பன்னிருகை வேலவனுக்கு பங்குனி உத்திர விழா 

முருகனுக்குரிய சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுவது பங்குனி உத்திரம். தமிழ் மாதங்களில் 12-ஆம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12-ஆம் நட்சத்திரம் உத்திரம்.
பன்னிருகை வேலவனுக்கு பங்குனி உத்திர விழா 

முருகனுக்குரிய சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுவது பங்குனி உத்திரம். தமிழ் மாதங்களில் 12-ஆம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12-ஆம் நட்சத்திரம் உத்திரம். எனவே, பன்னிரு கை வேலவனுக்கு இது சிறப்பான தினமாகும். முருகன் கோயில்களில் இத்தினத்தில் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

சிவனும் பார்வதியும் சோமசுந்தரர் - மீனாட்சி என்ற திருநாமத்தில் மணம் புரிந்த நாளும் பங்குனி உத்திர நாளாகும். இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, திருமாங்கல்யம் அணிவித்து, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.

இத்தினத்தில் பகற்பொழுது உண்ணாமல், இரவில் பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் "கல்யாணசுந்தர விரதம்' என்பார்கள்.

மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரை, சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து வந்தான். அவன் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். 

அவனை அழிக்க முருகப் பெருமானின் தளபதி வீரபாகு படைகளுடன் முன்சென்றார். அதையறிந்த தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும், மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளைத் தாக்கி அழித்தன. 

இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான், தன் வேலாயுதத்தைக் கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையைப் பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனைக் கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும் என்றும் கூறப்படுகிற இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். முருகன், தெய்வானையைக் கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வத் திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன என்பது ஐதீகம். 

அறுபடைவீடுகளில் பங்குனி உத்திர விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் திருவிழாவும், தேரோட்டமும் சிறப்பு வாய்ந்தவையாகும். 

- வர்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com