மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்...: வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் - 21

இடது பக்க மூக்கின் வழியாக மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வசப்படுத்தி, உள்ளேயே அடக்கினால், உடல் பளிங்கு போல் ஒளி வீசித் திகழும்.
மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்...: வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் - 21

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கு ஒத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திரு அருள் பெற்றால்
வளியினும் வேட்டு வெளியனும் ஆமே 
(பாடல்: 569)

பொருள்: இடது பக்க மூக்கின் வழியாக மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வசப்படுத்தி, உள்ளேயே அடக்கினால், உடல் பளிங்கு போல் ஒளி வீசித் திகழும். முதுமை வந்தாலும் உடல் இளமை மாறாதிருக்கும். குருவின் திருவருள் துணை இருக்குமானால், இந்தப் பயிற்சி உடையவரின் உடல் காற்றை விட இலேசாகும். போற்றத்தக்க மேன்மை உடையவராக, அவர் எங்கும் செல்லும் ஆற்றல் உடையவராவார்.

பிராணாயாமம், யோகா  முதலியவற்றை திருமந்திரம் மிக விரிவாகப் பேசுகிறது. இப்பாடலில், பிராணாயமம் செய்தால், உடல் இளமையோடு இருக்கும் என்கிறார் திருமூலர்.

சிலர் பிராணாயாமம் செய்தாலும் எப்படிச் செய்ய வேண்டும் என்ற புரிதல் இல்லாமல், தாங்கள் கேள்விப்பட்டதை  வைத்து செய்கிறார்கள் என்பதால்...

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவார் இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறி அது ஆமே 
(பாடல் : 571)

பொருள்: இடப்பக்கம் மூச்சை உள்ளிழுத்து, இறக்கி, வலப்பக்கம் வழியாக வெளி விட்டு, இரு பக்கமும் அதே போல் செய்து, ஆசனம் செய்யினும், மூச்சை உள்ளுக்குள் நிறுத்தும் கால அளவு கணக்கை பலர் அறிவதில்லை. மூச்சுக் காற்றை உள் நிறுத்தும் கால அளவும், கணக்கும் தெரிந்த அறிவாளர்கள் எமனையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் ஆற்றலாளர் ஆவார்.

