பொருநை போற்றுதும்! - 102

பொருநை போற்றுதும்! - 102

​மாயக்கூத்தன் என்னும் பெயர்க்காரணத்தைத் தலபுராணக் கதை தெரிவிக்கிறது. முற்காலத்தில் தடாகவனம் என்றழைக்கப்பட்ட இப்பகுதியில் வாழ்ந்த வேதசாரன் என்பவர், பிள்ளைப்பேறு வேண்டினார்.


மாயக்கூத்தன் என்னும் பெயர்க்காரணத்தைத் தலபுராணக் கதை தெரிவிக்கிறது. முற்காலத்தில் தடாகவனம் என்றழைக்கப்பட்ட இப்பகுதியில் வாழ்ந்த வேதசாரன் என்பவர், பிள்ளைப்பேறு வேண்டினார். அவருக்கும் அவர் மனைவி குமுதவல்லிக்கும் பெண் குழந்தை பிறக்க, "கமலவதி' என்றே பெயர் சூட்டி வளர்த்தனர். திருமணப் பருவம் எய்திய கமலவதி, மானுடரை மணக்கமாட்டேன் என்றும், பாற்கடல்நாதனே தன் மணாளனாகவேண்டும் என்றும்  உறுதிகொண்டாள்.  ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்ட கமலவதியின் உள்ளக்கிடக்கையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அவள் முன் தோன்றிய திருமால், ஆலிங்கனம் செய்து அவளை ஏற்றுக்கொண்டு இங்கேயே தங்கினார். 

இவ்வாறு இருக்கையில், நதியில் நீராடச் சென்ற கமலவதியை, அஸ்மாசுரன் என்னும் அரக்கன் தூக்கிச் சென்று, இமயமலைப் பகுதியில் சிறை வைத்தான். செய்தி அறிந்து கருடன்மீது புறப்பட்ட எம்பிரான்,   கமலவதியை மீட்டுக் கொணர்ந்தார். அவளைச் சிறையில் வைத்துவிட்டு திக்விஜயம் சென்றுவிட்ட அஸ்மாசுரன், ஆத்திரத்தோடு தடாகவனம் அடைந்தான். அவனோடு நடந்த யுத்தத்தில், அவனைக் கீழே தள்ளி, அவன்மீது பெருமாள் நர்த்தனம் ஆடினார். மாயம் செய்தவனை வீழ்த்தி, அவன்மீதே மாயநடனம் ஆடியவர் என்பதால் மாயக்கூத்தன்.  

கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு ஸ்ரீநிவாசன், சோரநாதன்  (சோரன்மீது நாட்டியம் ஆடி வென்றவர்) என்றும் திருநாமங்கள். உற்சவர் மாயக்கூத்தன். கமலவதிக்குக் குளந்தைவல்லி என்று பெயர் ஏற்பட, குளந்தைவல்லி, அலமேலு மங்கை ஆகிய இரண்டுத் தாயார்கள். 
நவதிருப்பதித் தலங்கள் என்பவை பொருநைக் கரையின் சிறப்புகள். 

பொருநையாளின் புகழ்க்கரையில், ஆழ்வார் திருநகரி என்று இப்போது அழைக்கப்படுகிற திருக்குருகூரில், நம்மாழ்வார் அவதரித்தார். இங்கிருந்தபடியே திவ்யதேசங்கள் பலவற்றையும் பாடித் துதித்து மங்களா சாசனம் இட்டார். 

பொருநைக் கரையிலேயே, நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்யதேசங்கள் உள்ளன. ஸ்ரீவைகுண்டத்தையும் ஆழ்வார் திருநகரியையும் ஒட்டி அமைந்துள்ள இவ்வொன்பது  தலங்களுமே, நவ திருப்பதிகள் என்று போற்றப்படுகின்றன. ஸ்ரீ வைகுண்டத்தை முதன்மையாகக் கொண்டு, இவ்வொன்பதையும் சேவிப்பது வழக்கம். 

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் நவகிரகங்களுக்கு முக்கியத்துவம் இல்லையென்றாலும், நவ திருப்பதிகள் ஒன்பதும் நவ கோள்களுக்கான பரிகாரத் தலங்களாகவும் கருதப்படுகின்றன. இவற்றுள் ஆறு தலங்கள் பொருநை வடகரையிலும், மூன்று தலங்கள் தென்கரையிலும் அமைந்துள்ளன. 
பொருநையாளை ஒட்டியபடியே, பொருநைக்குத் தெற்காகச் செல்கிறது திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலை. இந்தச் சாலையிலிருந்து, ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டுப் பாலத்தின்மீது சென்றால், ஆற்றின் வடகரையிலுள்ள ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்துவிடலாம். 

ஸ்ரீ வைகுண்டத்தை முதன்மையாக வைத்துக்கொண்டு, நத்தம் திருவரகுணமங்கை, திருப்புளிங்குடி ஆகிய தலங்களைச் சேவிக்கலாம். தொடர்ந்து ஆயத்துறை, சிவகளை வழியாகப் பெருங்குளம் அடைந்துவிடலாம். ஸ்ரீவைகுண்டம் சூரியத் தலமாகவும், திருவரகுணமங்கை சந்திரத் தலமாகவும், திருப்புளிங்குடி புதன் தலமாகவும், பெருங்குளம் சனித் தலமாகவும் வணங்கப்படுகின்றன. 

