பிபரே ராம ரஸம்!

இயல், இசை, நாடகம் ஆகியவை பெரும் வளர்ச்சியடையக் காரணமாக இருந்த இடங்களில் முதன்மையானது என்றால் தஞ்சைத் தரணியில் காவிரிநதிக் கரையோரம் உள்ள ஊர்களாகும்.
பிபரே ராம ரஸம்!

இயல், இசை, நாடகம் ஆகியவை பெரும் வளர்ச்சியடையக் காரணமாக இருந்த இடங்களில் முதன்மையானது என்றால் தஞ்சைத் தரணியில் காவிரிநதிக் கரையோரம் உள்ள ஊர்களாகும். அவ்வாறு காவிரியைத் தேடிவந்த மகான்களின் வரிசையில்; பெரும் புகழ்பெற்ற; பல சாகித்யங்களை (பாடல்கள்) தந்த ஒருவர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆவர்.

தெலுங்கு வெளநாடு பிராமண குலத்தில் சிவராம
கிருஷ்ணன் என்ற பெயருடம் அவதரித்து; பிற்காலத்தில் மகான் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற யோக நாமத்தை அடைந்த அவதூதாள் ஆவர். அஷ்டமாசித்தி வரப்பெற்ற, தன்னிலை மறந்து உண்மையை அறிய புறப்பட்ட சதாசிவம்; தன் உடலோடு பறந்து சென்று பல புண்ணிய தலங்களை தரிசித்துள்ளார். அவர் ஜீவசமாதி அடைந்த இடமோ, காவிரி புரண்டோடும் கரூருக்கு அருகிலுள்ள நெரூர் ஆகும். ஆனால் இவர் நெரூர் மற்றும் மானாமதுரை, பாகிஸ்தானிலுள்ள கராச்சி, ஒம்கார் மற்றும் காசி முதலிய ஐந்து இடங்களில் சமாதி அடைந்ததாக "சதாசிவ அஷ்டகம்' கூறுகிறது. 

அவர் பெரும்பாலான கீர்த்தனைகளை சம்ஸ்கிருதத்தில் இயற்றி பெரும் வாக்யேகக்காரர் (பாடல் இயற்றுவோர்) ஆனார். சங்கீதத்திற்கு மொழி எப்போதும் தடையாய் இருந்ததில்லை. இவரது பாடல்கள் அனைத்தும் தேன்மதுர பெட்டகம். அதில் முத்துக்கள், மாணிக்கங்கள், வைர வைடூரியங்கள் சில நம் சங்கீத வித்வான்களின் வழக்கில் உள்ள பாடல்கள் ஆகும். பஜரே கோபாலம் (ஹிந்தோளம்), பஜரே ரகுவீரம் (கல்யாணி), ப்ருஹி முகுந்தேதி (கெளள, குறிஞ்சி), காயதி வனமாலி (யமுனா கல்யாணி), மானஸ சஞ்சரரே (சாமா), பிபரே ராம ரசம் (ஆஹிர் பைரவி) ஆகியவை நமக்குத் தெரிந்தவை ஆகும். கண்ணை மூடிக்கொண்டு அர்த்தம் தெரிந்து பாடுவோரின் பாடலை ஓடவிட்டு கேட்டால் நம் உடம்பில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். தெய்வ கடாக்ஷம் கொண்டவர் பாடிய, தெய்வீகப் பாடல்களல்லவா! இவரது பாடல்களை; 1) தெய்வத்தை போற்றியது, 2) மனிதனின் மனதிற்கு உபதேசம் 3) பிரம்மானுபவம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இது தவிர பல கிரந்தங்களையும் உலகிற்கு அவர் அருளியுள்ளார்.

காவிரித் தண்ணீரின் சங்கீதத்திற்கே ஒரு விசேஷம் உண்டு, என்னவென்றால் அமிர்தத்திற்கு நிகரான சங்கீத சாற்றினை அப்படியே பிழிந்து கொடுப்பதில் வல்லவர்கள். பிபரே ராம ரசம் என்ற பாடலில் சதாசிவ பிரம்மேந்திராள் ராம நாமத்தின் மகிமையை - ராம நாமத்தின் சாறு இது அனைவரது இகலோக, பரலோகத்திற்கு முக்தியைத் தருவது. நானாவித (நான்கு வகையான) பலன்களையும் அளிக்கக்கூடியது வேத சாஸ்திரத்திற்கு நிகரானது இந்த ராம நாமம் என உருகுகிறார் பிரம்மத்தின் மறுஉரு அல்லவா பிரமேந்திராள். 

இவரோடு சமகாலத்தில் வாழ்ந்த மகான்கள்; திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் மற்றும் கோவிந்தபுரம் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆவார். காஞ்சி காமகோடி ஸ்ரீமடத்தின் 57-ஆவது பீடாதிபதி பரமசிவேந்திரரின் பரமசிஷ்யர் ஆவர். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் பலராலும் போற்றப்பட்டு இவரது சீடர்களானோர் எண்ணிலடங்காது. இவர் சமாதி ஆவதற்கு முன்பே அவர் கூறியதுபோல் ஒரு பைராகி காசியிலிருந்து சிவலிங்கத்துடன் இவரைத் தேடி வந்தார்; அந்த லிங்கமே தற்போது அவரது அதிஷ்டானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தனை சிறப்புகளை பெற்ற சதாசிவ பிரம்மேந்திராளின் ஆராதனை நாள் வரும் மே மாதம் 2 - ஆம் தேதி ஜேஷ்ட சுத்த தசமியில் அமைகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com