இவ்வாறு கூறும் திருமூலர், மூச்சுப் பயிற்சியை எப்படிச் செய்ய வேண்டும், எவ்வளவு கால அளவு மூச்சை உள்ளே நிறுத்த வேண்டும் என்றும் திருமந்திரத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே 
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக் 
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு 
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே  
(பாடல்: 573)
பொருள்: இடது பக்க நாசித் துவாரம் வழியாக பதினாறு மாத்திரைப் பொழுது மூச்சை உள்ளிழுத்து, அறுபத்து நான்கு மாத்திரை அளவு கும்பகமாக வேள்வி செய்து, வலது பக்கம் நாசித் துவாரம் வழியாக முப்பத்து இரண்டு மாத்திரை அளவு வெளியேற்றினால் உண்மைப் பயனை அடைய உதவும்.
வலது பக்க நாசித் துவாரத்தை மூடிக் கொண்டு, இடது பக்க நாசித் துவாரம் வழியாக காற்றை உள்ளே இழுக்க வேண்டும். பதினாறு மாத்திரை அளவு, பதினாறு நொடிகள் அப்படி மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். பின்,  இடது பக்க நாசித் துவாரத்தையும் மூடி,  அறுபத்து நான்கு மாத்திரை அளவு காற்றை அப்படியே உள்ளே வைத்திருக்க வேண்டும். இதற்கு "கும்பகம் செய்தல்' என்று பெயர். பின், இடது பக்க நாசித் துவாரத்தை மூடிக் கொண்டு, வலது பக்க நாசித்துவாரம் வழியாக முப்பத்து இரண்டு மாத்திரை அளவு காற்றை வெளியிட வேண்டுமாம்.
அதாவது 16 : 64 : 32 -இதுவே பிராணாயாமம் செய்வதற்கான சரியான கால அளவு. ஆரம்ப நிலையில் இது மிகுந்த சிரமமாக இருக்கும் ஆகையால் அதில் கால்பங்கு 4 :
16: 8 என்ற அளவில் பயிற்சியை ஆரம்பிக்கலாம். 
பின்னர் அரைபங்கு 8 : 32 : 16  என்று அதிகரித்து, அடுத்தடுத்த நிலையில் பயிற்சி பெறலாம். அப்படித் தொடர்ந்து செய்யும் போது, திருமூலர் சொன்ன, எமனை வென்று நீண்ட ஆயுளைத் தரும் கால அளவை மிக எளிதாக எட்டலாம். 
நமது ஆன்மிக வழிபாட்டு முறைகள், ஆரோக்கியத்தையும் அடிப்படையாகக் கொண்டே வகுக்கப்பட்டிருக்கின்றன. விரதம் இருக்க வேண்டும், கோயில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வர வேண்டும், விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்பதெல்லாம் ஆன்மிகம் மட்டும் அல்ல; நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தரக் கூடியவை.
வெளி நாடுகளில், பணம் வாங்கிக் கொண்டு நெருப்பில் (நீறு பூத்த மிதமான சூடு உடைய நெருப்பு) நடக்க பயிற்சி அளிக்கிறார்கள். உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறதாம் அப்பயிற்சி. அது வேறொன்றுமில்லை...! நம் ஊர் கோயில் திருவிழாக்களில் நடக்கும் தீமிதிதான்.
திருமூலர் கூறியுள்ள இந்த மூச்சுப் பயிற்சியை இன்று அறிவியல் மருத்துவ உலகமும் நமக்கு வலியுறுத்துகிறது, "உடல் நலத்திற்கு மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்' என்று.
 நம் ஆன்மிகம் நமக்கு வலியுறுத்தும் பலவும், பின்னாளில் அறிவியலால் உண்மை என சொல்லப்பட்டவையே.
"உலகம் உருண்டை' என அறிவியல் சொல்லும் முன்பே, "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்' என நம் திருவாசகம் சொல்லி விட்டது.
நம் வழிபாட்டு முறைகள் எப்போதும் நம்மை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளோடும் வாழ வைக்கும் படியே அமைந்திருக்கின்றன. 
எங்களுக்கு மூச்சுப் பயிற்சி செய்ய நேரமே இல்லை என்பவர்களுக்காகத்தான் நம் மந்திரங்களையே, மூச்சுப் பயிற்சியோடு இருக்கும் படி அமைத்தார்கள் அருளாளர்கள். "ஓம்' என தினமும் பலமுறை சொல்வதே மிகச் சிறந்த மூச்சுப் பயிற்சிதான்.
"அங்கம் ஹரே' என தொடங்கும் கனகதாரா ஸ்தோத்
திரமும் அப்படியானதுதான்.
தினமும் விளக்கேற்றும் போது சொல்ல வேண்டிய,
"இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயமே'  
என்ற அப்பரின் தேவாரப் பாடலும், அதைச் சொல்லி முடிக்கும் வரை மூச்சு வெளியே வராத படி இருக்கும். 
இப்படி நிறைய மந்திரங்கள், பதிகங்கள் குறிப்பிட்ட கால அளவு வரை மூச்சை உள் நிறுத்தி பிறகு வெளிவிடும்படியே அமைக்கப்பட்டிருக்கின்றன.
மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால், அவை நம்மை இளமையோடு வைத்திருக்கும். உடலுக்கு "ஒளி' (தேஜஸ்) கிடைக்கும். நீண்ட ஆயுளும் தரும் என திருமந்திரம் சொல்கிறது. அதைப் பின்பற்றி என்றும் இளமையோடும், ஆரோக்கியத்தோடும் இருப்போம்.

(தொடரும் )

(கட்டுரையாசிரியர்:  இலக்கியச் சொற்பொழிவாளர்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com