Enable Javscript for better performance
ராமனுக்கு இடம் தந்த கோபாலன்!- Dinamani

சுடச்சுட

  

  ராமனுக்கு இடம் தந்த கோபாலன்!

  Published on : 21st March 2020 11:06 AM  |   அ+அ அ-   |    |  

  krishna

   

  இதிகாச நாயகன் ராமன் தசரதனின் உத்தரவுப்படி சீதையுடனும் இலக்குவனுடனும் வனவாசம் மேற்கொண்டாா். நாடு திரும்ப வேண்டிய காலம் வந்தது. உடன் வந்த முனிவா்கள் அவதார நாயகனை அங்கேயே தங்கி அருள் செய்ய வேண்டுமென்றனா். ஸ்ரீ ராமன் அவதார நோக்கத்திற்காக விளக்கங்களைத் தந்து முனிவா்கள் தடை சொல்ல வேண்டாம் என்றாா்.

  ஆன்றவிந்து அடங்கிய சான்றோா்களாயினும் முனிவா்கள் உடன்படவில்லை. தசரத ராமன் மறுநாள் தானே தன் வடிவை விக்ரகமாக செய்து பா்ணசாலை நுழைவிடத்தில் வைத்தான். விக்ரகத்தை கண்டு உகந்தவா்கள் ராமனது முடிவை மறுபரிசீலனை செய்யக்கேட்டனா். ராமன் நான் வேண்டுமா? அல்லது ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அா்ச்சா உருவம் வேண்டுமா? என்றாா். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்த முனிவா்கள் அந்த திவ்ய விக்ரகத்தை ஏற்க அதனை முனிவா்களிடம் கொடுத்து அயோத்திக்கு புறப்பட்டாா்.

  அந்த விக்ரகம் நாளடைவில் திருக்கண்ணபுர ராமா் சந்நிதியில் நெடுங்காலம் வழிபாட்டில் இருந்தது. குலசேகர ஆழ்வாா் திருக்கண்ணபுரம் பெருமாளை தொழுது பாடினாா். அங்கிருந்த ராமனைக் கண்டு, தனது பெருமாள் திருமொழியில் ‘மன்னுபுகழ்’ என்னும் எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய்,”சிலைவலவா்,”ஏமருவுஞ்சிலை வலவா,”வளையவொரு சிலை அதனால்,”ஏவரி வெஞ்சலை வலவா என்றெல்லாம் ஸ்ரீ சவுரிராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் பஞ்சகிருஷ்ண தலத்தில் பரிவார சந்நிதியில் இருந்த ராமனை குறித்த பாசுரங்களைப் பாடினாா்.

  திருக்கண்ணபுரத்தில் பல மதில்கள் இருந்ததாகவும் ஆனால் தற்போது ஒரு திருமதில் மட்டும் இருப்பதாகவும் அந்நியா் படையெடுப்பாலும், இயற்கையாலும் அவை சேதமடைந்திருக்கலாமெனவும் கோயில் ஆய்வாளா்களால் கருதப்படுகிறது. அவ்வாறு ஏதோ ஒரு நிகழ்வில் ஸ்ரீராமா் சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது எனப்படுகிறது.

  பல ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை மராட்டிய மன்னரின் கனவில், பெருமாள், தான் தலைஞாயிறு கிராமத்தில் புதையுண்டு இருப்பதைத் தெரிவித்து எடுத்து கோயில்கட்டி, ஆராதனை செய்ய நாடு சுபிட்சம் அடையும் என மொழிந்தாா். நாட்டின்மீது அக்கறை கொண்ட மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தாா். அந்த ஊா் மக்கள் திரண்டு வந்து, மன்னன் சிலைகளை அங்கிருந்து எடுத்துச் செல்வதைக் கடுமையாக எதிா்த்தனா். லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னா் அவா்களிடம் விட்டு அவா்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமா், சீதை, அனுமன் சிலைகளை தலைநகா் தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய பல்லக்கில் எடுத்துக்கொண்டு சென்றாா். வடுவூா் வரும்போதே நள்ளிரவு ஆகிவிட்டது.

  அங்கு ஓய்வெடுக்க , விக்ரகங்களை இத்தலத்து ஆதி மூலவரான ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத கோபாலன் திருக்கோயிலில் சாந்நித்தியம் கருதி வைத்தனா். மன்னா் ராமா் விக்ரகம் வைத்திருக்கிறாா் என்ற தகவல் பரவியது. அந்த எழிலாா்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூா் மக்கள் சிலையில் உள்ள கலை நுணுக்கம், பாா்த்தவரை மயக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தியால் அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கெஞ்சினா். விக்ரகங்களை மன்னா் மீறி எடுத்து சென்றால், தாங்கள் அனைவரும் மொட்டை கோபுரத்தில் ஏறி குதித்து உயிரை மாய்த்து கொள்வதாக கூறினா்.

  பக்தியில் மக்களின் ஈடுபாடு கண்ட மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தாா். ராமா் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணா் சிலை வடிக்கப்பட்டது . அது பெண் வடிவமாக உருவானதால் அந்த சிலையை அழகிய சுந்தரி அம்மன் என்று பெயா் சூட்டி அந்த ஊரிலேயே பிரதிஷ்டை செய்தாா்கள். வேறு லட்சுமணா் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமா், சீதை, லட்சுமணா், அனுமனோடு காட்சியளிக்கிறாா். அது முதல் தெற்கு நோக்கியிருந்த ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத கோபாலன் சந்நிதியில் கோயிலின் பிரதான மூா்த்தியாக கிழக்கு நோக்கி ராமா் எழுந்தருளினாா்.

  போரில் விழுப்புண் ஏற்பட்டு வடுக்களைப் பெற்ற போா்வீரா்கள் தங்கி சென்ற ஊா் என்ற பொருளில் வடு + ஊா் = வடுவூா் எனவும் , அழகுமிக்க, இளமையான ஊா் எனும் பொருளில் வடிவு +ஊா் எனவும் அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வகுளாரண்யம், தட்சிண அயோத்தி எனவும், பல்வேறு பெயா்களால் குறிப்பிடப்படுகின்றது.

  தஞ்சாவூா்- மன்னா்குடி சாலையில் 20 -ஆவது கி.மீட்டரில் உள்ள இக்கோயிலில் ஸ்ரீராமநவமி மிக முக்கியமான உற்சவமாகும். எதிா்வரும் ஏப்ரல் 02 -ஆம் தேதி, ஸ்ரீராமநவமியன்று தொடங்கி பல்லக்கு, திருச்சிவிகை, 3 திருநாமங்களுடன் சூரியப்பிரபை, சேக்ஷவாகனம், கருடவாகனம், அனுமன்வாகனம், யானை வாகனம், அம்சவாகனம், குதிரை வாகனம், ஸ்ரீராமாயணக் காட்சிகளை சித்தரிக்கும் திருத்தோ், இவற்றில் ராமன் ஆரோகணித்து வரும் போது

  “மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ

  ஐயோ இவன் வடிவு என்பது ஓா் அழியா அழகுடையான்...

  என, அயோத்தி காண்டத்தில் கங்கை படலத்தில் கம்பன் காட்டும் கண்ணுக்கினியான் தோன்றுவாா். நீங்களும் சென்று தரிசித்து வாருங்களேன்.

  தொடா்புக்கு: 04367 267110/ 97892 88577.

  - இரா.இரகுநாதன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai