் எனப்படுபவரே இவர்களுக்குக் குருமார். அப்பிராமணர் திருமணக் காலத்தில் கோட்டையுள் நுழைவர்; திருமண அறையுள் மணப்பெண்ணுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு திரை இடப்படும். ஒரு பெண் இறப்பின், அப்பெண்ணை யாரும் பார்க்க முடியாதபடி சாக்குப் பையுள் போட்டுத் தைத்து, வடக்கு வாசல் வழியாக அறுநூறு அடி தொலைவிலுள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்து விடுவர். இவர்தம் பணிமக்கள் "கொத்தமார்' எனப்படுவர். இவர்களும் கோட்டைப் பிள்ளைமாருடன் பாண்டிய நாட்டின் வடபகுதியிலிருந்து வந்தவராம். இவர்தம் பெண்கள் கோட்டையுள் வேலை செய்கின்றனர். கொத்தமார் கோட்டைக்கு வெளியில் வாழ்கின்றனர். 

கோட்டைப் பெண்களுக்குக் கோட்டைக் குடும்பங்களிலேயே மணமுடிக்கப்பட்டது. இவர்களுக்குக் கல்வி கற்பிக்க, பெண் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுக் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர். நோய் நொடி வந்தால், மூலிகை மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு இவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். 

(தொடரும்)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com