ஸ்ரீசக்கரபாணி: ஒரே தனிக்கோயில்

பாதாளத்திலிருந்த ஜலந்தராசுரனை அழிப்பதற்காக ஸ்ரீசாரங்கபாணி தமது சக்கராயுதத்தினை அனுப்பினார்.
ஸ்ரீசக்கரபாணி: ஒரே தனிக்கோயில்


பாதாளத்திலிருந்த ஜலந்தராசுரனை அழிப்பதற்காக ஸ்ரீசாரங்கபாணி தமது சக்கராயுதத்தினை அனுப்பினார். திருமாலின் பணி முடித்து காவிரியின் நடுவில் பூமியைப் பிளந்து கொண்டு சக்கராயுதம் வெளிக் கிளம்பியது. பிரம்மா மகா யாகத்தை முடித்து, குடந்தை காவிரி சக்கரப்படித்துறையில் புண்ணிய நீராடல் (அவாப்ருத ஸ்நானம்) செய்து எழும்போது அவரது திருக்கரத்தை சக்கரம் வந்தடைந்தது. மகிழ்ந்த பிரம்மதேவனும் ஸ்ரீ சுதர்சனச் சக்கரத்தை அதே காவிரிக்கரையில் நிறுவி பூசித்தார்.

அது அங்கு மிகுந்த ஒளியுடன் ஒளிர்ந்தது. ஸ்ரீசுதர்சனச் சக்கரத்தின் ஒளி சூரியனின் தன்னொளியை மேலும் கூட்டியது. சக்கரம் ஆதவனின் ஒளியைத் தன்னொளியில் அடக்கி சூரியனின் அகந்தையை நீக்க பலமும் குறைந்தவனானான். தேவர்கள், சக்கராயுதத்தின் ஒளியில் சூரியன் ஒளியை இழந்து, இருள் கவிழ்ந்துள்ள உலகைக் காக்க வேண்டினர்.

திருமால் சூரியன் தன்னொளிக்காக ஸ்ரீசுதர்சனத்தை சரணடையக் கூறினார். வைகாசி மாத பெளர்ணமி திதியில் ஸ்ரீசுதர்சன சக்கரத்திலிருந்து ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு திருக்கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும், அருட்காட்சியளித்து ஆதவனுக்கு ஒளியருளினார். மகிழ்ந்த சூரியன் ஸ்ரீ சக்கரபாணியை 13 ஸ்லோகங்களால் போற்றித் துதித்தார்.

"பாஸ்கர úக்ஷத்திரம்' எனத் தன் பெயரால் இத்தலம் அழைக்கப்பட வரம் பெற்ற சூரியன், ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு புது திருக்கோயில் அமைத்து வழிபாடு செய்தான். சூரியன் வைகாசி மாதத்தில் கொடியேற்றி நாராயணனால் உபதேசிக்கப்பட்ட பாஞ்சராத்ர ஆகமப்படி உற்சவமும் செய்தான். ஸ்ரீசுதர்சன சக்கரம் காவிரியில் காட்சியளித்த இடம் "சக்கர தீர்த்தம்' என்றும் "சக்கர படித்துறை' என்றும் வழங்கப்படுகிறது. 64 சர்க்கங்களைக் கொண்ட கும்பகோண ஷேத்திர மகாத்மியத்தில் 56 முதல் 61 வரையிலான பகுதிகளில் இவ்வரலாறு குறிக்கப்படுகிறது.

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முடிவில் உள்ள சுலோகத்தில், ஸ்ரீசக்கரபாணியை "ரதாங்கபாணி' (சக்கராயுதத்தை கையில் ஏந்தியவர்) என்று குறிப்பிடுகிறது.

தஞ்சை மன்னர் சரபோஜியின் மகளுக்கு ஏற்பட்ட உடல் நோய் நீங்க இங்கு வந்து வழிபட்டு நோய் நீங்கி அவரும், மகளும் சக்கரபாணியை நித்ய வழிபாடு செய்ய, இருவரது திருவுருவச் சிலைகளையும் சந்நிதியில் இடம் பெறச் செய்த வரலாறு உள்ளது .

சக்கரபாணி சுவாமியை சூரியன், பிரம்மா, அகிர்புத்ரி மஹரிஷி, அக்னி பகவான், அஷ்டதிக்கு பாலகர்கள் முதலியோர் வணங்கி அருள் பெற்றனர். முக்கண் முதல்வனாக இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசக்கரபாணிக்கு செவ்வரளி, செம்பருத்தி, துளசி, குங்கும அர்ச்சனையுடன் வில்வம் மற்றும் வன்னி இலைகள் கொண்டும் அர்ச்சனைகள் நடைபெறுகின்றன.

வேதாரண்யத்து சூரியபந்து அந்தணன் தம் தந்தையின் அஸ்தியைக் கலசத்திலிட்டு கங்கையில் கரைக்க சீடனுடன் கும்பகோணத்தை அடைந்தார். சக்கரப்படித்துறையில் நித்திய கர்மா செய்ய அஸ்தி குடத்தைச் சீடனிடம் விட்டுச் சென்றார்.

