குரு பெயர்ச்சி  பலன்கள் - 2020

நவகிரகங்களின் முதல்வராகக் கருதப்படும் குரு பகவான் இந்த சார்வரி வருடம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 5-ஆம் தேதி சுக்ல பட்சம் சஷ்டி திதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுப
குரு பெயர்ச்சி  பலன்கள் - 2020

நவகிரகங்களின் முதல்வராகக் கருதப்படும் குரு பகவான் இந்த சார்வரி வருடம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 5-ஆம் தேதி (20.11.2020) வெள்ளிக்கிழமை சுக்ல பட்சம் (வளர்பிறை) சஷ்டி திதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி 17.00 நாழிகை அளவில் நண்பகல் 13.23 (ஐநப ) மணிக்கு சுக்கிர பகவானின் ஹோரையில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

சார்வரி வருடம் உத்திராயணம் சிசிர ருது பங்குனி மாதம் 23-ஆம் தேதி திங்கள்கிழமை (5.4.2021) விடிந்தால் செவ்வாய்க்கிழமை (6.4.2021) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) நவமி திதி உத்திராடம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி 46 நாழிகை அளவில் நள்ளிரவு 12.25 (ஐநப) மணிக்கு சூரிய பகவானின் ஹோரையில் குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு அதிசார கதியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிலவ வருடம் உத்திராயணம் க்ரீஷ்ம ருது ஆனி மாதம் 7-ஆம் தேதி திங்கள்கிழமை (21.6.2021) சுக்ல பட்சம் (வளர்பிறை) ஏகாதசி திதி சுவாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி ஒரு நாழிகைக்குள் காலை 5.59 (ஐநப) மணிக்கு புத பகவான் ஹோரையில் குரு பகவான் கும்ப ராசியில் வக்ர கதி அடைகிறார்.

பிலவ வருடம் தட்சிணாயனம் வர்ஷ ருது ஆவணி மாதம் 29-ஆம் தேதி (14.09.2021) செவ்வாய்க்கிழமை சுக்லபட்சம் (வளர்பிறை) நவமி திதி மூல நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி 22 நாழிகை அளவில் பிற்பகல் 14.28 மணிக்கு சூரிய பகவானின் ஹோரையில் குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு அதி வக்ர கதியில் பெயர்ச்சி ஆகிறார். 

பிலவ வருடம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவிதியை ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி 49 நாழிகை அளவில் இரவு 11.31 மணிக்கு குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

குரு பகவானின் பெயர்ச்சி கும்ப லக்னத்தில் மேஷ நவாம்சத்தில் மகர ராசியில் திருவோணம் நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் உண்டாகிறது. லக்னம், அயன ஸ்தானாபதியான சனி பகவான் அயன ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று நவாம்சத்தில் தன் மூலத் திரிகோண ராசியான கும்ப ராசியை அடைகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் நீச்சம் பெறுகிறார். 

சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் மூல திரிகோணம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். புத, சுக்கிர பகவான்களின் இணைவு, மஹாவிஷ்ணு மஹாலட்சுமி யோகமாகி பாக்கிய ஸ்தானத்திற்கு வலுவூட்டுகிறது. 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான், பன்னிரண்டாம் வீட்டில் நீச்சம் பெற்று, அங்கு ஆட்சி பெற்றிருக்கும் சனி பகவானுடன் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) இணைந்திருப்பதால், சிறப்பான குரு சந்திர யோகமும் உண்டாகிறது. குரு பகவானின் ஐந்தாம் பார்வை சுகஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீதும், ஏழாம் பார்வை குணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியில் உச்சம் பெறுகிறார். 

ஏழாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்று கேது பகவானுடன் இணைந்து நவாம்சத்தில் தன் ஆட்சிய வீடான சிம்ம ராசியை அடைகிறார். ராகு / கேது பகவான்கள் நவாம்சத்தில் சிம்ம / கும்ப ராசியை அடைகிறார்கள்.

குரு பகவான், சனி பகவான் ஒன்றாக இணைவது அரிது.   சில நேரங்களில் தொடர்ந்து இரண்டாண்டுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் சனி, குரு பகவான்கள் இருவரின் பார்வை படும் ராசி அதி உன்னத மேன்மையை அடையும். அதனால் கடக லக்னத்தைக் கொண்டவர்களுக்கு அல்லது கடக ராசி அன்பர்களுக்கு பல எதிர்பாராத அனுகூல பலன்கள் உண்டாகும். 

அதாவது 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் 14.09.2021 முதல் 20.11.2021 வரையிலும் கடக லக்ன / ராசி அன்பர்களுக்கு அதி உன்னதமான சுகானுபவம் கிடைக்கும். அதாவது முதல் கட்டமாக 137 நாள்களும், இரண்டாம் கட்டமாக 67 நாள்களும் அமைகிறது. 

இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளும், உற்றார் உறவினர் நண்பர்கள் ஒற்றுமையும், சுய தொழிலில் சிறப்பான அபிவிருத்தியும் குழந்தைகள் வாழ்வில் புது மலர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் வெளிநாட்டுப் பயணமும் உண்டாகும்.  இந்த இரட்டைப் பார்வையினால் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும் என்பதில் ஐயமில்லை. 

சூரிய பகவானுக்கு அடுத்த சிறிய கிரகம் குரு பகவானாவார். மஞ்சள் நிறமான ஒளியைப் பிரதிபலிப்பவர். இதற்கு மீதேன் என்று பெயர். இது சூரிய ஒளியிலுள்ள நீலக்கதிருடன் கூடி ஐக்கியப்பட்டு உலகில் ஜீவராசிகள் கருத்தரிக்கச் செய்கிறது. ஆகவேதான் குரு பகவானை "புத்திர காரகர்' என்று அழைக்கிறார்கள். 

குரு பகவான் ராசிக்கு (சந்திர பகவான் இருக்குமிடத்தை ராசி என்று கூறுவர்) 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் சஞ்சரித்தால் குரு பலம் உண்டாகும்.அதோடு மற்ற ராசி அன்பர்களுக்கு குரு பகவான் வக்கிரமாக (பின்னோக்கி சஞ்சரித்தல்) சஞ்சரிக்கும் காலங்களில் குரு பலம் கூடும். அதனால் குரு பகவான் அனைத்து ராசியினருக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மைகளைச் செய்து வருகிறார். நைசர்கிக சுபர்களில் குரு பகவான் தான் பிரதானமானவர். எந்த ஒரு ஜாதகத்திலும் குரு பகவான் தனித்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் தனது தசா புத்தி அந்தரங்கங்களில் அளவு கடந்த அவதிகள் தரும். இதைக் கருதியே "அந்தணன் தனித்து நிற்கில் அவதிகள் மெத்த உண்டு' என்கிற ஜோதிட வழக்கு உண்டானது.

குரு பகவானுக்கு 4, 7, 10-ஆம் ஸ்தானங்களுக்கு உண்டான ஆதிபத்தியம் வரின், அது கேந்திராதிபத்ய தோஷம் தரக்கூடிய அமைப்பாகும். குரு பகவானுக்கு நான்குக்குரிய ஆதிபத்தியம் வரின், சுயமான வீடு, மனை, நிலப்புலம், வண்டி வாகன அமைப்பு ஏற்படாது.

ராஜ்ய ஸ்தானமான பத்தாம் இல்லம் குரு பகவானின் ஆதிபத்திய இல்லமாக அமைந்தால், அந்த ஜாதகர் தமது கைத்தொழில், வியாபாரம், உத்தியோகம் ஆகியவற்றில் பிறருக்காகவே தமது வாழ்க்கையை வாழக் கூடியவராக அமைவார். இவர்களுக்கு பெரும்பாலும் நிதி அல்லது நீதித்துறையில் உத்தியோகம் அமையும். நிதித்துறை என்றால் வங்கி உத்தியோகம் என்பதாக அமையும்.

மேற்கூறிய பலன்கள் பொதுவானவையாகும். ஆனால் அவரவர் ஜாதகப்படி குரு பகவானுக்கு என்ன ஆதிபத்தியம் பெற்றிருக்கிறாரோ அந்தந்த ஆதிபத்திய பலன்கள்தான் நடைபெறும். கேந்திராதிபத்ய தோஷத்திற்கு பல விதிவிலக்குகள் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். குரு பகவானைப் பற்றி பலன் கூற சுருதி, யுக்தி, அனுபவம், தற்கால நிலை ஆகிய எல்லாவற்றையும் கவனித்துப் பலன் சொல்ல வேண்டும்.

பொதுவாக குரு மஹா தசையில் சுக்கிர புக்திக்குப் பிறகுதான் யோக பாக்கியங்கள் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது. இது அனுபவத்தில் ஒத்து வருகிறது. குரு மஹா தசையில் ஒரு மனிதன் ஸ்புடம் போட்டு எடுக்கப்படுகிறான். குரு மஹா தசையில் பணத்தைவிட அறிவும் திறமையும் உண்டாகிறது. குரு மஹா தசைக்குப் பிறகு வரும் சனி மஹா தசையில் பெருஞ்செல்வம் உண்டாகிறது. இதைத் தான் "குரு கொடுப்பின் சனி தடுப்பர்; சனி கொடுப்பின் எவர் தடுப்பர்' என்று கூறுவார்கள்.

அதோடு குரு பகவானின் பார்வை ராகு, சனி பகவானின் மீது படிந்திருக்கும் ஜாதகர்களுக்கு ராகு, சனி பகவான்களின் தசைகளில் தான் பெரும் செல்வம் சேருகிறது என்பதையும் பார்க்கிறோம். தற்சமயம் ஏற்பட்டுள்ள குரு பகவானின் பெயர்ச்சி 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும், 06.04.2021 முதல் 13.09.2021 வரையிலும், 14.09.2021 முதல் 20.11.2021 வரையிலும் மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.

இனி குரு பெயர்ச்சி பலன்களுக்குச் செல்லலாம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com