கொசஸ்தலையில் குடியிருந்த கோமான்!

முற்காலத்தில் சித்தர்களின் ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, அதே இடத்தில் கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து வழிபட்டு வரும் வழக்கம் இருந்தது.
கொசஸ்தலையில் குடியிருந்த கோமான்!

முற்காலத்தில் சித்தர்களின் ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, அதே இடத்தில் கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து வழிபட்டு வரும் வழக்கம் இருந்தது. அவ்வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ராமன்கோயில் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீராமலிங்கேஸ்வரர் ஆலயம்.

கடந்த 2002-இல் ராமன் கோயில் ஊர்மக்கள் ஒரு பஜனை மடம் கட்டும் பணிக்காக கொஞ்சம் மணல் அள்ளும் பொருட்டு, கொசஸ்தலை ஆற்றுப் பகுதிக்குச் சென்றனர். அங்கு புதர்கள் மண்டிய இடத்தில் மிகவும் சிதிலமடைந்த ஓர் ஆலயம் இருந்ததற்கான சுவடுகள் தெரிந்தன. தொடர்ந்து தேடியபோது, புதரின் நடுவே ஆவுடையாருடன் கூடிய அழகிய சிவலிங்கத்தைக் கண்டனர். 

பஜனை மட வேலைகள் முடிந்த பிறகு சிவனுக்கு ஓர் ஆலயம் எழுப்ப சங்கல்பித்தனர். அங்கு பள்ளம் தோண்டியபோது சுவாமி சந்நிதிகள் இருந்ததற்கான அடையாளமும், ஒரு தாழி போன்ற அமைப்பும், திருவோடுகள் போன்றவையும் தென்பட்டன. அது ஒரு மகானின் ஜீவ சமாதியாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். 

பின்னர், அதன் மேல் புதிய சிவாலயத்தை எழுப்பினர். அதுவே இப்போது நாம் காணும் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீராமலிங்கேஸ்வரர் ஆலயமாகும். கிராமத்தின் பழைய பதிவேடுகளிலும் "ராமன் கோயில் கிராமம்' என்ற பெயரே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

இந்த ஆலயத்தைச் சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்டமாசித்திகள் வழிபட்ட எட்டு சிவாலயங்கள் இருப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. சிவன் கோயில் அருகில் ஒரு கி. மீ. தூரத்தில் பழைமையான கல்யாண ராமர் ஆலயம் அமைந்துள்ளது. வைணவ}சைவ சமய ஒற்றுமைக்கு இக்கிராமம் முன்மாதிரியாகத் திகழ்கிறது. பஞ்சராம சேத்திரங்களில் ஒன்று எனவும் கூறுகின்றனர். 

ராமபிரான் பாதம்பட்ட புண்ணிய பூமி. சிவன் கோயிலில் உள்ள மூலவர் 11 பட்டைகளுடன் ஏகதச ருத்ரர்களை உள்ளடக்கிய ருத்ரலிங்கமாக "தாராலிங்கம்' என்ற அமைப்புடன் வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத ஓர் அதியற்புதப் பிரதிஷ்டையாகும். இத்தகைய லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்கள் அளவிடமுடியாது என்று பழைய சைவ சமய நூல்கள் கூறுகின்றன.

இந்தக் கோயிலுக்கு தெய்வ பிரசன்னம் பார்த்தபோது ஆலயம் அமைந்துள்ள எல்லை உள்ளே நவதுர்க்கையின் நடமாட்டம் இருப்பதும், நவதுர்க்கைகளை வழிபட்ட மாபெரும் சித்தர் ஒருவரின் ஜீவசமாதி ஆலயத்தில் அமைந்திருந்ததும் அறியப்பட்டது. மேலும் இத்தலத்தின் மண்ணை எடுத்து திருநீறு இட்டுக்கொண்டால் எப்பேர்ப்பட்ட துக்கமும், கவலையும், குழப்பங்களும்,  ஆபத்தும் பறந்தோடி விடும் என்பது 
பக்தர்களின் நம்பிக்கை.  

சுவாமி, அம்பாள் உள்பட அனைத்து சந்நிதிகளும் அமைக்கப்பட்டு ஆலயம் புதுப்பொலிவுடன் திகழ்கின்றது. அஸ்வமேத யாகத்திற்கு ஒப்பான இந்த பழைய சிவாலயத் திருப்பணிகளிலும், குடமுழுக்கு ஏற்பாட்டிலும், கிராமமக்கள் ஒத்துழைப்புடன், சென்னை மயிலாப்பூர் சிவாலய வழிபாட்டு மன்றம் பெரும் பங்காற்றியுள்ளது. புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் நாளை (ஜனவரி }30) ஆரம்பமாகின்றன. 

மேலும் விவரங்களுக்கு: 9444917124 மற்றும் 7397479369.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com