பொருநை போற்றுதும்! - 110

ராஜபதியைத் தென் காளஹஸ்தி என்றே அழைக்கின்றனர்:  பிற்காலத்தில், அவ்வப்போது சிறு சிறு திருப்பணிகள் நடைபெற்று வழிபாடுகள் நடைபெற்றன.
பொருநை போற்றுதும்! - 110
Updated on
2 min read


ராஜபதியைத் தென் காளஹஸ்தி என்றே அழைக்கின்றனர்:  பிற்காலத்தில், அவ்வப்போது சிறு சிறு திருப்பணிகள் நடைபெற்று வழிபாடுகள் நடைபெற்றன. சமீபத்தில், கோயில் பெரிதாகக் கட்டப்பெற்றுப் பொலிவுடன் 
திகழ்கிறது.

நவகோள் கணக்கில் இது கேதுவுக்கான திருத்தலம் ஆகும். கேதுத் தலமாக விளங்கும் திருக்காளஹஸ்தியைப் போன்றே இதுவும் கேதுத் தலம் என்பதால், ராஜபதியைத் தென் காளஹஸ்தி என்றே மக்கள் அழைக்கின்றனர். இதற்கேற்ப, இங்கு அருள்பாலிக்கும் விநாயகருக்குக் "காளத்தி விநாயகர்' என்று திருநாமம். 

திருக்கோயிலுக்கு எதிரில் இருக்கும் பாலாவித் திருக்குளத்தில், தாமிரவருணி நீரோடு பொன்முகலித் தீர்த்தமும் (ஆந்திர மாநிலக் காளஹஸ்திப் பகுதியில் ஓடுகிற ஸ்வர்ணமுகி ஆற்றுக்குத்தான், தமிழில் "பொன் முகலி' என்று பெயர்) கலப்பதாக ஐதீகம். எனவே, இத்தீர்த்தமானது "முக்குளம்' (பாலாவி + பொருநை + பொன்முகலி) என்று வழங்கப்பெறுகிறது. சுவாமி சந்நிதியில், அருள்மிகு கைலாயநாதர் உயரமான சதாசிவ லிங்க மூர்த்தமாக அருள்பாலிக்கிறார். அம்பிகை செளந்தரநாயகிக்கு, அழகம்மை என்றும் திருநாமம். 

ராஜபதியை விட்டு வெளியில் வந்து சுற்றிலும் பார்வையைச் சுழற்றினால், ஏராளமான ஊர்கள் கவனத்தைக் கவர்கின்றன. தாமிராவின் வடகரையிலும் தென் கரையிலும் வரிசை கட்டி நிற்கும் அழகான சிற்றூர்கள். பண்ணைவிளை, ஆறுமுகமங்கலம், வாழவல்லான், சேதுக்குவாய்த்தான், நாசரேத், ஆறுமுகநேரி, உமரிக்காடு, குரும்பூர்... இன்னும் இன்னும் ஏராளமான ஊர்கள். 

உமரிக்காட்டிற்கு வடக்காகக் கொற்கை; ஆற்றைக் கடந்து தெற்காக ஆற்றூர். "கொற்கை' என்னும் பெயர், வரலாற்றுக் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல.. வாருங்கள், பண்டைப் பெருமை மிக்க கொற்கைக்குப் பயணம் போகலாம்: 

கொற்கை - பாண்டிய நாட்டின் பெருமைக்குரிய துறைமுக நகரம். சங்க இலக்கியங்களான அகநானூறும் மதுரைக் காஞ்சியும் இந்நகரத்தைப் பற்றி நிரம்பப் பேசுகின்றன. கொற்கையின் கடற்கரை, உயர்ந்த மணல் திட்டுகளைக் கொண்டிருக்கும். 

இவ்வூரை ஒட்டிய கடற்கரையில், முத்துச் சிப்பிகள் நிறையக் கிடைக்கும். முத்துக் குளிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், மீன் பிடிப்பவர்களுக்கும்கூட இந்தச் சிப்பிகள் கிடைக்கும். உயர்வகை முத்துகளோடு வலம்புரிச் சங்குகளும் இங்குக் கிட்டின. கொற்கைக் கடற்கரையில் உப்பு வணிகர்கள் இருப்பார்கள். அவர்களின் பிள்ளைகள், கடற்கரைக் கிளிஞ்சல்களை வைத்து விளையாடுவர். அருகிலிருக்கும் குரங்குக் குட்டிகள், கிளிஞ்சல்களுக்குள் முத்துகளை இட்டு, கிலு கிலு என்னும் ஓசை வரும்படி ஆட்டும். "நற்கொற்கை' என்றே இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. 

