பொருநை போற்றுதும்! - 104

வேறெங்கும் எவர் வீட்டிலும் உணவருந்தாத ராமானுஜர், அப்பெருமாட்டியின் இல்லம் சென்று உணவருந்தியதாக வரலாறு. 
பொருநை போற்றுதும்! - 104


வேறெங்கும் எவர் வீட்டிலும் உணவருந்தாத ராமானுஜர், அப்பெருமாட்டியின் இல்லம் சென்று உணவருந்தியதாக வரலாறு. 

81 பெருமக்களைக் குறித்து அப்பெருமாட்டி சொன்ன வாசகங்களே, "திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்னும் நூலானது. 81 வரிகள் எனினும், ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு பக்தி  காப்பியமாக மிளிரும். 

மதுரத்தமிழ் தந்த மதுரகவியார் திருக்கோளூரின் பிறிதொரு பெருமை, இது மதுரகவியாழ்வாரின் அவதாரத் தலம் என்பதாகும். நம்மாழ்வாரின் திரு அவதாரத்தைச் சூரியோதயம் என்று குறிக்கிற ஸ்ரீவைஷ்ணவ மரபு, இவரின் அவதாரத்தைச் சூரியோதயத்திற்குச் சற்று முன்னர் 
நிகழும் அருணோதயம் என்று போற்றுகிறது. 

தேறிய மாஞானமுடன் திருக்கோளூரில்
  சித்திரையில் சித்திரை நாள் வந்து தோன்றி
ஆறிய நல்லன்புடனே குருகூர் நம்பிக்கு
  அனவரதம் அந்தரங்க அடிமை செய்து
மாறனையல்லால் என்றும் மறந்தும் தேவு
  மற்று அறியேன் எனும் மதுரகவியே நீ முன் கூறிய
கண்ணி நுண் சிறுத்தாம்பு அதனில் பட்டுக் 
  குலவு பதினொன்றும் எனக்கு உதவு நீயே

-என்று மதுரகவியாழ்வாரின் பெருமையைக் கூறி, அவரின் அருள் வேண்டுவார் ஸ்ரீ சுவாமி தேசிகர். 

திருக்கோளூர் எம்பெருமானான அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாளின் திருநாமத்திற்கும் தமிழ் ஆன்மிக-இலக்கிய உலகிற்கும் வேறு சில தொடர்புகளும் உள்ளன. 

வடநாட்டு யாத்திரை சென்றிருந்த மதுரகவி, அயோத்தியில் தங்கியிருந்த காலை, வானில் பேரொளி ஒன்றைக் கண்டார். அவ்வொளியைப் பின்பற்றி நடந்தார். பற்பல ஊர்களைக் கடந்து, தென் திசைத் திருக்குருகூரிலிருந்து அது வருவதை உணர்ந்தார். குருகூர் அடைந்தார். புளியமரப் பொந்தில், யோக நிலையிலிருந்த நம்மாழ்வாரைக் கண்டு, வினா ஒன்றை எழுப்பிப் பேசச் செய்தார். 

நம்மாழ்வாருடைய பாசுரங்களை மதுரகவியாரே பட்டோலைப் படுத்தியதாகத் தெரிகிறது (அதாவது, ஓலையிலோ துணியிலோ பதித்து வைத்தல்). 

நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர் (உலக வாழ்வை நிறைவு செய்தபின்னர்), நம்மாழ்வாரின் திருவுருவச் சிலை ஒன்றைத் தாங்கிக் கொண்டு, பற்பல ஊர்களுக்கும் சென்று அவரின் பெருமையை  எடுத்துக்கூற மதுரகவியார் விழைந்ததாகவும் தெரிகிறது. இதுபற்றிச் செவிவழிக் கதையொன்றும் உண்டு. 

வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார், திருநகரிப் பெருமாள் வந்தார், திருவழுதிவளநாடர் வந்தார், திருக்குருகூர் நம்பி வந்தார், காரிமாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார் என்றெல்லாம் நம்மாழ்வாருக்குப் பல விருதுகளைப் பாடிக்கொண்டே, மதுரை மாநகருக்குள் புகுந்தார் மதுரகவியார். 

