பொருநை போற்றுதும்! - 103

நவதிருப்பதித் தலங்களில், ஆறு தலங்கள் பொருநையாளின் வடகரையில் இருக்க, மீதமுள்ள மூன்று தலங்கள், தென்கரையில் உள்ளன.
பொருநை போற்றுதும்! - 103


நவதிருப்பதித் தலங்களில், ஆறு தலங்கள் பொருநையாளின் வடகரையில் இருக்க, மீதமுள்ள மூன்று தலங்கள், தென்கரையில் உள்ளன. ஆற்றுப்போக்கின்படி, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தென் திருப்பேரை என்பதுதான் வரிசை என்றாலும், ஆழ்வார் திருநகரியின் பெருஞ் சிறப்பு கருதி, நிறைவாகவே அங்கு செல்வோம்.

வந்த நிதியங்களும் வைத்த மாநிதியும் ஆழ்வார் திருநகரியிலிருந்து சிறிது தொலைவில், சற்றே தென்கிழக்காக இருக்கிறது திருக்கோளூர்.

இந்தத் தலத்தின் பெருமாளுக்கு வெகு அழகான திருநாமம் "வைத்த மாநிதி பெருமாள்'. இதென்ன திருநாமம்?

"பிரமாண்ட புராணம்' இதற்கொரு கதை சொல்கிறது. நவநிதியங்களுக்குக் குபேரன் தலைவனாக இருந்தான். செல்வச் செருக்கு தலைக்கேறியது. சிவனாரை வழிபடுவதற்காகக் கைலாயம் சென்றபோதும், ஒருவகையான செருக்கு மயக்கமிட, உமாதேவியாரையே ஒற்றைக் கண்ணைச் சாய்த்து மயக்கப் பார்வை பார்த்தான். மாற்றான் மனைவியை இவ்வாறு காண்பதா என்று சினம் கொண்ட உமையம்மை, உடனே அவனைச் சபித்தாள். "ஒரு கண் பார்வை போகட்டும் என்றும், உடல் விகாரம் அடையட்டும் என்றும் நிதியங்கள் அகலட்டும்' என்றும் சாபமிட்டாள்.

சாபத்தால் குபேரன் குன்றிப்போக, தலைவனில்லாமல் தவித்த நவநிதியங்கள், பொருநைக் கரையை அடைந்து பெருமாளைத் துதித்தன. அங்கேயே அப்போதே காட்சி கொடுத்த எம்பெருமான், நவநிதியங்களுக்கும் தாமே பாதுகாப்பு கொடுத்து, அங்கேயே பள்ளிகொண்டார்.

நிதியங்களைத் தம்மிடமே வைத்துப் பாதுகாத்ததால், பெருமாளுக்கு "வைத்த மாநிதி' என்னும் சிறப்புத் திருநாமம் உண்டானது.

இதற்கிடையில், தவறுணர்ந்து பரமேஸ்வரரின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினான் குபேரன். உமையன்னையிடமே வேண்டச் சொன்னார் சிவனார். கொடுத்த சாபத்தை எடுக்க முடியாதென்று உரைத்த அன்னை, வேண்டுமானால் பொருநைக் கரை வைத்த மாநிதிப் பெருமாளிடம் சென்று பரிகாரம் தேடச் சொன்னாள்.

குபேரனும் திருக்கோளூர் அடைந்து பெருமாளை வணங்கிப் பணிய, நவநிதியங்களை மொத்தமாகக் கொடுக்க முடியாதென்றும், சிறிதளவே தரமுடியுமென்றும் வைத்த மாநிதியார் அருளினார். குபேரனுக்குக் கொடுப்பதற்காக, மரக்கால் ஒன்றில் செல்வத்தை அளந்தாராம். அந்த மரக்காலைத்தான், இப்போதும் தம்முடைய தலைக்கு வைத்து சயனித்திருக்கிறார்.

கிழக்கு நோக்கிய புஜங்கசயனராகத் திகழும் பெருமாளுக்கு வடமொழியில் "நிஷேபவித்தன்' என்று பெயர். அதாவது, செல்வத்தால் சேவகம் செய்யப்படுபவர்.

திருக்கோளூர் திருத்தலத்தை நிதித்தலம் எனலாம். பெருமாளே நிதியாகவும், தீர்த்தம் நிதித் தீர்த்தமாகவும் இருப்பதால் மட்டுமில்லை - தமிழுக்கும் இலக்கியத்திற்கும் ஆன்மிகத்திற்கும் பற்பல நிதியங்களைத் தந்துள்ள தலம் இது.

