முகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி
குடிக்கத் தண்ணீர் ஊற்றி மணமகளான ரெபெக்காள்
By -முனைவர் தே.பால் பிரேம்குமார். | Published On : 27th June 2020 04:36 PM | Last Updated : 27th June 2020 04:36 PM | அ+அ அ- |

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பர். இன்னார்க்கு இன்னாரென்று தேவன் எழுதி வைத்தார் என்பர். இந்த இணைப்பை தெய்வீகப் புனித இணைப்பு என்பர். எல்லார் திருமணத்திலும் ஓர் இனிய சம்பவம் இருக்கும். திருமணத்தை மிகவும் புனிதமானது, ஆயிரம் காலத்துப் பயிர் என்பர்.
வேதாகமத்தில் பெண் தேடிச்சென்று மணப்பெண்ணைக் கண்டுபிடித்தாக, தெய்வத்தின் வழிகாட்டுதலும், நல்ல முடிவும், வரலாறும் உண்டு. ஆபிரகாம் கானான் தேசத்துக்கு கர்த்தரால் அழைக்கப்பட்டு, தன் இனம், ஜனங்களை விட்டு, கானான் தேசத்துக்குப் போனார்.
அங்கே அவர் செல்வச்செழிப்பான சீமானாக வாழ்ந்தார். தம் முதிர் வயதில் ஈசாக்கை மகனாகப் பெற்றுக்கொண்டார். தம் ஒரே மகனை மிகவும் நேசித்தார். ஆனாலும் இறைவனுக்கே தம் வாழ்வில் முதலிடம் தந்தார். தனக்கு வந்த சோதனையில் தம் ஒரே மகனை தகன பலியிடும்படி தெய்வம் கேட்டபோது, மறுப்பு சொல்லாமல் பலிகொடுக்க கத்தியை நீட்டியபோது, கர்த்தர் தடுத்து, ஆபிரகாமை ஆசீர்வதித்தார் (ஆதியாகமம் -22:17). ஈசாக்குக்கு திருமணம் செய்விக்க, தான் விட்டு வந்த உறவில் பெண் கொள்ள, தம் பிரதான வயது முதிர்ந்த வேலைக்காரனை அழைத்து, ""என் ஊருக்குப் போ. உன் சின்ன எஜமானுக்கு என் உறவில் பெண் பார்த்து அழைத்து வா'' என அனுப்பினார். ""உன்னுடன் கடவுள் தூதனாக வருவார். உன் பிரயாணத்தை வாய்க்கச் செய்வார்'' என்று பரிசுப் பொருட்களுடன், பத்து ஒட்டகங்களில் ஏற்றி அனுப்பினார்.
எமசொப்பொத்தமியா நாகோருடைய ஊருக்குச் சென்று, ""தண்ணீர் துறையண்டை நின்று, மாலை நேரம் தண்ணீர் மொண்டு கொண்டு போகும் பெண்களிடம் குடிக்கத் தண்ணீர் கொடும் என்பேன். எப்பெண் தனக்கும், தன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் தருகின்ற கன்னிப் பெண்ணோ... அப்பெண்தான் தன் சின்ன எஜமானுக்கு மனைவி ஆகப் போகிறவள்'' என்று கர்த்தரிடத்தில் வேண்டிக் கொண்டார்.
அப்போது ஆபிரகாமின் உறவில் பெத்துவேல் என்பாரின் மகள் ரெபெக்காள், மிக ரூபவதியும், கன்னிப் பெண்ணாகவும், மிக மிக அழகுள்ள குணசாலியாகவும் இருந்த அவள் தண்ணீர் எடுக்க வந்தாள்.
உடனே எலியேசர் ஆபிரகாமின் வேலைக்காரன் அவளிடம் ஓடி, குடிக்கத் தண்ணீர் கேட்டான். உடனே ரெபெக்காள் தன் தோளின் மேல் உள்ள குடத்தை இறக்கி, குடிக்கத் தண்ணீர் ஊற்றினாள். ""உம்முடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்ப்பேன்'' எனக் கூறி, தண்ணீர் மொண்டு வந்து ஊற்றினாள்.
""நீ யார் மகள்?'' எனக் கேட்டபோது ""ஆபிரகாமின் உறவில் வந்த நாகோருடைய மகள்'' என்றாள். எலியேசருக்கு ஆச்சரியமாயிற்று.
""எங்கள் வீட்டுக்கு வாரும்... இரவு தங்கிடவும், உங்கள் ஒட்டகங்களுக்கும் தங்குமிடமும் வைக்கோலும் உண்டு'' என்றாள். உடனே எலியேசர், அப்பெண்ணுக்கு பொன்னாலான காதணியும், கைக்குப் பொன் கடகமும் அணிவித்தார்.
நடந்ததை அறிந்த ரெபெக்காவின் குடும்பம் ""எலியேசரே வாரும்... உள்ளே வாரும்... கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே'' என வரவேற்று, ரெபெக்காவை ஈசாக்குக்கு மனைவியாகும்படி அனுப்பி வைத்தனர். இவ்வரலாறு இறைவன் நடத்துதலின் திருமணமாகும். குடும்பத்தைப் போற்றுவோம். கணவன் மனைவி உறவு இறைவன் தந்தது எனப் புனிதமாகப் போற்றுவோம். இறையருள் நம்மோடு!