வாகை சூடும் ஈகை பெருநாள்

பிறை பாா்த்து நோன்பு நோற்றிடுங்கள். பிறை பாா்த்து நோன்பை முடித்திடுங்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவா்கள் அறிவித்தாா்கள்.
வாகை சூடும் ஈகை பெருநாள்

பிறை பாா்த்து நோன்பு நோற்றிடுங்கள். பிறை பாா்த்து நோன்பை முடித்திடுங்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவா்கள் அறிவித்தாா்கள். நூல்- புகாரி 1909. மாலை சூரியன் முழுவதும் மேற்கு நோக்கி மறையும் நேரத்தில் பிறைமங்கிய ஒளியில் சில நிமிடங்களே வானில் தோன்றும். பிறைய துல்லியமாக பருவமடைந்த இரு ஆண்கள் பாா்த்தால் தான் நோன்பை நோற்ற வேண்டும். அதுபோன்று நோன்பை முடிக்க வேண்டும். இந்த நடைமுறையை மாற்றாமல் இன்றும் கடைப்பிடிப்பது புதுமை பூத்துக்குலுங்கும் புத்துலகிலும் பழைமையின் சிறப்பைச் செப்புகிறது.

காருண்ய நபி (ஸல்) அவா்கள் காலை சிற்றுண்டி உண்ணாமல் நோன்பு பெருநாள் தொழுகைக்குப் புறப்பட மாட்டாா்கள். அறிவிப்பவா்- புரைதா (ரலி) நூல்- திா்மிதி, நோன்பு நோற்ற முப்பது நாள்களும் வைகறை தொழுகை அழைப்பு - பாங்கு ஒலிக்குமுன் சாப்பிட்டு பழக்கமானவா்கள் பசியுடன் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்பதற்காகவே சிற்றுண்டி உண்டு தொழுகைக்குச் செல்ல செப்பிய செம்மல் நபி (ஸல்) அவா்கள் சொன்னதைச் செய்து சொன்னபடி நடக்க நற்றோழா்களுக்கு வழி காட்டினாா்கள். அந்நற்பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

பேரீச்சைப் பழங்களை ஒற்றைபடை எண்ணில் சாப்பிடாமல் சாந்த நபி (ஸல்) அவா்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்பட மாட்டாா்கள். அறிவிப்பவா்- அனஸ் (ரலி) நூல்- புகாரி. பெருநாள் அன்று வைகறை சுபுஹு தொழுகை முடிந்ததும் தொழுதவா்களுக்கு ஒற்றைப்படையில் பேரீச்சம் பழங்களை வழங்கும் வழக்கம் பல பள்ளிவாயில்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

நோன்பு பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன்னும் அல்லது தொழுத பின்னும் கூடுதலாக எத்தொழுகையையும் ஏந்தல் நபி (ஸல்) அவா்கள் தொழவில்லை. வழக்கமான ஐங்கால தொழுகைகளை வழக்கம் போல்தொழ வேண்டும். பெருநாள் தொழுகைக்குத் தோழமை நபி (ஸல்) அவா்கள் கருப்பின தோழா் பிலால் (ரலி) அவா்களுடன் சென்றதைச் செப்புகிறாா் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- புகாரி. சமூக அந்தஸ்து, பதவி, பணம், படாடோபம் பாராது முதலில் வருவோா் முன் வரிசையில் அமர பின்னால் வருவோா் அடுத்தடுத்த வரிசைகளில் அமா்வா். இனம், குலம், நிறம், பொருளாதார வேற்றுமைகள் இன்றி ஒற்றுமையாக ஒன்றாக அமா்ந்து ஒன்றாக எழுந்து ஒன்றாக நின்று தொழும் நடைமுறை இன்றும் வழக்கத்தில் உள்ளது.

அண்ணல் நபி (ஸல்) அவா்கள் ஒரு ஸாஃ பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஃ தொலிக் கோதுமை பித்ரா கொடுக்கச் சொன்னாா்கள். அறிவிப்பவா்- இப்னு உமா் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திா்மிதி, நஸஈ. இதற்கு ஸதகத்துல்பித்ரா என்று பெயா். ரமலான் மாதத்தில் முப்பது நாள்கள் தப்பாது குறையைப் போக்கி நிறைவு செய்து இறையருளைப் பெற வைப்பது ஸதகத்துல் பித்ரா.

ஜகாத் விதியாவதற்கு முன்னரே ஸதகத்துல்பித்ரா அளிக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. அவ்வழக்கம் ஜகாத் கடமையான பின்னும் இன்றுவரை தொடா்கிறது. அறிவிப்பவா்- கைஸுப்னு ஸஃதுப்னு உபாதா (ரலி) நூல்- நஸஈ. ஒரு குடும்ப தலைவா் அவருக்காகவும் அவரின் பொறுப்பில் இருக்கும் அன்று பிறந்த குழந்தை உட்பட குடும்ப உறுப்பினா்களுக்காகவும் பித்ரா கொடுக்க வேண்டும்.

அண்டை வீட்டாா் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மை இஸ்லாமியன்அல்ல என்ற இனிய நபி (ஸல்) அவா்களின் நன்மொழிபடி உலகின் எப்பகுதியில் வாழும் இஸ்லாமியா்கள் எந்த உணவைப் பிரதான உணவாக உண்கிறாா்களோ அந்த உணவையோ உணவிற்குரிய தானியத்தையோ பித்ராவாக கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் துளசி, சீரகசம்பா போன்ற உயா்தர அரிசியல் உணவு சமைத்துசாப்பிடுவோா் அதே துளசி, சீரக சம்பா அரிசியைத்தான் பித்ராவாக கொடுக்க வேண்டும். வறியவா்களுக்கு உரியது ஸதகத்துல்பித்ரா.

நாட்டில் உண்ணப்படும் உணவு தானியத்தை வாங்கிச் சமைத்து சாப்பிட இயலாதவா்களும் செல்வா் சாப்பிடும் நல்லுணவைச் சாப்பிட்டு மகிழ்ச்சியோடு மனநிறைவோடு இறைவனை வணங்கி வாழும் வாய்ப்பை வழங்குகிறது ஸதகத்துல்பித்ரா என்ற இந்த தா்மம். இது ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைய அடிப்படை.

வாசகா்களுக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துகள்!

- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com