பெருமைமிக்க பெண்பிள்ளை ரகசியம் இந்த திவ்யதேசத்தை நம்மாழ்வார் தம்முடைய பாசுரங்களில் மங்களாசாசனம் செய்கிறார். பெண்ணொருத்தி கண்ணனையே தன்னுடைய மணாளனாக வரிக்கிறாள். சாப்பாடு, தூக்கம், சுவை, சுகம் என்று எல்லாமே அவளுக்குக் கண்ணன்தான். ஒருநாள் அவளைக் காணோம். அவளுடைய தாய் இங்குமங்கும் தேடிவிட்டுத் தன் மகள் எங்கே போயிருப்பாள் என்று கூறுகிறாள். "உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் என் மகளுக்குக் கண்ணன்தான்; எனவே, அவனைத் தேடித் திருக்கோளுருக்குப் போயிருப்பாள்' என்று பேசுகிறாள். "திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே' என்பது அந்தத் தாயாகத் தம்மை நிறுத்திக் கொண்டு, நம்மாழ்வார் பாடுவதாகும்.

எம்பெருமானாரான ராமானுஜர் இவ்வூருக்கு வந்தார். ஊரெல்லையில் அவர் காலை நேரம் வரும்போது, தயிர்-மோர் விற்கும் பெண்ணொருத்தி ஊரைவிட்டு வெளியில் சென்று கொண்டிருந்தாள். ""என்னம்மா, எந்த ஊர்க்காரி நீ? காய்கிழங்கு சாப்பிட்டுத் திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே என்று எல்லோரும் எண்ண, புகும் ஊர் உனக்குப் புறப்படும் ஊராயிற்றோ?'' என்று வினவினார். அனைவரும் நாடிவரும் இவ்வூரைவிட்டு நீ ஏன் வெளியில் செல்கிறாய் என்று வினவுவதுதான் அவருடைய எண்ணம்.

அந்தப் பெண் புத்திசாலி. காய்கிழங்கு சாப்பிட்டுத் திண்ணம் இளமான் புகும் ஊர் என்று எம்பெருமானார் கூறியது, அவளுக்கு முக்கியமான சம்பவம் ஒன்றை நினைவூட்டியது. வடதேச யாத்திரை சென்று, காய், கனி, கிழங்குகளைப் புசித்து வந்த மதுரகவியார், ஜோதி ஒன்று தெரிய, அதனையே பின்பற்றி, மீண்டும் இங்கேயே வந்தார் என்பதைத்தான் இப்பெரியவர் குறிக்கிறார் என்றெண்ணிக் கொண்டாள். பெருமைக்குரிய அடியாரையெல்லாம் அழைக்கும் ஊர் இது என்பதைத்தான் சுட்டுகிறார் என்பதைப் புரிந்துகொண்ட அவள், அடியார்கள் பலரின் பெருமைகளையெல்லாம் ஒற்றை வரியில் உரைத்து, அவர்களையெல்லாம் போல் பெருமைக்குரியவள் யானில்லையே என்று சொல்லாமல் சொன்னாள்.

"அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே' என்று தொடங்கி, "குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே' என்று தொடர்ந்து, "துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே' என்று நிறைவு செய்த அப்பெண், கடைசியில் இன்னொன்றும் சொன்னாள் - " நானொரு முயல் புழுக்கை; அது வயலில் இருந்தாலென்ன? வரப்பில் கிடந்தாலென்ன? ஒன்றுக்கும் பயனில்லாத நான், எங்கிருந்தால் என்ன' என்பதுதான் அப்பெண்ணின் வினா.

சாதாரணமாகத் தோற்றம் தந்த அப்பெண், இத்தனை அடியார்களின் சரிதத்தை அறிந்திருந்தது மட்டுமல்லாமல், அன்பும் பணிவும் கொண்ட ஞானியாகத் திகழ்ந்ததைக் கண்ட ராமானுஜர், ""முயல் புழுக்கை வயலில் தான் இருக்கவேண்டும்; அப்போதுதான், உரமாகும்'' என்றாராம். அதாவது, ""பெண்ணே நீ இங்குதான் இருக்க வேண்டும். அப்போதுதான், உன் ஞானத்தால் பின்வரும் சந்ததிகளை வலுப்படுத்தலாம்'' என்று பொருள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com