அற்புதங்களின் பொற்புடை சிற்பி 

அற்புதம் புரியும் அரிய சிற்பங்களைச் செதுக்கும் பொற்புடைய சிற்பிகளான சீரிய ஆசிரியர் நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 -ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
அற்புதங்களின் பொற்புடை சிற்பி 

அற்புதம் புரியும் அரிய சிற்பங்களைச் செதுக்கும் பொற்புடைய சிற்பிகளான சீரிய ஆசிரியர் நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 -ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் - மாணவர் உறவினை உற்றுநோக்கினால் அற்புதங்களை விளைவிக்கும் பொற்புடையவர்களாக ஆசிரியர்கள் திகழ்ந்ததை, புகழ் பெற்றவர்களாக பூவுலகில் வாழ்ந்ததை வரலாறு கூறும்.
கல்வி நம்மைப் பாதுகாக்கும்; செல்வத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இதையறியாது உலகம் பணத்தைப் பேணும்; ஆசிரியர் குணத்தைப் பேணுவார். அன்பு, அடக்கத்துடன் பாரபட்சம் இல்லாது மாணவர்களின் திறனறிந்து, ஊக்கமூட்டி, ஆற்றலை வளர்த்து ஆக்க வழியில் உதவுவார். மாணவர்களுக்கு முன்மாதிரியாக நல்ல ஒழுக்க சீலராக விளங்குவார். அந்த நல்ல வழியில் மாணவர்களையும் நல்லொழுக்கமுடைய நற்குடி மக்களாய் பொற்புடன் வாழ வழி காட்டுவார். உதட்டில் உறவும் பல்லில் பகையுமாய் இருக்க மாட்டார். மாணவர்களின் உள்ளத்தைப் பண்படுத்தி, கள்ளமில்லா கல்வி விதையை நட்டு, உயர் விளைச்சல் காண துயரைத் தூக்கி எறிந்து, களையெடுத்து, இலக்கை எட்டும் உறுதியாம் உரமிட்டு, நாட்டிற்கு நற்பணியாய் அற்புதமாய் அரியன புரிவதற்கு உரியவர்களாக்குவார்.
இத்தகு மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர் எத்தகையவராக இருக்க வேண்டும்? எப்பொழுது பாடம் கற்பிக்க வேண்டும்? எப்பொழுது விலகி நின்று மாணவர்களைப் படிக்க விட வேண்டும்? அவர்கள் விழித்து விழி பிதுங்குவதை அறிந்து, விளக்கம் சொல்லி விழி திறந்து வழியறிய உதவ வேண்டும். விழிதிறந்து வழிகாட்டிய ஆசிரியரை அந்த மாணவன் எண்ணி எண்ணி இறுமாப்பு எய்திடச் செய்ய வேண்டும். செய்நன்றி மறவாமை ஆசிரியரால் கற்பிக்கப்பட வேண்டிய அருங்குணங்களில் ஒன்று. 
வரலாற்றாசிரியர் வாக்கிதி தானிய வணிகத்தில் ஈடுபட்டு ஒரு லட்சம் திர்ஹம்களை இழந்து கடனாளியானார். கடனைத் திருப்பி செலுத்த இயலாமல் இன்னலுக்கு ஆளானார்.
அமைச்சர் யஹ்யா பர்மகீயிடம் உதவி கேட்டு பாக்தாத் சென்றார். அமைச்சர் ஆசிரியருக்கு விருந்தளித்தார். விருந்து முடிந்து ஆசிரியர் அமைச்சரின் கைகளை முத்தமிட முயன்ற பொழுது, அமைச்சர் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டார். 
ஆசிரியர் வாக்கிதி ஏமாற்றத்துடன் வெளியேறினார். அமைச்சரின் பணியாள் வந்து பை ஒன்றைக் கொடுத்து மறுநாளும் உணவருந்த வரும்படி அமைச்சரின் அழைப்பைக் கூறினார். 
இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் முதல் நாள் போலவே நடந்தது. நான்காம் நாள் உணவருந்தி முடிந்ததும் அமைச்சர் தனது கைகளை முத்தமிட ஆசிரியரை அனுமதித்தார். ஆசிரியருக்கு உரிய மரியாதை செய்த பின்னரே கைகளைக் காட்ட வேண்டும் என்றே மூன்று நாள்களும் கையைப் பின்னுக்கு இழுத்ததாக அமைச்சர் கூறினார். பின்னர், ஆசிரியரின் கடன் தீர இரண்டு லட்சம் திர்ஹம்களைக் கொடுத்தார்.
