காலத்தின் தேவை குடும்ப அமைதி!

உலகில் உருவான முதல் உறவு குடும்ப உறவுதான். கணவன், மனைவி உறவுதான்.
காலத்தின் தேவை குடும்ப அமைதி!

உலகில் உருவான முதல் உறவு குடும்ப உறவுதான். கணவன், மனைவி உறவுதான். அமைதியின் ஆரம்பப் புள்ளியே குடும்பம்தான். வீடுகள் அமைதியாக இருந்தால்தான் வீதிகளும் அமைதியாக இருக்கும்.  வாகனம் ஓட்டுபவர்கள் அமைதியான நிலையில் வீட்டிலிருந்து புறப்பட்டால்தான் விபத்துகளைத் தவிர்க்க முடியும். எனவே எல்லா குடும்பங்களும் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகக் குடும்ப அமைதி இருக்கிறது.

குடும்ப அமைதிக்கு அடித்தளமாக இருப்பது, தம்பதிகளுக்கிடையே மலர வேண்டிய அன்பும், கருணையும்தான். குடும்பம் மனித இதயங்களுடன், உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. அன்பும், கருணையும் அரவணைக்க வேண்டும்.  குழந்தைகள் மீது கருணைப் பார்வையும், அன்பின் இறக்கைகளும் தாழ்த்தப்படும். அமைதியின் வாசல்கள் திறக்கப்படும்.

திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன (30:21).

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் (2:187).

குடும்ப அமைதிக்கு மற்றொரு அடித்தளமாக இருப்பது உறவுகளைப் பேணுதலாகும். ஒரு குடும்பம் என்று சொல்லும் பொழுது அங்கு பெற்றோர்கள், பெரியவர்கள், சிறியவர்கள், நெருங்கிய உறவினர்கள் இருப்பார்கள். பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதலும், சிறுவர்கள் மீது அன்பு காட்டுதலும் அமைதியின் பிறிதொரு திறவுகோலாகும்.

நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: "நம்முடைய சிறுவர்கள் மீது கருணை காட்டாதவரும், நம்முடைய முதியவர்களை மதித்து மரியாதையுடன் நடந்துகொள்ளாதவரும் நம்மைச் சேர்த்தவர் அல்லர்!'

பிறர் செய்யும் தவறுகளை மன்னியுங்கள், படைத்த இறைவன் உங்கள் தவறுகளை மன்னிப்பான். பழி வாங்கும் போக்கை விட்டு விடுங்கள், நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்.  கொடுக்கும் கரங்களாக இருங்கள், இறைவன் உங்களுக்கு வாரி வழங்குவான். 

குடும்ப அமைதி இன்றைய காலத்தின் தேவை. வீடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆனால் மனங்களோ பெரும் விரிசல் அடைத்துள்ளன. போதும் மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம்.  திரும்புவோம் விழுமம் சார்ந்த குடும்ப வாழ்க்கையின் பக்கம்.  அமைதியான குடும்பத்திற்கு நமது ஆணவத்தை தியாகம் செய்வோம்.  முன்மாதிரி குடும்பத்தை உருவாக்குவோம். வீட்டை அமைதி பூங்காவாக மாற்றுவோம்.  வலுவான சமுதாயத்தை உருவாக்க, நமது பங்களிப்பைச் செலுத்துவோம்.

-நசீர் அதாவுல்லாஹ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com