இளைஞர்களைக் கவர்ந்த விவேகானந்தர்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமை சீடரான சுவாமி விவேகானந்தர் என்று அன்புடன் போற்றப்பட்ட நரேந்திரர், இந்திய ஆன்மிகத் தலைவர்களுள் தலைசிறந்தவராக விளங்கியவர். 
இளைஞர்களைக் கவர்ந்த விவேகானந்தர்


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமை சீடரான சுவாமி விவேகானந்தர் என்று அன்புடன் போற்றப்பட்ட நரேந்திரர், இந்திய ஆன்மிகத் தலைவர்களுள் தலைசிறந்தவராக விளங்கியவர். 

இவரே "ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்' மற்றும் ஸ்ரீ "ராமகிருஷ்ணா மிஷன்' போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். இருண்டு கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கியவர். மக்களிடம் ஆன்மிக ஒளியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டியவர்.

மதம், இன, பாகுபாடுகளை நீக்கி, இந்தியர்களை ஒன்றுபடுத்தப் பாடுபட்டவர். ஆணித்தரமான அவரது வார்த்தைகள் இந்திய இளைஞர்களைத் தட்டி எழுப்பியதென்றால் அது மிகையில்லை. அவரது 118-ஆவது நினைவு தினம் ஜூலை 4-ஆம் நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நாளில் அவரது அறிவுரைகள் சிலவற்றை நினைவு கூர்வோம்: 

என்றும் பொய் சொல்லித் தப்பிக்காதே; உண்மையைச் சொல்லி மாட்டிக்கொண்டாலும் கவலைப்படாதே. பொய் வாழ விடாது; உண்மை உன்னைச் சாக விடாது. உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. 

இதயம் சொல்வதைச் செய். வெற்றியோ  தோல்வியோ அதைத் தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு. பகை, பொறாமை ஆகியவற்றை நீ கைக்கொண்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.  பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. 

அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். உலகபந்தங்களில் இருந்து விடுதலை அளிக்கும்.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல.  அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி, அன்பு, தவம், தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல. 

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! "நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும். 

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.  உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும். சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. 

நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத்  திகழுங்கள்! இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். 

அவர் சொல்லியபடி சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள். இந்தியா விரைவில் பலமிக்க, வளமிக்க, உலகுக்கு வழிகாட்டும் நாடாகத் திகழுமென்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com