மதுரைப் புலவர்களோ, ஒருவரின் பாடல்களைச் சங்கப் பலகையில் ஏற்றாமல், அவருக்கு விருதுகளை வழங்கமாட்டார்கள். மதுரகவியார், நம்மாழ்வாருக்கு வழங்கிய விருதுகளை அவர்கள் ஏற்கவில்லை. சங்கப்பலகையில் நம்மாழ்வார் பாசுரங்களை இடவேண்டும் என்று கட்டளை விதித்தார்கள். 

கண்ணன் கழலினை நண்ணும் 
     மனமுடையீர்
எண்ணும் திருநாமம் 
       திண்ணம் நாரணமே 

என்னும் திருவாய்மொழிப் பாசுரத்தைப் பலகையில் இட்டார் மதுரகவி. பாசுரத்தைப் பலகை ஏற்றுக்கொள்ள, புலவர் பெருமக்களும் நம்மாழ்வாரின் பெருமையைப் புரிந்துகொண்டனர். 

தம்முடைய ஆசானான நம்மாழ்வர்மீது மதுரகவியாழ்வார் வைத்த அன்பு, ஆசார்ய பக்திக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். 

இவர் அருளிச்செய்த பதிகம், "கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்று தொடங்குகிறது. பதினொரு பாசுரங்கள் கொண்ட இப்பதிகம், திருமாலின் பெருமையைப் பாடாமல், நம்மாழ்வாரின் பெருமையைப் போற்றுகிறது. "தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே' 
என்பதுதான் மதுரகவியாரின் தன்னிலை விளக்கம். 

வைத்த மாநிதியும் தமிழ் மாநிதியும்: திருக்கோளூர் எம்பெருமானான அருள்மிகு வைத்தமாநிதிப் பெருமாளின் திருநாமத்திற்கும் தமிழ் ஆன்மிக-இலக்கிய உலகிற்கும் வேறு சில தொடர்புகளும் உள்ளன. 

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்,  பெண்மணி ஒருவர் எழுதிய "இந்திரமோஹனா' என்னும் நாடகம், தமிழ்நாட்டில் பிரபலம் அடைந்தது. அப்போதைய நிலையில் தாமே நேரடியாக எழுதமுடியாத இவர், தம்முடைய 
தோழியிடம் கூறி அந்நாடகத்தை எழுதச் செய்தார். 

இந்த நாடகம் பெற்ற வெற்றி, பிற்காலங்களில் பல்வேறு நாடகங்களுக்கும் புதினங்களுக்கும் சிறுகதைகளுக்கும் வழிவகுத்தது. தாமே எழுதத் தொடங்கினார். 

"ஜகன்மோஹினி' என்னும் இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டு, இந்த இதழிலேயே தம்முடைய முதல் புதினமான வைதேஹி என்பதனைத் தொடராகக் கொடுத்தார். தீரர் சத்தியமூர்த்தியுடன் சுதந்திரப் போராட்டக் கூட்டங்களில் பங்கேற்றார். இளமையிலேயே திருவாய்மொழியிலும் பிரபந்தப் பாசுரங்களிலும் ஈடுபாடு. அவற்றை நன்கு பாடவும் செய்தார்.  இசை ஆர்வம் மிக்க இவருக்காகத்தான், பாரதியார் "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்னும் எழுச்சிப் பாடலை இயற்றியதாகச் சொல்லப்படுகிறது. 

இவ்வளவெல்லாம் செய்த இந்தப் பெண்மணி யார்? இவருக்கும் திருக்கோளூருக்கும் என்ன தொடர்பு? 

அக்கால வழக்கப்படி தம்முடைய ஐந்தாவது வயதில், ஒன்பது வயது பார்த்தசாரதியை மணந்த இப்பெண்மணி, கணவரின் குடும்பப் பெயரைத் தமது தலைப்பெழுத்துகளாகக் கொண்டார். இதனால், வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள் ஆனார். செல்லமாக, வை. மு. கோ. என்றுஅழைக்கப்பட்டார்.  

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com