பாரத எல்லையின் காவல் தெய்வம்

நம் பாரத தேசம் ஒரு புண்ணிய பூமி. இந்தியாவில் காணப்படும் திருக்கோயில்கள் பலவும் பல ஆன்மிக அமானுஷ்ய சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டதாகும்.
பாரத எல்லையின் காவல் தெய்வம்

நம் பாரத தேசம் ஒரு புண்ணிய பூமி. இந்தியாவில் காணப்படும் திருக்கோயில்கள் பலவும் பல ஆன்மிக அமானுஷ்ய சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டதாகும். அது போன்றதோர் சம்பவம் கடந்த 1965-இல் நடந்த இந்திய - பாகிஸ்தான் போரின்போது நிகழ்ந்தது:
ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இது ஒரு முக்கிய ராணுவ கேந்திரமாகும். இந்த இடத்திலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள பிரதேசம் "தனுக்' என்பது. இந்த எல்லைப் பிரதேசத்தில் ஒரு சிறு ஆலயம் உள்ளது. இந்த ஆலத்தில் உள்ள தேவியை "தனுக் மாதா' என்றழைப்பர். இப்பிரதேசம் முற்றிலும் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த கோயிலும் ராணுவத்தாலேயே நிர்வகிக்கப்படுகிறது. ராணுவ வீரர்களே இங்கு பூஜை செய்கிறார்கள். இத்திருக்கோயிலில் உள்ள ஸ்ரீதனுக் மாதா, தற்போது பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஹிங்குலா தேவியின் அம்சமாகப் போற்றப்படுகிறாள்.
நம் ஊர்களில் எல்லை தெய்வங்கள் வீற்றிருப்பர். அவர்கள் அந்த ஊரைக் காப்பதாக ஐதீகம். மேலும் பலருக்கு அந்த தெய்வங்கள் குல தெய்வங்களாகவும் இருப்பதுண்டு. இவர்களை எல்லை தெய்வங்கள் என்பர். அதே போல் ஸ்ரீ தனுக் மாதா நம் பாரத எல்லையின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறாள்.
நம்முடன் ஒட்டி உறவாடிய சீனா திடீரென்று 1962 -இல் போர்தொடுத்து நம்மைப் பெருத்த சேதத்திற்குள்ளாக்கியது. அந்த தாக்கத்திலிருந்து மீள்வதற்கு முன்னால் 1965-இல் பாகிஸ்தான் நம்மீது போர் தொடுத்தது. அமெரிக்காவிலிருந்து பெற்ற நவீன ரக யுத்த தளவாடங்களைக் கொண்டு, அந்தளவுக்கு யுத்த தளவாடங்களைப் பெற்றிராத இந்தியாவை வென்றுவிடலாம் என்று மனப்பால் குடித்து, போர்முரசு கொட்டிவிட்டு, இறுதியில் இந்திய வீரர்களின் மனோதைரியத்திற்கு முன்னால் ஈடு கொடுக்க முடியாமல் மண்ணைக் கவ்வியது வரலாறு!
இந்தப் போரின் போது, ஜெய்சால்மரில் உள்ள தனுக் பகுதியில் 8 பேர் கொண்ட எல்லைப்படை வீரர்கள் குழு நம் எல்லையைக் காத்து வந்தது. 
இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் நவீன பீரங்கிகள் கொண்ட பெரும்படையுடன் தங்களைத் தாக்க வருவதாக அவர்களுக்குத் தகவல் வந்தது. இந்திய வீரர்கள் அதனைக் கண்டு பயப்படவில்லை. தாங்கள் நித்தமும் வணங்கும் தனுக் மாதா தேவி தங்களைக் காத்து தங்களுக்கு வெற்றியைத் தேடித் தருவாள் என்ற நம்பிக்கையுடன் தனுக்மாதா திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையை மனமுருக வேண்டினர். அப்போது தனுக் மாதா அவர்களைக் கவலைப்பட வேண்டாமென்றும், அவர்கள் வெளியில் செல்லாமல் திருக்கோயில் வளாகத்திலேயே தங்கியிருக்குமாறும் தான் சென்று எல்லையைக் காப்பதாகவும் திருவாக்கு கூற, அதனைக் கேட்ட வீரர்கள் கண்ணீர் மல்க தேவியை வணங்கி அவள் திருவடிகளைச் சரணடைந்து, அந்த வளாகத்திலேயே தங்கிவிட்டனர். 
