நலம் அருளும் நவராத்திரி நாயகி

பட்டீஸ்வரம் என்ற பெயரைக் கேட்டவுடன் நம் எல்லோருடைய கைகளும் கும்பிட நினைப்பது அந்த அஷ்டபுஜ துர்க்கையம்மனே ஆகும். 
நலம் அருளும் நவராத்திரி நாயகி


பட்டீஸ்வரம் என்ற பெயரைக் கேட்டவுடன் நம் எல்லோருடைய கைகளும் கும்பிட நினைப்பது அந்த அஷ்டபுஜ துர்க்கையம்மனே ஆகும். 

"துர்க்கையின் பிறந்த நாள் எது?' என்று கேட்டபோது, "கண்ணனின் பிறந்த நாள் எதுவோ அதுவே..!' என விடை கிடைத்தது. கண்ணனாக உருவெடுக்கவிருக்கும் நாராயணன், கம்சனை வதம் செய்ய நேரம் வந்துவிட்டது என்று முடிவெடுத்துவிட்டான். 

தனக்கு முன், தன் அம்சமான பலராமனை, வசுதேவரின் இரண்டாவது மனைவியான ரோஹினியை முதலிலேயே அந்த சிறைச்சாலைக்கு வரச்சொல்லி, அவளது வயிற்றில் ஏழாவது குழந்தையாகப் பிறக்கச் செய்தான். 
பின் யோக மாயாவை அழைத்து, "நீ சென்று நந்தகோபனின் மகளாக நான் பிறக்கும் போதே நீயும் பிறந்துவிடு. நான் சிறைச்சாலையில் வசுதேவருக்கு மகனாகி, பின்னர் நந்தகோபனிடம் வருகிறேன். நான் பிறக்கவிருக்கும் சிறைச்சாலைக்கு நீ செல்வாய்' என்றார். எப்படிப்பட்ட திட்டம் பாருங்கள்! 

இந்த விவரமெல்லாம் அறியாத கம்சன் "வருவது 8-ஆவது பிள்ளை. அதை நம் கையாலேயே கொன்றுவிட்டால், எப்படி அந்தக் குழந்தை நம்மைக் கொல்ல முடியும்?' என்று காத்துக் கிடந்தான்.

அந்த நாளும் வந்தது. குழந்தைகள் மாற்றப்பட்டனர். "ஆண் குழந்தை பிறக்கும் போது அழாது என்றும், பெண் குழந்தை மட்டுமே பிறக்கும் போது அழும்' என்பதும் பொதுவான உண்மை. வசுதேவர் இருந்த சிறைச்சாலையில் குழந்தை வீறிட்டு அழுதது. 

காவலர்கள் சென்று "எட்டாவது பெண் குழந்தை பிறந்து விட்டது' என்று கம்சனிடம் கூறினர். ஓடோடி வந்தான் கம்சன். ஆணுக்குப் பதில் பெண் குழந்தை இருப்பதைப் பார்த்து திகைத்தான். 

பிறகு "ஆணாய் இருந்தால் என்ன? பெண்ணாய் இருந்தால் என்ன? நாம் தான் அதைக் கொல்லப் போகிறோமே' என்று அக்குழந்தையின் இரண்டு கால்களையும் தன் இரு கையால் பிடித்து மேலே பந்தினைப் போல் தூக்கிப் போட்டு வெட்டுவதற்கு வாளினை ஓங்கினான். 

மேலே சென்ற அந்தக் குழந்தை விஸ்வரூபம் எடுத்து அண்ட வெளியில் எட்டு கைகளுடன் தோன்றி, "ஏ அற்பனே! என்னையா வெட்ட வருகிறாய்? உன்னைக் கொல்ல பிறந்து வந்தவன் வேறெங்கோ சுகமாக வளர்கிறான். நீ அவன் கையால் சாகப்போவது உறுதி. என்னைத் தொட்டவுடனேயே நீ பொடிப் பொடியாகி இருப்பாய். ஆனால், நீ தெரிந்தோ தெரியாமலோ என் இரு கால்களையும் பிடித்து (சரணாகதி தத்துவத்தில்) தூக்கிப் போட்டாய். என் காலை பிடித்தவர்களை நான் சம்ஹாரம் செய்வதில்லை. ஒழிந்து போ விட்டு விடுகிறேன்' என்று கூறி மறைந்தாள். அந்த மாயா சொரூபம்தான்  "விஷ்ணு துர்கை' எனப்படும் "துர்கா பரமேஸ்வரி' ஆவாள். 