செல்வச் செருக்கோடு ஆர்வமின்றி கல்வி கற்க முனைந்தால் வெற்றி கிட்டாது. பணிவும், பொறுமையும், வறுமையும் உள்ளவர்களே கல்வி கற்பதில் வெற்றிபெறுவர் என்று விளம்பினார்கள் இமாம் ஷாபீயீ (ரஹ்). இக்காலத்தில் லட்சம் கொடுத்து லட்சம் ஈட்டும் லட்சிய நோக்கில் கற்போர் வெற்றி கிட்டாமல் வீணாவதைக் காண்கிறோம். 
இதனைக் குறித்து யஹ்யா இப்னு கதீர் (ரஹ்) இயம்பியது: உடலை வளர்த்துக் கொண்டே கல்வியைக் கற்க முடியாது. இப்பொன்மொழி மீதூண் மிக்க சுவையோடு எக்காலமும் உண்பதில் அடங்காத ஆர்வம் உடையோர் தக்க முறையில் கற்க மாட்டார் என்பதை விளக்குகிறது.
பிற்றை நிலை பிறழாது கற்றதை "ஓர் அரசனைக் கண்டு அஞ்சுவது போல் எங்கள் ஆசிரியர் இப்ராஹீம் (ரஹ்)அவர்களிடம் அஞ்சி, பணிந்து படித்தோம்' என்று உரைக்கிறார் முகீரா (ரஹ்). "கற்பிக்கும் ஆசிரியரை மதிக்காதவர் கற்றலில் வெற்றிபெற முடியாது' என்று உரைக்கிறார் இமாம் அபூ யூசுப் (ரஹ்).
சூபி தத்துவத்தில் முடிசூடா மன்னரான மெளலானா ரூமி அவரின் ஆசிரியரான ஸம்ஸ் தப்ரேஸ் அவர்களிடம் அக்கால குருகுல முறைப்படி 12 ஆண்டுகள் பணிபுரிந்து பயிற்சி பெற்றார்; கல்வி கற்றார். பயிற்சி முடிந்த பிறகு ஆசிரியரைப்பற்றி மெளலானா ரூமி ""நான் சமைக்கப்படாமல் இருந்தேன். ஸம்ஸ் தப்ரேஸ் அவர்கள் என்னைச் சமைத்தார்கள். நான் சாம்பலாகி விட்டேன்'' என்று கூறினார்கள்.
ஷகீக் பல்கி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 1700 ஆசிரியர்களிடம் பாடம் பயின்றார். இவர் படித்த புத்தகங்களை ஒட்டக மந்தை சுமந்து சென்றது. 
எந்த ஐயத்துக்கு யார் விளக்கம் கேட்டாலும் நூல்களின் நுண்ணிய ஆதாரங்களுடன் திண்ணமாக பதிலளிப்பார். முன்னோர் தோண்டிய கிணறுகளில் முக்குளித்து மூழ்கி அள்ளிப் பருகிய நீரைப் போல், அலைந்து திரிந்து அறிஞர்கள் நிரப்பிய நிறப்பமான நூல்களில் சிறப்பான கருத்துக்களைக் கற்றது "என் பாத்திரத்தில் பிறர் இட்ட பிச்சை' என்றும், "பெற்ற பிச்சையை பிறரோடு பகிர்ந்து உண்பது போல் நான் பெற்ற அறிவை பிறருக்குக் கற்பிப்பதே என் கடன்' என்றும் கற்பித்தார் கல்வி ஞானி ஷகீக் பல்கி.
எத்தனை கற்றாலும் அத்தனையையும் மொத்தமாக, சுத்தமாக, சத்தமின்றி, பத்திரமாய் பகிர்ந்து வழங்கும் வள்ளல்களான ஆசிரியர்களை எள்ளளவும் குறையாத உள்ளன்போடு, உயரிய மரியாதை கொடுத்து, உலகில் உயர்வு தரும் உயர் கல்வியை உரிய முறையில் கற்க வேண்டும்; அரிய வாழ்வு வாழ வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com