என்னைப் பெற்ற தாயார்!

திருமாலுக்கும் திருமகளுக்கும் சிறு வாய்ப்பேச்சு- கருத்து முரண்பாடாகி பிரணய கலகம் என்னும் ஊடல் உண்டானது.
என்னைப் பெற்ற தாயார்!

திருமாலுக்கும் திருமகளுக்கும் சிறு வாய்ப்பேச்சு- கருத்து முரண்பாடாகி பிரணய கலகம் என்னும் ஊடல் உண்டானது. திருமகள் திருமாலை விட்டுத் தனித்து தொண்டை நாட்டில் வருண புஷ்கரணி கரைக்கு வந்தாள். அங்கு தயங்கி நின்ற இலக்குமியைத் தேடிவந்த வருணன் தொழுது வணங்கினான். "இந்த உலகத்தை தாயாகக் காத்து வரும் உங்களுக்கு, இவ்வுலக உயிர்களில் ஒருவனான எனக்கும் நீங்கள் என்னைப் பெற்ற தாயே ஆவீர்கள். நீங்கள்விரும்பும் வரையில் இங்கிருந்து அகலாமல் இங்கே அமையும் பர்ணசாலையில் தங்க வேண்டும்' என வேண்டினான்.

இலக்குமி சமுத்திர ராஜனான வருணனிடம் "தந்தையே! காமாட்சி மாங்காட்டில் ஒரு நிலை வேண்டி கடுந்தவம் புரிகிறாள். நானும் ஏதோ ஒரு தோஷம் காரணமாக இங்கு வந்து தவம் புரிந்து நாராயணனைக் கரம்பிடிக்க எண்ணுகிறேன். அதற்காக நான் தவம் செய்ய இந்த பர்ணசாலையைப் பயன்படுத்திக் கொள்ள எனக்கு அனுமதி வேண்டும்' என்று வேண்டினாள்.

ருணராஜனும் "இவ்வுலகே உங்களுடையது எனும்போது இந்த பர்ணசாலை அமைந்துள்ள இடமும், அதில் உள்ள உங்கள் உயிராகிய நானும் அனைத்தும் உங்களுக்கே சொந்தம். இதில் எங்களிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்கள் தவத்தைத் தொடருங்கள்' எனத் தெரிவித்தார்.

இலக்குமி வந்து நின்ற அந்த இடம் - திரு நின்றதால் "திருநின்றவூர்' எனவும் அழைக்கப்பட அவளது திருவடி பட்டதால் வளம் ஏற்பட்டது. பசுமையும் செல்வமும் பலவகையில் செழித்தோங்கியது, பூரணப் பொலிவுடன் விளங்கியது.

இலக்குமி தவம் செய்யும் இடத்தையறிந்த ஆதிசேஷன், குபேரன், சுக்கிரன், சுதர்சனர் ஆகியோர் தாயாரை தரிசனம் செய்ய அந்த தலத்திற்கு வந்து விட்டனர். தாயார் தவத்தில் இருந்த காரணத்தால் அவர்களும் இங்கேயே தங்கி விட்டனர்.

தவமுடிவில் இலக்குமி நின்ற இடத்தை நோக்கி ஒரு விமானத்தில் சர்வ ஆபரணங்கள் கொண்டவராக திருமால் சூரிய கோடி பிரகாசத்துடன் வந்து இறங்கினார்.

இத்தலத்தில் தவம் செய்ய வந்து நின்ற இலக்குமி திருமாலை ஸ்ரீநிவாச விமானத்தில் கரம்பிடித்து பக்தர்களுக்குக் காட்சி தந்து உலக உயிர்களை உய்விக்கும் பணியை மேற்கொண்டார். திருமாலும் திருமகளும் நின்ற-வூர், ஆவடி-திருவள்ளூர் புகைவண்டி மார்க்கத்தில் இருக்கும் "திருநின்றவூர்' ஆகும்.

இலக்குமி பாற்கடலில் இருந்து உதித்தவள். அதனால் சமுத்திரராஜன் அவளுக்குத் தந்தையானார். அந்த சமுத்திரராஜனே வந்து "தாயே!' என இலக்குமியை அழைத்ததால் இவ்வூரில் குடிகொண்டுள்ள தனிக்கோயில் திருமகளுக்கு "என்னைப் பெற்ற தாயார்' என்ற திருப்பெயர் வழங்குவதாயிற்று.

திருமகளைக் கரம்பிடிக்க வந்த திருமால் இங்கேயே ஸ்ரீநிவாச விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளிப்பதால் "பக்தவத்சலன்' எனவும் பக்தர்கள் இவரைப் பிரியாமல் வணங்குவதால் "பத்தராவி பெருமாள்' எனவும் வணங்கப்படுகிறார்.