பட்டீஸ்வரம் அருகே உள்ள பழையாறை சோழர்களின் தலைநகராக நீண்ட காலம் இருந்தது. பழையாறையின் எல்லை பட்டீஸ்வரம் உள்ளடக்கிய தராசுரம் வரை இருந்தது. ராஜராஜ சோழன் காலத்திற்குப் பின் தஞ்சை தலைநகராயிற்று. அதுவரை பழையாறை பெரும் வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்தது. 

ஒவ்வொரு முறை போருக்குச் செல்லும்போதும் அரண்மனை வாயிலில் குடி கொண்டிருந்த கொற்றவை தெய்வத்திற்கு களபலி கொடுத்துவிட்டுச் செல்வார்கள். 

ஒவ்வொரு போரிலும் வெற்றி மேல் வெற்றிதான். காலம் மாறியது. தலைநகர் மாறியது. பின்னர் சோழ மன்னர்களின் ஆட்சி முடிவுற்று, அரண்மனை அழிந்து மண்மேடானது. அந்த கொற்றவை தெய்வமும் மண்ணோடு மண்ணாய்ப் புதைந்தாள். 

காஞ்சி மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் இந்தப் பகுதியில் ஒருமுறை சாதுர்மாஸ்ய விரதம் இருந்தபோது, இப்பகுதியின் சரித்திரச் சிறப்பை உணர்ந்து தேடியதில், கொற்றவை தெய்வம் புதையுண்டு கிடந்ததாகவும், அவரது பெருமுயற்சியால் சோமனாதேஸ்வரர் கோயிலில் (ஆவூர் செல்லும் வழியில் பழையாறையில் உள்ளது) பிரதிஷ்டை செய்ததாகவும் கூறுகின்றனர். 

சரித்திர ஆய்வாளர்களும் "சோமனாதேஸ்வரர் கோயிலில் எட்டு கரங்களுடன் அருள்பாலிப்பது புதையுண்டிருந்த துர்க்கையே' என்கின்றனர். 

பட்டீஸ்வரத்தில் உள்ள கொற்றவை தெய்வத்தை விஷ்ணு துர்க்கை, துர்க்கா லட்சுமி, நவசக்தி நாயகி, நவயோக நாயகி, நவகோடி நாயகி, நவராத்திரி நாயகி என்றெல்லாம் பல பெயர்களில் பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர். 
இக்கோயில் நான்கு வாயில்களில் அழகிய கோபுரங்களுடன் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஞானத்தை அள்ளித்தரும் ஞானாம்பிகையுடன் தேனுபுரீஸ்வரர் உறைந்து அருள்கடாக்ஷம் செய்து வருகிறார். 

காமதேனுவின் மகளான பட்டி இங்கு ஞானாம்பிகையின் தவத்திற்கு உதவ வந்துள்ளார். 

அவளது பணியின் தன்மையை உலகறியச் செய்வதற்காக இவ்வூர் "பட்டீஸ்வரம்' என்றாயிற்று. ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமர் ராமநாதரை பிரதிஷ்டை செய்த பின்னர் இங்கு வந்து வில்முனையால் கோடிதீர்த்தம் உண்டாக்கி வழிபட்டார். மேலும் விஸ்வாமித்திரர் "பிரும்ம ரிஷி' பட்டம் பெற்றது இத்தலத்தில்தான். மார்க்கண்டேயரும் இத்தலத்தில் வழிபட்டதாக வரலாறு உள்ளது. 

தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில்தான் ஈசன் ஞானசம்பந்தப் பெருமானுக்கு முத்துப்பந்தல் அருளினார்.

இக்கோயில் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், சுவாமிமலையில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கோயில் காலை 6 மணி முதல் பகல் 12.30 வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும். 

இவ்வாண்டு நவராத்திரி நாளை (அக். 17) தொடங்குகிறது. சாந்தசொரூபியும், அருளை அள்ளித் தருபவளான கொற்றவை தெய்வம், நவராத்திரி நாயகி விஷ்ணு துர்க்கையை வழிபடுவோம்; அவளது அருளினைப் பெறுவோம்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com