17 நவம்பர், 1965-இல் பாகிஸ்தான் பெரும் படையுடன் இந்திய எல்லையைத் தாக்கியது. பீரங்கிக் குண்டுகள் மழையாகப் பொழிந்தன. ராணுவ விமானங்களும் குண்டுகளை வீசின.  ஆனால் அவர்கள் வீசிய ஒரு குண்டு கூட வெடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் தனுக் மாதா கோயிலிலோ அல்லது அந்த கோயில் வளாகத்திலோ ஒரு குண்டு கூட விழவில்லை. கோயிலில் ஒரு சிறு கீறல் கூட விழவில்லை. இதைக் கண்ணுற்ற பாகிஸ்தான் ராணுவம் வியந்தது. அதற்கடுத்த நாள்களில் மேலும் அதி நவீன போர்க் கலன்களைக் கொண்டு தாக்கினர். 3000-க்கும் மேற்பட்ட குண்டுகள் கோயில் சுற்றுப்புறங்களிலும் வீழ்ந்தன. ஆனால் ஒரு குண்டுகூட இந்தியப் பகுதியில் சேதத்தை ஏற்படுத்தவில்லை. வியப்பின் உச்சிக்குச் சென்றது பாகிஸ்தான் ராணுவம். தனுக் மாதாவின் சக்தியை அவர்கள் உணர்ந்தனர். 
அதுமட்டுமல்லாமல் 1971-இல் மீண்டும் இந்திய-பாகிஸ்தான் போர் ஏற்பட்டபோது, தனுக் பகுதியைத் தாக்கினால் வெற்றி பெற முடியாதென்று உணர்ந்து அதன் அருகில் உள்ள லோகோவால் என்ற இடத்தைத் தாக்கினர். இந்திய ராணுவ வீரர்கள் 120 பேர் மட்டுமே அச்சமயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நமது ராணுவத்தைவிட பலமடங்கு அதிக எண்ணிக்கையிலும், அதிநவீன பீரங்கிகளுடனும் அவர்கள் திடீரென்று தாக்கினர். தனுக் மாதாவை வேண்டிக் கொண்டு போரில் வீரத்துடனும் தீரத்துடனும் போரிட்டு பாகிஸ்தானியருக்கு பெருத்த சேதத்தையும் தோல்வியையும் விளைவித்தனர் இந்திய ராணுவத்தினர். பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கி ஓடியது.
தனுக் மாதாவின் மகிமையை அறிந்த பாகிஸ்தான் பிரிகேடியர் ஷாநவாஸ்கான், இந்தியாவின் அனுமதி பெற்று தனுக் மாதாவை தரிசனம் செய்தார். அம்பிகைக்கு வெள்ளிக் கூரையை அர்ப்பணித்தார். 
பாகிஸ்தான் வீசிய வெடிக்காத அந்த குண்டுகளை அந்த கோயிலில் கண்காட்சியாக வைத்திருக்கின்றனர். இன்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில்தான் இக்கோயில் உள்ளது. இந்த அதிசயத்தைக் கண்டவர்கள் இன்றும் மெய்சிலிர்க்கின்றனர். இதைக் கேட்ட நமக்கும் மெய் சிலிர்க்கிறதல்லவா! நம்மைக் காக்கும் தாய் எந்த உருவில் இருந்தாலும், தன்னை பக்தியோடு வணங்குவோரை என்றும் கைவிட்டதில்லை.
தேவை அசைக்க முடியாத நம்பிக்கை! அந்த நம்பிகையுடன் பராசக்தியின் பாதம் பணிவோம். வாழ்க பாரதம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com