"நின்றவூர் நித்திலத்தொத்து' என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநின்றவூர், இலக்குமி நித்தியவாசம் செய்யும் ஊராகும்.

திருமங்கையாழ்வார் வந்தபோது தரிசனம் செய்ய முடியாமல் சென்றுவிட்டார். பிறகு உண்மையை பெருமாளுக்கு எடுத்துச் சொல்லி "திருமங்கையாழ்வாரிடம் சென்று பாசுரம் பெற்று வருக!' எனக்கூற அதற்குள் திருக்கடல்மல்லை சென்ற திருமங்கையாழ்வார்க்கு அங்கு சென்று காட்சி கொடுக்க, "நின்றவூர் நித்திலத் தொத்தினை கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே' என்று மங்களாசாசனம் செய்தார் பெருமாள். திருநின்றவூர் திரும்பிவிட தாயார் "ஒரு பாசுரம் தான் முடிந்ததா?' எனக் கேட்க மீண்டும் மங்கை மன்னனைக் காணப் போனார் பரிப்பெருமாள். திருமால் திருக்கண்ணமங்கை சென்றுவிட்டார். அங்கும் திருநின்றவூர் பெருமாளை "நான் கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே' என பெரிய திருமொழியில் பாடி அருளியுள்ளார்.

திருமாலுக்கு இலக்குமி அருகிருந்து வழிகாட்ட பங்குனி உத்திரத்தன்று பக்தவத்சலன் தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி சேவை சாதிக்கும் திருத்தலம் திருநின்றவூர்.

இத்தலத்தில் முதன்முதலாக தவம் செய்ய வந்து நின்ற மகாலட்சுமி தன் தவம் நிறைந்து மீண்டும் திருமாலைக் கண்டு மீளவும் கைப்பிடித்த நாள் "வரலட்சுமி நோன்பு தினமாகும் எனக் கூறப்படுகிறது. வரலட்சுமி நோன்பை வீட்டில் கடைப்பிடிப்போர் இலக்குமிக்கு என எடுத்து வைக்கும் புடவை முதல் அனைத்தையும் கொண்டுவந்து பின்பொரு வெள்ளிக்கிழமையில் சமர்ப்பிக்கும் வழக்கம் இத்திருக்கோயிலில் உள்ளது. குடும்பத்தில் நலம் உண்டாகவும், குழந்தைகள் சிறக்கவும், பிரிந்த தம்பதியர் கூடவும், வேண்டும் செல்வம் கிடைக்கவும் என்னைப் பெற்ற தாயாரை வேண்டி வீட்டில் பூஜை செய்து தங்களது காணிக்கைகளை கொண்டுவந்து செலுத்தும் பழக்கம் உள்ள திருக்கோயில் ஆகும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயாரை தரிசனம் செய்ய சுக்கிரன் திருக்கோயிலுக்கு வருவதால் "சுக்கிர சேத்திரம்' எனவும் பெüர்ணமியில் ஆதிசேஷன் வந்து தாயாரை ஆலவட்டம் வீசி ஆராதிப்பதும் ஸ்ரீசுதர்சனர் தன் சக்திகள் அனைத்தையும் தாயார் மூலம் பக்தர்களுக்கு அருளுவதும், இங்கு வணங்குவதால் குபேரன் இழந்த பலனைப் பெற்றதுபோல் பலன்பெறவும், சுக்கிர அனுக்கிரகமும் அனைத்து நலன்களும் வருவதால் தாயாரையும் பெருமாளையும் வணங்க வெள்ளி, சனிக்கிழமை நவராத்திரி பெüர்ணமி நாள்கள் மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி வரக்கூடிய தினங்கள் ஆகியவை பிரதானமாக உள்ளன.

இங்கு எழுந்தருளியுள்ள தாயார் அன்பே உருவானவள் உலகனைத்தும் அரவணைத்துக் காப்பவள் ஆதலால் "என்னைப் பெற்ற தாயார்' என்றே அழைக்கப்படுகிறார். எதிர்வரும் வரலட்சுமி நோன்பு அன்றோ அல்லது வேறு ஏதேனும் வெள்ளிக்கிழமைகளிலும் தாயாரை தரிசனம் செய்து அனைத்து நலன்களும் பெறுவோம்.

இன்று (ஜூலை 31-ஆம் தேதி) வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பாகும்.

மேலும் விவரங்களுக்கு: 04426390434; 9840192735.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com