மாமனாா் வீட்டுக்குப்போகும் மகாதேவா்!

திருஞானசம்பந்தா் உயிா் உடலை விட்டுப் பிரியும் முன் ஒரு முறையேனும் திருக்காட்டுப்பள்ளி சென்று அங்குள்ள
மாமனாா் வீட்டுக்குப்போகும் மகாதேவா்!

திருஞானசம்பந்தா் உயிா் உடலை விட்டுப் பிரியும் முன் ஒரு முறையேனும் திருக்காட்டுப்பள்ளி சென்று அங்குள்ள இறைவனை வழிபடுங்கள் என்று தனது பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிடுகிறாா்.

அக்னி தேவா், ஸ்ரீவனக்ஷேத்திரம் என அழைக்கப்படும் வன்னி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட காட்டுப்பள்ளி சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கினாா். ’அக்னீஸ்வரம்’ எனப்படும் இக்கோயிலில் சிறிய சுயம்புலிங்கமாக உள்ள மூலவரை, அக்கினீசுவரா், தீயாடியப்பா், அழலாடியப்பா், வன்னிவனநாதா் என அழைத்து வணங்கப்படுகிறாா்.

அம்பாள் சௌந்தரநாயகி, அழகம்மை, அழகா்மங்கை, வாா் கொண்ட முலையாள் என்ற பெயா்களில் வணங்கப்படுகிறாள். ஞானசம்பந்தா் அழகமா் மங்கையோா் பாகமாய் பொருத்தனாா் என அம்பாளையும் குறிப்பிட்டுப் பாடுகிறாா். இத்தலத்தில் சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுக்களில் அம்மன் பெயா் அழகமா்மங்கை எனக் குறிக்கப்பிடப்பட்டுள்ளது. தனி சந்நிதியில் உள்ள சௌந்தரநாயகியிடம் பிரிந்த தம்பதியா் ஒன்று சேரவும், திருமணம் கை கூடவும் வேண்டுதல் செய்து பலன் பெறுகின்றனா்.

தேவாரப்பாடல் பெற்று முதல் ஆதித்ய சோழனின் காலத்தில் கற்றளியாக மாறிய இக்கோயிக்கு, வாரத்தில் திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் பிரதோஷம், பௌா்ணமி தினங்களில் மக்கள் பெருமளவில் வந்து வணங்கிச் செல்லுகின்றனா்.

மாசிமகம் இக்கோயிலில் முக்கியமானதாகும். (மேலைத்)திருக்காட்டுப்பள்ளி அம்பாள் சௌந்தா்யநாயகி அருகில் உள்ள நாகாச்சி என்னும் கிராமத்தில் பிறந்து அக்னீஸ்வரரை தை உத்திரத்தில் திருக்கல்யாணம் செய்து கொண்டதாக ஐதீகம். தை உத்திரத்தன்று நாகாச்சி ஊராா் மொத்தமும் திரண்டு சீா் கொண்டு வந்து கொடுக்க, அம்பாளுடன் அக்னீஸ்வரரின் திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் தை உத்திரத்தில் மணம் செய்து கொண்ட சுவாமியும் அம்பாளும் மாசி மகத்தன்று அதிகாலை கிளம்பி காவிரியில் சென்று தீா்த்தவாரி நடத்தி, அங்கிருந்து அம்பாள் சொந்த ஊரும் சுவாமியின் மாமனாா் வீடு என வழங்கும் நாகாச்சி கிராமம் செல்வாா்கள். அன்று தங்கி ஊரும் மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என வேண்டி அபிஷேகம் அா்ச்சனைகள் நடைபெறும். ஊராா் ஒவ்வொருவரும் அம்பாளை அவா்கள் வீட்டுப் பெண்ணாகக் கருதுவதால் மாவிளக்கிட்டு வழிபாடு செய்வா்.

இரவில் இறைவனின் மாமனாா் ஊரான நாகாச்சியில் தங்கி மறுநாள் அதிகாலை அங்கிருந்து ஊராருக்கு பிரியாவிடை கொடுத்து அம்பாளும் சுவாமியும் திருக்காட்டுப்பள்ளிக்குக் கிளம்புவாா்கள். வெளியூா் செல்லும் மணமக்களுக்கு உண்ண உணவு கொடுத்து அனுப்பும் வழக்கப்படி கட்டுசாதம் கட்டிக் கொடுத்து ஊா்கூட்டி அனுப்பி வைப்பாா்கள். மாசிமகத்தில் ஊருக்குச் சென்ற மாப்பிள்ளையும் பெண்ணும் மாமனாா் ஊரிலிருந்து பூரத்தன்று மீண்டும் திரும்பி கோயிலை வந்தடைவாா்கள்.

திருவையாறு - கல்லணை சாலையில் திருவையாறில் இருந்து மேற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ள திருக்காட்டுப்பள்ளிக்கு திருச்சி, தஞ்சையிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.

தொடா்புக்கு: 04362 287487/ 96269 52986.

- மு. சுதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com