இப்போதைய காலத்தில் திருச்செந்தூரிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் இருக்கும் கொற்கை, பண்டைக் காலத்தில் கடற்கரை நகரமாகத் திகழ்ந்தது. அதுமட்டுமல்லாமல், பொருநையாளும் இவ்வூருக்கு அருகில்தான் கடலில் சங்கமித்துள்ளாள். காலப்போக்கில், ஆற்று மணல் குவிய, கடலும் பின்வாங்க, இதனால் இப்பகுதி மேடிட்டதால், துறைமுக நகரம் என்னும் சிறப்பை இழந்த கொற்கை, உள் பகுதியிலிருக்கும் சிற்றூராகவும் மாறிவிட்டது. சில காலம் முன்புவரைகூட, கொற்கைச் சிற்றூரின் தரைப் பகுதியில், சிறிது ஆழத்திலேயே கிளிஞ்சல்களும் சிப்பிகளும் கிடைத்தனவாம். இப்பகுதியில் கடல் இருந்ததற்கான அடையாளம் இது. 

கொற்கையைப் பற்றிச் சங்க நூல்கள் பெருமைபட பேசுகின்றன என்றால், சங்க காலத்திற்கும் முன்னரே இவ்வூர் புகழ்பெற்றிருக்கவேண்டும்.  

கிரேக்கப் பதிவுகளிலும் இவ்வூரின் பெருமை புலப்படுகிறது. கி.பி. முதல் நூற்றாண்டில், செங்கடல் பகுதியிலிருந்து இந்தியாவின் கிழக்குக் கரைவரை வந்த கடல்பயணரின் பதிவுகள், பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்ரியன் ஸீ (எரித்ரியக் கடலின் பயணப் பதிவுகள்) என்னும் நூலில் கிடைக்கின்றன.  2-ஆம் நூற்றாண்டில், டாலமி என்னும் நிலநூல் அறிஞரும் இங்கு வந்து பார்த்துத் தம்முடைய கருத்துகளைப் பதிவித்துள்ளார். 

இரண்டு பதிவுகளிலும் கொற்கை என்பது மிகப் பெரிய வணிக நகரம் என்று விவரிக்கப்படுகிறது. அரபிக் கடல் பகுதியிலிருந்து குமரி முனையைச் சுற்றிக் கொண்டு கிழக்குக் கரைக்கு வந்த கிரேக்க வணிகர்கள், கொற்கைத் துறை முகத்தைத் தான் அடைந்துள்ளனர். மன்னார் வளைகுடாவைக் "கொற்கை வளைகுடா' என்றே அழைத்துள்ளனர். 

கருங்கடலின் புகழ்பெற்ற துறைமுகங்களில் ஒன்று கோல்சிஸ் என்னும் நகரமாகும். கொற்கைக்கு "இந்தியக் கோல்சிஸ்' என்னும் பெயரை கிரேக்கப் பதிவுகள் சில குறிப்பிடுகின்றன. கிறித்துவுக்குச் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர், வெண்கல நாகரிகத்தின் மையமாகக் கருங்கடல் கோல்சிஸ் விளங்கியது. 

ஆயின், அதற்கும் முன்னரே கொற்கையோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்த எத்தீனிய அரசர்களும் பாரசீக அரசர்களும் கொற்கையின் பெயர்மீது கொண்ட பிடிமானத்தாலேயே கருங்கடல் துறைமுகத்துக்குக் கோல்சிஸ் (கொற்கை - கொல்சி - கோல்சிஸ்) என்று பெயர் சூட்டியதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

பாண்டிய நாட்டின் புகழ்மிகு துறைமுகமாக விளங்கியபோது, மாடமாளிகைகள், பலதுறைத் தொழிலாளர் வாழ்தெருக்கள், பெருந் தொழிற்சாலைகள், வர்த்தக மையங்கள், ஏற்றுமதி - இறக்குமதி பண்டகசாலைகள், கடைத்தெருக்கள், திருக்கோயில்கள் ஆகியவற்றோடு அரச குடும்பத்தினர் வாழக்கூடிய அரண்மனை வளாகங்களையும் கொற்கை கொண்டிருந்தது. பாண்டிய நாகரிக வளத்தின் உயிர் நாடியாகக் கொற்கை நகரம் விளங்கியது என்று மா. ராசமாணிக்கனார் மொழிகிறார். 

பாண்டிய அரசுக்குப் பெருஞ்செல்வத்தைக் கொற்கை பெற்றுத்தந்தது. இதனால், பாண்டிய மன்னர்கள், "கொற்கையாளி' என்றும் "கொற்கைக் கோமான்' என்றும் பாராட்டப்பட்டனர். 

(தொடரும்)  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com