மகத்தான மக்கா வெற்றி

நிச்சயமாக நாம் உமக்குத் தெளிவான வெற்றி அளித்தோம் என்று எழில்மறை குர்ஆனின் 48-1 ஆவது வசனம் வள்ளல் நபி (ஸல்) அவர்கள் மக்கத்து குறைஷிகளோடு ஹுதைபியாவில் உடன்படிக்கை செய்து கொண்டு


நிச்சயமாக நாம் உமக்குத் தெளிவான வெற்றி அளித்தோம் என்று எழில்மறை குர்ஆனின் 48-1 ஆவது வசனம் வள்ளல் நபி (ஸல்) அவர்கள் மக்கத்து குறைஷிகளோடு ஹுதைபியாவில் உடன்படிக்கை செய்து கொண்டு திட்டமிட்டபடி மக்காவிற்குச் செல்லாமல் மதீனாவிற்குத் திரும்பியதைத் தோல்வி என்று எண்ணியோருக்கு நிகழவிருக்கும் மக்கா வெற்றியை மறைமுகமாக குறிப்பிடுகிறது. திரும்பும் வழியில் திருநபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது இந்த வசனம். 
ஹுதைபியா உடன்படிக்கையை மீறி ஊறு விளைவித்தனர். இறைவனுக்கு மாறு செய்த தேறா குறைஷிகள். இனியும் பொறுப்பது கூடாது என்று கொதித்த தோழர்கள் குதித்து எழுந்தனர். மதீனா நிர்வாகம் அபூருஹ்ம் குல்காம் பின்ஹுசைன் அல்கிபாரி (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பத்தாயிரம் படைவீரர்கள் புடை சூழ பூமான் நபி (ஸல்) அவர்கள் ரமலான் பிறைபத்தில் மக்கா பயணம் புறப்பட்டார்கள். மதீனாவிலிருந்து மக்காவரை உள்ள இஸ்லாமிய நேசர்கள் இருநூறு தேர்ச்சி பெற்ற வீரர்கள் ஜாபர் (ரலி)  அவர்களின் தலைமையில் முன் சென்றனர். மாநபி (ஸல்) அவர்களின் மனைவியர் உம்முஸலமா (ரலி) ஜைனப் (ரலி) உடன் சென்றனர். 
ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் ஒரு கொடியை கொடுத்து மக்காவிற்கு ஆறு கி.மீ. தொலைவில் உள்ள மர்ருல்ளஹ்ரான் என்ற மேட்டு பகுதியை அடைந்தார்கள். இரவானதும் ஒவ்வொருவரையும் அடுப்புமூட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். மேட்டு பகுதி ஒளிமயமாய் ஒளிர்வதைக் கண்ட குறைஷிகள் அபூசுப்யான், புதைல் இப்னு வராக்கா, ஹகீம் இப்னு ஹிஷாம் ஆகியோரை உளவறிய அனுப்பினர். உளவறிய வந்த அபூசுப்யான் இஸ்லாத்தை ஏற்று மக்காவிற்குச் சென்று நடந்ததை நவின்றார். அவரின் மனைவி ஹிந்தா அபூசுப்யானின் தாடியைப் பிடித்திழுத்து இந்த கிழவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று இழித்துரைத்தாள்.
குளித்து உடைமாற்றிய உத்தம நபி (ஸல்) அவர்கள் தூத்துவாவை அடைந்ததும் ஏமன் நாட்டு சிவப்புநிற தலைப்பாகையை அணிந்து வாளொன்று இடையில் தொங்க மக்கா சமவெளியை அடைந்தார்கள். வலது புற அணிக்கு ஜுபைர் பின் அவாம் (ரலி) தென்புற அணிக்கு காலித்பின் வலீது (ரலி) மேற்புற அணிக்கு ஸஅத் பின் உபைதா (ரலி) கிழக்கு புற அணிக்கு அபூ உபைதா (ரலி) ஆகியோரைத் தளபதிகளாக நியமனம் செய்தார்கள் நேய நபி (ஸல்) அவர்கள். படை வீரர்கள் உருவிய வாளுடன் செல்லாதீர்கள். வழியில் யாரையும் தாக்காதீர்கள். பயந்து ஓடுவோரை விரட்டாதீர்கள் என்று அறிவுறுத்தினார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.
