பிருந்தாவனத்தை கண்டறிந்த மகா பெரியவர் 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல் குமாரமங்கலம் கிராமம் தென் பெண்ணை நதியின் வட கரையில் அமைந்துள்ளது.
What is Ganga Snanam
What is Ganga Snanam

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல் குமாரமங்கலம் கிராமம் தென் பெண்ணை நதியின் வட கரையில் அமைந்துள்ளது. இவ்வூரின் அருகில் வடவாம்பலம் என்னும் சிற்றூர் உள்ளது. 

இங்கு காஞ்சி காமகோடி பீடம் 58} ஆம் பட்டம் ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதிஷ்டானம் உள்ளது. இவர் கி.பி. 1586 முதல் 1638 வரை பட்டம் வகித்தவர். இவரின் பூர்வீகம் விருத்தாசலம். விஸ்வமஹி என்பவரின் திருமகனார். விச்வேஸ்வரர் என்னும் இயற்பெயரினர். இவரை "விச்வாதிக ஆத்ம போதர்' எனவும், "நவ சங்கரர்' எனவும் "புண்ய ஸ்லோக மஞ்சரி பரிசிஷ்டா' என்ற நூல் கூறும். ஜகத்குருவாகவும், ஸ்ரீசங்கரரின் மறு அவதாரமாகவும் கருதப்பட்டமையால் இவர் நவ சங்கரர் எனப்பட்டார் என்கிறது "சித்தாந்த பிந்து' என்னும் "தசஸ் லோகி வியாக்யானம்'. இவர் ஸ்ரீருத்ரத்திற்கு மிக உயர்ந்த ஒரு வியாக்யானம் அருளியுள்ளார். இவர் காலத்தில் இவர் வேண்டிக் கொண்ட வண்ணம் சதாசிவ பிரம்மேந்திரர் "குருரத்ன மாலிகா'வை இயற்றினார்.

இவர் இந்தியாவெங்கும் யாத்திரைகள் மேற்கொண்டு அருள்நெறி பரப்பினார். காசியில் பல்லாண்டுகள் வாழ்ந்தார். கி.பி. 1638-இல் ஈஸ்வர வருடம் துலா மாதம், கிருஷ்ணாஷ்டமி நாளில் தென்பெண்ணை நதிக்கரையில் வடவாம்பலம் என்னுமிடத்தில் சித்தியுற்றார். 1638-இல் சித்தியுற்ற இம்மகானின் ஆதிஷ்டானம் (பிருந்தாவனம்) காலவெள்ளத்தில் தென்பெண்ணை நதியின் நீர்ப்பிரவாகத்தில் மறைந்தது. 

காஞ்சி காமகோடி பீடத்தின் 68-ஆம் பட்ட ஆச்சார்யாளும், முக்தியடைந்த மஹா பெரியவருமான ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இப்பகுதியில் சஞ்சாரம் செய்யும்போது குருபரம்பரை குறித்த ஆவணங்களுடன் இப்பகுதியில் தேடினார். ஊர்மக்கள் இவர் கூறுவது போன்ற ஆதிஷ்டானம் ஏதும் அப்பகுதியில் இல்லை என்று கூறினர்.

 பரமாச்சார்யாள் விடாப்பிடியாகக் குறிப்பிட்ட ஓர் இடத்தில் தோண்டச் சொன்னார். கொஞ்சம் ஆழம் தோண்டிய உடனேயே, அவ்வூரைச் சேர்ந்த ஸ்ரீ சாம்பசிவ சிரௌதிகள் என்பவர்க்கு அருள்நிலை ஏற்பட்டு ""நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்...'' என்று கூறி மயங்கி விழுந்தார். அவரை மயக்கம் தெளிவித்து விசாரித்த பொழுது ஒரு பெரிய காவியுடை தரித்த மகான் தன் எதிரில் தோன்றி சிவபூஜை செய்ததையும், சற்று ஆழமாகத் தோண்டிய பொழுது தன்மீது படுவதாக உணர்ந்து "நிறுத்துங்கள்'' என்று அவரே கூறியதாகவும் தெரிவித்தார். 

பின்னர், அந்த இடத்தில் பரமாச்சார்யாரே முன்னின்று ஓர் ஆதிஷ்டானம் அமைத்ததுடன், தாம் இப்பகுதியில் சஞ்சாரம் செய்யும்பொழுதெல்லாம் இங்கு வந்து குரு வந்தனம் செய்வார். தற்பொழுதும் இப்பிருந்தாவனம் நன்கு பராமரிக்கப்படுகிறது. இதனைப் பராமரித்து வருபவர்கள் மேல்குமாரமங்கலம் கிராமம் அருள்மிகு பிரஹந்நாயகி சமேத ஸ்ரீரக்ஷôஜாதேஸ்வரப் பெருமான் திருக்கோயில் நிர்வாகிகளும், ஊர்மக்களுமாவர். இத்திருக்கோயில் இவ்வூரின் கிழக்கே அமைந்துள்ளது. 

ஆகம விதிமுறைகளின்படி அமைந்துள்ள இக்கோயில் தென்புற நுழைவு வாயிலைக் கொண்டுள்ளது. மிகவும் உயரமான மதிற் சுவருடன் கூடிய வெளிப்பிராகாரத்தில் முதலாவதாக அமர்ந்துள்ளவர் ஸ்ரீ மங்கள விநாயகர் ஆவார். திருவிழா நாள்களில் முதலில் இவரை வணங்கித்தான் விழாவைத் தொடங்குவர். 

நீண்ட நாள்களுக்குப்பின் இக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்றன. காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியுடன் இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் அண்மையில் விமரிசையாக நடைபெற்றது. 

தற்பொழுது நிகழ்ந்து வரும் மண்டலாபிஷேகம் மார்ச் - 24 இல் நிறைவுறுகிறது. மேலும் விவரங்களுக்கு: ஆவடி ஏ.கே.நடராஜன்-7200310494.

-ஆர்.வி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com