பெருங்குளத்திலிருந்து மங்கலக்குறிச்சி வழியாகத் துலைவில்லி மங்கலம் என்றழைக்கப்படுகிற இரட்டைத் திருப்பதிகளை அடைந்தும் விடலாம். 

பொருநையாளின் வடகரையில் ஒரு சந்நிதி; இன்னும் சற்று வடக்காக, ஸ்ரீவைகுண்ட வடகால் கரையில் மற்றொரு சந்நிதி - ஆக, இரண்டு சந்நிதிகளில் பெருமாள் எழுந்தருளியிருப்பதால், இரட்டைத் திருப்பதிகள். நம்மாழ்வாரும் இரண்டு பெருமாள்களையும் மங்களாசாசிக்கிறார். ஆனாலும், திவ்ய தேசக் கணக்கில் (108 திருத்தலங்கள்), இரண்டும் சேர்த்து ஒரு திவ்யதேசமாகவே கணக்கு. துலைவில்லி மங்கலம் என்னும் பெயர் சற்றே வினோதமாகத் தென்படுகிறது இல்லையா? 

பிரமாண்ட புராணத்திலும் பத்ம புராணத்திலும் இத்தலம் பற்றிய தகவல்கள் உள்ளன. ஆத்ரேய சுப்ரபர் என்னும் முனிவர், முழுமையான தவம் செய்ய இடம் தேடினார். எல்லா வகைகளிலும் பொருத்தமான பொருநைக் கரையை அடைந்து, பூமியை உழுது சமன்படுத்த, மண்ணுக்கடியில்  தராசு ஒன்றும் வில் ஒன்றும் கிடைத்தன. அப்புறப்படுத்துவதற்காக அவற்றை எடுத்தபோது, அவை முறையே ஆணாகவும் பெண்ணாகவும் மாறின. ஒன்றும் புரியாமல் சுப்ரபர் விழிக்க, குபேரனிடம் சாபம் பெற்ற தாங்கள், சாப விமோசனம் பெற, சுப்ரபருக்காகக் காத்திருந்ததாகத் தெரிவித்தனர் அந்த வித்யாதர தம்பதியர். துலையும் (துலாக்கோலான தராசு) வில்லியும் (வில்) மங்கலம் (சாப விமோசனம்) பெற்ற இடம் என்பதால் "துலைவில்லி மங்கலம்'. காலப்போக்கில், மக்கள் வழக்கில், தொலைவிலி மங்கலம் என்றாகிவிட்டது. ஒருவகையில் பொருத்தம்தான் - இறைவனின் அருளைப் பெறுவதற்கு வெகு அருகில், தொலைவில்லாமல் இருக்கும் தலம் என்பதால், தொலைவு இலி மங்கலம் எனலாம். 

ஆத்ரேய சுப்ரபர் தம்முடைய யாகத்தைக் குறைவில்லாமல் நிறைவு செய்தார். யாக அவிர்பாகத்தை தேவர்கள் ஏற்றுக்கொண்ட பின், எம்பெருமான் தேவாதிதேவனாக இங்குக் காட்சி கொடுக்க, தேவப்பிரான் என்றே எல்லோரும் கொண்டாடினர். 

மூலவர் தேவப்பிரான், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். 

இந்த தேவப்பிரானை சுப்ரபர் நாள்தோறும் வழிபட்டார். சற்றே எட்டத்தில் இருந்த பொய்கைக்குச் சென்று தாமரை மலர் கொய்துவந்து பூஜித்தார். 

சுப்ரபர் கொணர்ந்த தாமரை மலர்கள்மீது பெருமானுக்கு மயக்கம். இத்தனை அழகான மலர்களை எங்கிருந்து கொண்டு வருகிறார் என்று காண்பதற்காக, ஒருநாள், மலர் கொய்ய சுப்ரபர் சென்றபோது பெருமானும் பின்னாலேயே சென்றாராம்.  தாமரை மலர்களைப் பறித்துக்கொண்டு சுப்ரபர் திரும்ப, ஆசையோடு பெருமான் நிற்பதைக் கண்டு வியந்தாராம். புஷ்ப பூஜையை உகந்து புஷ்பம் இருக்கும் இடத்துக்கே பெருமாள் வந்துவிட்டாரே என்று ஆனந்தித்தார். 

தாமரைக் கண்ணான எம்பெருமான், தாமரை மலர்களைத் தேடி வந்து நின்றதால், அரவிந்தலோசனன் என்றும் செந்தாமரைக்கண்ணன் என்றும் திருநாமம் பெற்றார். அருள்மிகு அரவிந்தலோசனன் சந்நிதி, ஸ்ரீவைகுண்ட அணைக்கட்டிலிருந்து வருகிற வடகால் வாய்க்காலுக்கு அருகில் இருக்கிறது. பெருமாளின் பெயருக்கேற்ப, தாயாரும் அருள்மிகு கருந்தடங்கண்ணி நாச்சியார். 

நவதிருப்பதிகளிலேயே போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாமல், சற்றே காட்டுக்குள் ஒதுங்கினாற்போல் இருப்பவை இரட்டைத் திருப்பதிகள்தாம். இருப்பினும், உபயதாரர்கள் திருப்பணிகளால் தற்போது பொலிவாகவே தோற்றம் தருகின்றன. 

அருள்மிகு தேவப்பிரான் சந்நிதி ராகுத் தலமாகவும் , அருள்மிகு செந்தாமரைக் கண்ணன் சந்நிதி கேதுத் தலமாகவும் திகழ்கின்றன. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com