கடன் தீர்க்கும் கருணைக்கடல் !

மக்களின் வழிபாடு இன்றி போதிய பராமரிப்பு இல்லாததாலும், இன்னும் பல காரணங்களினாலும் மண்ணில் புதையுண்டு மறைந்து போயின பல ஆலயங்கள்!
கடன் தீர்க்கும் கருணைக்கடல் !

மக்களின் வழிபாடு இன்றி போதிய பராமரிப்பு இல்லாததாலும், இன்னும் பல காரணங்களினாலும் மண்ணில் புதையுண்டு மறைந்து போயின பல ஆலயங்கள்! அந்த அற்புதச் சிவாலயங்களில் ஒன்று தான் "பெரணம்பாக்கம் ஸ்ரீருணஹரேஸ்வரர் திருக்கோயில்' . சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது இக்கோயில். 

திருவண்ணாமலை மாவட்டத்தில், போளூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பெரணம்பாக்கம் கிராமம். இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் இவ்வூர், சதுர்வேதிமங்கலம், சதுர்வேதிப்பாக்கம், பிராமணப்பாக்கம் என்றெல்லாம் அழைக்கப்பட்டிருந்ததை அறியலாம். இக்கிராமத்தில், கிராம அதிகாரியாக பணியாற்றிய  மார்க்கபந்து அய்யரின் குடும்பத்தினர் (தற்போது நகரவாசி) அவர்களது குடும்பத்தில் நிகழவிருந்த நல்ல காரியங்களுக்கு சில தடங்கல்கள் ஏற்பட, ஜோதிட உதவியை நாடினார். அந்த தெய்வ ஜோதிட பிரசன்னத்தின்போது அவர்களது ஊரில் ஒரு காலத்தில் சிறப்பான வழிபாட்டில் இருந்து, காலப்போக்கில் புதையுண்டு போய் வழிபாடு இல்லாத நிலையில் இருக்கும் ஈசனின் நிலை அறியப்பட்டது. அரசாங்க அனுமதி முறைகளுடன் ஊர் மக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்டிப் பார்க்க, சர்வேஸ்வரன் தன்னை லிங்க சொரூபமாக வெளிப்படுத்திக்கொண்டார். அத்துடன் அங்கு ஓர் ஆலயம் இருந்ததற்கான இதர அறிகுறிகளும், சுவடுகளும் தென்பட்டன. இந்நிகழ்வு நடந்தது 2011 -ஆம்  ஆண்டு. 

மேலும் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் பெறப்பட்ட, கண்டறியப்பட்ட தகவல்களின்படி, சுயம்பு லிங்கத்திருமேனியான இறைவனின் திருநாமம் ருணஹரேஸ்வரர், "பெருங்கடன் தீர்க்கும் பெருமான்' என்பது தூய தமிழ் சொல். அதற்கேற்ப, இவ்வூருக்கும் பெரணப்பாக்கம்; அதாவது பெரிய+ருணம்+பாக்கம் என்ற பெயர் அமைந்துள்ளது சிறப்பு.

தலவரலாற்றின்படி, தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்காக, முருகப்பெருமான் தன் ஆறுமுகத்துடன் சிவலிங்க பூஜை செய்து தன் வினையை தீர்த்துக் கொண்டாராம். அகத்திய முனிவருக்கும், மிருகண்ட மகரிஷிக்கும் சிவன், உமையம்மையுடன் இடபரூடராக காட்சியளித்த தலம், ருணஹர தீர்த்தம், மங்கல தீர்த்தம் என இரு புஷ்கரணிகள் உள்ளன.   

கல்வெட்டுச் செய்திகள் மூலம், சோழர்காலக் கட்டடக் கலையில் பரிமளித்த ஆலயம். பின்னர் விஜயநகர பேரரசுகள், சம்புவராயர்கள் ஆட்சியில் பேணி பாதுகாக்கப் பட்டுள்ளது. விஜயநகர கால பட்டையம் ஒன்று இவ்வூரில் வேதம் படித்த அந்தணர்களுக்கு நில தானம் அளிக்கப்பட்டுள்ள விவரங்களைக் 
குறிப்பிடுகிறது.

மகாசுவாமிகள் பாதம்பட்ட இப்புண்ணிய பூமியில், புதையுண்ட ஆலயத்தை வெளிக்கொணர்ந்து, புணருத்தாரனம் செய்து பழைய நிலைக்குக் கொண்டுவர ஸ்ரீருணஹரேஸ்வரர் ஆலய கமிட்டி ஆலயத்தை முற்றிலும் புதுப்பித்து மகத்தான சிவ புண்ணிய கைங்கர்யத்தை நிறைவேற்றி, பல ஆண்டுகளுக்குப்பிறகு 2013- ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடமுழுக்கு வைபவத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் ஆசியுடன் நடத்தியுள்ளார்கள்.

தற்போது ஆலயத்தில், சுவாமி, அம்பாள் (மங்களாம்பிகை), ஆறுமுகனார், ருணஹர கணபதி, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரிய, சந்திரர்கள் சந்நிதிகள், நந்தி, பலிபீடம் அமைக்கப்பட்டு, சேவார்த்திகள் தங்குமிடம், வாகன மண்டபம், சாமான் அறை கட்டப்பட்டுள்ளது. ஐந்து வகையான வில்வ மரத்துடன் நந்தவனம் உள்ளது. சரக்கொண்றை மரம், தலமரமாக உள்ளது. இன்னும் நிறைவேற்ற வேண்டிய பணிகளாக கோஷ்ட தெய்வங்களின் சந்நிதிகள், நவக்கிரக சந்நிதிகள் அமைய வேண்டியுள்ளது. 

இங்கு மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷ கால வழிபாடு, தமிழ்புத்தாண்டு, காணும் பொங்கல், ஐப்பசி அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி ஆகிய விசேஷ நாள்களிலும், ஆடி மாதத்தில் குத்துவிளக்கு பூஜையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு மடிகட்டுதல், லேகியம் நிவேதித்து வழங்குதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பரிகாரத்தலம்:   ஸ்ரீருணஹரேஸ்வரர் என்ற பெயருக்கு ஏற்ப, இங்கு குடிகொண்டுள்ள இறைவன் தன்னை நாடி வரும் பக்தர்களின் பிறவிக்கடன், தெய்வக்கடன், பித்ருக்கடன் ஆகியவற்றுக்கு நிவர்த்தி அளித்து பெருவாழ்வு அருளுகின்றான். திரும்பிவர இயலாத ஒருவழிப்பாதையாக, கடன்தொல்லைகளில் சிக்கித் தவிப்போருக்கான ஆபத்பாண்டவனாக இந்த ஈசனின் ஆலயம் விளங்குகின்றது.   

தொடர்புக்கு: 87544 05387 / 94436 85816. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com