ஜெகம் புகழும் ஜெனகம்மா!

"மாரி இல்லா ஊர் மண்மேடு' என்ற பழமொழிக்கேற்ப தமிழகம் முழுவதும் ஏறக்குறைய அனைத்து ஊர்களிலும் விநாயகருக்கு அடுத்தபடியாக கோயில் கொண்டு விளங்கும் தெய்வம் மாரியம்மன்.
ஜெகம் புகழும் ஜெனகம்மா!

"மாரி இல்லா ஊர் மண்மேடு' என்ற பழமொழிக்கேற்ப தமிழகம் முழுவதும் ஏறக்குறைய அனைத்து ஊர்களிலும் விநாயகருக்கு அடுத்தபடியாக கோயில் கொண்டு விளங்கும் தெய்வம் மாரியம்மன். "உலகத்து நாயகி' என்றும், "தேச முத்துமாரி' என்றும் மாரியம்மனைப் போற்றி "அவளைச் சரணடைந்தால் எல்லா வளங்களையும் பெறலாம்' என்கிறார் பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி. சிறப்பு மிக்க சக்தி வாய்ந்த மாரியம்மன் திருக்கோயில்களில் ஒன்று தான், வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்க்கரையில் உள்ள சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில். மதுரை மாவட்டத்தில் மதுரையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ளது.

தல வரலாறு: தனது தந்தை ஜமதக்னி முனிவர் கட்டளைப்படி, தாய் ரேணுகா தேவியின் சிரம் கொய்த பரசுராமர், பின் தந்தையிடம் தாயை உயிர்ப்பித்துக் கொடுக்கும்படி வரமாகக் கேட்கின்றார்.

ஜமதக்னி முனிவர் மந்திரித்த கமண்டல நீரைத் தர, அதைப் பெற்றுக் கொண்ட பரசுராமர் வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை அங்கு கிடந்த வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்டவைத்துத் தண்ணீரைத் தெளிக்க உயிர் பெற்றாள் ரேணுகா.

ஆனால் உடல் மாறியதால் அந்த உயிர் அரக்கி ஆகின்றது. அரக்கியின் சினம் அதிகரிக்கின்றது. அரக்கியை அடக்கும் பொருட்டு இத்தலத்தில் அமைதியின் வடிவமாக மாரி எழுந்தருளி அருள்பாலிப்பதாக வரலாறு கூறப்படுகின்றது.

இதன் பொருட்டு இவ்வாலயத்தில் ஒரே கருவறையில் இரண்டு தெய்வத்திருமேனிகளாக, மாரியம்மனுக்கு பின்புறம் "சந்தன மாரி' என்ற பெயரில் நின்ற நிலையில் ரேணுகாதேவியும் காட்சி தருவது சிறப்பு. இந்த மாரியம்மனை ஜனக மகாராஜா வழிபட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு.

ஆலய அமைப்பு: ஐந்து நிலை ராஜகோபுரம், மகா மண்டபம், முன்மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. மகா மண்டபத்தில் பலி பீடம், கொடிமரம் அடுத்து முடிவில் துவார பாலிகையர்களுக்கு இருபுறமும் விநாயகரும், முருகரும் சந்நிதி கொண்டுள்ளனர். கிழக்கு பார்த்த கருவறையில் ஜெனகை மாரியம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக புன்னகை ததும்பும் வதனத்துடன் அருள்பாலிக்கின்றாள். மீண்டும் மீண்டும் தரிசிக்கும் உணர்வை ஏற்படுத்தும். அற்புத சிற்ப வேலைப்பாடுகளுடன் உயரமான கருவறை விமானம் ஆலயத்தை அலங்கரிக்கின்றது.

மூலவர் சந்நிதிக்கு பின்புறம் வாயு மூலையில் சுதை ரூபத்தில் அருள் பாலிக்கின்றாள் அன்னை நாகாத்தம்மன். ஆலயச் சுற்றில் சமயச் சொற்பொழிவு மற்றும் அன்னதானக் கூடம், தீச்சட்டி தொட்டி, பொங்கல் மண்டபம் போன்றவற்றைக் காணலாம். மொத்தத்தில் சீராகப் பராமரிக்கப்படும் சிறிய ஆலயம் என்று கூறலாம்.

அம்மனின் சக்தி: இவ்வூரைச் சுற்றியுள்ள 48 கிராமங்களுக்கும் குலதெய்வமாக இவ்வன்னை விளங்குகிறாள். அம்மை நோய்க்கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு ஈரத்துணியோடு அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் மருத்துவக் குணம் மிக்க அபூர்வ தீர்த்தத்தை (வேப்பிலை மற்றும் மூலிகைக் கலவைகளால் ஆனது) அருந்த அம்மை நோய் அகலுகிறது. குழந்தை பாக்கியம், திருமணப் பேறு ஆகியவற்றுக்காகவும், கை, கால் ஊனம் மற்ற உடல் குறைபாடுகள், பிணி பீடை ஆகியன விலகவும் இத்தலத்திற்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். விவசாய செழிப்பு, தொழில் விருத்தி, கல்வி மேம்படுதல் போன்ற பிரார்த்தனைகளும் இத்தலத்தில் நிறைவேறுகின்றன.

நேர்த்திக்கடன்: உருவம் செய்து தொட்டில் கட்டுவது, கரும்புத் தொட்டில் கட்டுவது, விவசாய தானியங்களை கொண்டு வந்து கொட்டுவது, தீச்சட்டி, அலகு எடுத்தல், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல், பூக்குழி இறங்குதல், பொங்கல் வைத்தல், முத்துச் சொரிதல் (ஆமணக்கு விதைகளைப் போடுதல்), முடி காணிக்கை, மா விளக்கு காணிக்கை, ஆயிரங்கண் பானை செலுத்துதல், பால் குடம் எடுத்தல், ஆடுமாடு சேவல்கள் காணிக்கை செலுத்துதல் போன்றவை இத்தலத்தின் புகழ் பெற்ற நேர்த்திக் கடன்கள்.

வைகாசி பெருந்திருவிழா: இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாக்களில் ஆண்டு தோறும் வைகாசியில் 17 நாட்கள் நடக்கும் பெருந்திருவிழா மிக முக்கியமானதாகும். பொதுவாக வைகாசி அமாவாசைக்குப் பிறகு வரும் திங்கள்கிழமையன்று கொடியேற்றுவதுடன் துவங்கும் இவ்விழாவில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பர்.

ஆலயத் தொடர்பிற்கு: இவ்வாலயத்தில் கூடிய விரைவில் திருப்பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தகவல்களுக்கு: 9944793736 மற்றும் 6381578785.

மகாமாரியம்மனை தரிசிப்போம், மங்கள வாழ்வினைப் பெறுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com