அவன் அதிபசியால் உண்ண ஏதேனும் கிடைக்குமென்று அஸ்தி குடத்தைத் திறக்க உள்ளே செந்தாமரைப்பூக்கள் இருக்கக் கண்டு மூடி விட்டான். காசியில் குடத்தைத் திறக்க எலும்புகளாக இருக்கக் கண்டவன் அங்கே பூக்களாக இருந்ததைத் தெரிவித்தான். மீண்டும் கும்பகோணம் சக்கரப்படித்துறைக்கு கொண்டு வந்து குடத்தைத் திறக்க செந்தாமரை மலர்களாக இருக்கக் கண்டு இங்கேயே அஸ்தியைக் கரைத்தார். அதனால் "காசியிலும் வீசம் பெரிது குடந்தை!'”எனப் பேசப்படுகிறது.

திருமாலின் திருக்கரத்திலுள்ள ஆயுதமே "ஸ்ரீசக்கரராஜா' என்றும், "ஆயுதங்களின் ராஜா' எனவும் குறிப்பிடப்படுகிறது. அளவற்ற சக்திகளைக் கொண்டு கணக்கற்ற அற்புதங்களைச் செய்பவர் சக்கரராஜாவாகும்.

திருமால் இம்மண்ணுலகில் அவதரிக்கும் போதெல்லாம் ஸ்ரீசக்கரராஜனும் அவதாரப் புருஷராக பிறவி எடுக்கிறார். வராஹ அவதாரத்தின் போது வராஹத்தின் மூக்குப் பகுதியிலும், நரசிம்ம அவதாரத்தில் நரசிம்மரின் கை நகங்களாகவும், ராம அவதாரத்தில் கோதண்டத்திலும், பரசுராமரின் ஏர்க்கலப்பையின் சக்தியாகவும், கிருஷ்ண அவதாரத்தில் ஜெயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்து குருúக்ஷத்திரத்தை இருளில் மூழ்கடித்தவராகவும், வாமனனின் தர்ப்பைப் புல்லின் நுனியில் அமர்ந்து சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவராகவும், யானையின் கால்களை முதலை பற்றி இழுத்தபோது "ஆதிமூலமே' என்று யானை அலறிய வேளையில் காப்பாற்றவும் அறச்சீற்றத்துடன் புறப்பட்டவர் ஸ்ரீசக்கரராஜாவே ஆகும்.

உலகில் வேறெங்கும் தனிக்கோயிலில் பெருமாள் அறுகோண எந்திரத்தில் சக்கர வடிவமான தாமரைப்பூவில் நின்ற கோலத்தில் காட்சி தரவில்லை. எட்டு திருக்கைகளில் எட்டு விதமான ஆயுதங்களுடனும், மூன்று கண்களுடனும், சக்கரராஜனாக காட்சியளிக்கும் ஒரே கோயில் இதுவாகும்.

சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் கட்டுமலை மேல் அமைந்துள்ள ஒரு மாடக்கோயில். சக்கரபாணி சந்நிதி செல்ல தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண வாயிலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாயிலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஜுவாலை திருமுடியும், மூன்று கண்களுமாக நின்றகோலத்தில் அருளும் சக்கரபாணிக்கு அருகில், அபய, வரத முத்திரைகளுடன் சுதர்சனவல்லித் தாயார் அருள்கிறார். எதிரே கருடன், உட்பிரகாரத்தில் விநாயகர் சங்கு, சக்கரங்களுடனும், யோக நரசிம்மர் பஞ்சமுக ஆஞ்சநேயர் தவிர சுவாமி சந்நிதிக்கு வடக்கில், தனிக்கோயில் நாச்சியார் விஜயவல்லித் தாயார் சந்நிதியும் உள்ளது.

மாதந்தோறும் மக நட்சத்திரத்தில் ஸ்ரீசுவாமி புறப்பாடும், பங்குனியில் திருக்கல்யாணம், சித்திரை அட்சய திருதியையில் 12 கருடசேவையும், ரத சப்தமியும், வைகாசி விசாகத்தில் தெப்போற்சவம், ஆவணியில் பவித்ரோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி, விஜய தசமி உற்சவங்களும், கார்த்திகை மாதத்தில் தீபோற்சவமும், மாசிமக பிரம்மோற்சவம், திருத்தேரோட்டமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

செவ்வாய்க்கிழமைகளில் இவரை வலம் வந்து வழிபட்டால், கடன் தொல்லைகள் அகலும். சக்கரபாணி வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது.

சனி, ராகு திசை, கேது புத்தி, சர்ப்ப தோஷங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து சக்கரபாணி சுவாமியை வழிபட இன்னல்கள் மறையும். வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு: 04352403284; 8012661740.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com