அலி (ரலி) அவர்கள் குதிரை மீது அமர்ந்து இஸ்லாமிய கொடியைத் தாங்கி முன்னே சென்றார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் வலது புறமும் உûஸத் (ரலி) அவர்கள் இடது புறமும் ஒட்டகங்களில் அமர்ந்து சென்றார்கள். உஸாமா பின் ஜைது (ரலி) அவர்கள் குதிரையின்  பின்னால் வர நடுவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் அமர்ந்து அவர்களின் தாடி சேணத்தில் பட இறைவனைச் சிரம் பணிந்து ஜபல்ஹிந்த் குன்றைச் சுற்றி செல்லும் குறுக்குப் பாதை வழியாக ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ரமலான் பிறை 22- இல் வெள்ளிக்கிழமை மக்காவில் நுழைந்தார்கள். 16-5-2020 மக்கா வெற்றியின் 1433 -ஆம் ஆண்டு. விழுமிய நபி (ஸல்) அவர்களின் வழுவில்லா கொள்கையை ஏற்க மறுத்து எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்த பொல்லாத குறைஷியர்கள் பயந்து மிரண்டு விரண்டோடி வீடுகளில் புகுந்து தாழிட்டு கொண்டனர். மக்கமா நகரின் வடக்கில் உள்ள ஹஜூனில் கூடாரம் அமைத்து சிறு ஓய்வு எடுத்தார்கள். கூடாரத்திற்கு எதிரில் இஸ்லாமிய வெள்ளை கொடியைப் பறக்க விட்டார்கள்.
சத்தியம் செய்த வெற்றியை ஈட்டிய சாந்த நபி (ஸல்) அவர்கள் பத்தாயிரம் வீரர்களுடன் கஃபாவைத் தவாப் செய்து கஃபாவினுள் சென்று தொழுது 350 கற்
சிலைகளை உடைத்து திரு கஃபாவைப் புனிதப்படுத்தி கஃபாவைப் பூட்டினார்கள். கத்தி கொண்டு சென்றாலும் புத்தி சாதுர்யத்துடன் யுத்தம் இன்றி ரத்தம் சிந்தாது நிந்தித்தவர்கள் நிலைகுலைந்து நிற்க நீதர் நபி  (ஸல்) அவர்கள் நிலையான வெற்றி பெற்றதை நிரல்பட பேசுகிறது குர்ஆனின் 48-24 -ஆவது வசனம். 
எந்த உதுமான் பின் தல்ஹா தாஹா நபி (ஸல்) அவர்களிடம் சாவியைத் தர மறுத்தாரோ அவரிடமே திறவுகோலைக் கொடுத்து அவரிடமும் அவரின் சந்ததியினரிடமும் அப்பொறுப்பு தொடர்ந்து இருக்க இயம்பினார்கள். 
இன்றும் தல்ஹா (ரலி) பரம்பரையிடம் அப்பொறுப்பு உள்ளது. ஜம்ஜம் கிணற்றைக் கண்டுபிடித்து புதுப்பித்த அப்துல் முத்தலிப்பின் மகன் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஜம்ஜம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொறுப்பு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தபடி அப்பாஸ் (ரலி) பரம்பரையிடம் உள்ளது.
கல்லாலும் சொல்லாலும் அடித்து பொல்லாங்கு புரிந்த மக்கா குறைஷிகளின் கோரிக்கையை ஏற்று அனைவரையும் மன்னித்தார்கள். ஆனால் மன்னிக்கமுடியாத மாபாதகம் புரிந்த பதினைந்து குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அவர்களில் பதினொரு பாதகர்கள் மன்னிப்பு கேட்டு இஸ்லாத்தைத் தழுவினர். அவர்களும் மன்னிக்கப்பட்டனர்.
ஏறத்தாழ பதினெட்டு நாள்கள் மக்காவில் தங்கிய மாநபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு இஸ்லாத்தைக் கற்பிக்க முஆத்பின்ஜபல் (ரலி) அவர்களையும் உமய்யா கோத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் ஆத்திப்பின் ஆஸீத் (ரலி) அவர்களை ஆளுநராகவும் நியமித்தார்கள். ஆளுநருக்கு ஒரு நாள் ஊதியம் ஒரு திர்ஹம். அக்காலத்தில் இந்திய மதிப்பில் நான்கு அணாக்கள், அதாவது கால் ரூபாய். இன்று ஒரு சவூதி ரியாலுக்கு இந்திய ரூபாய் சுமார் இருபது. மக்கா மண்ணின் மைந்தர் மாநபி (ஸல்) அவர்கள் மக்காவை வென்று மீட்டது போல் இந்திய பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து இந்தியாவின் பண மதிப்பை மட்டும் அல்ல, இந்திய நாட்டின் பெருமையையும் மீண்டும் உயர்த்தி நிலைநிறுத்த இந்தியர்களாகிய நாம் ஒன்று நின்று உறுதி பூணுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com