பொருநை போற்றுதும்! 144 : டாக்டர் சுதா சேஷய்யன்

 1910-களின் தொடக்கத்தில், புதுச்சேரி மற்றும் ஃபிரெஞ்சுப் பகுதிகளில் தங்கியிருந்த இந்திய சுதேசிகளை எப்படியாவது பிரிட்டிஷ் எல்லைகளுக்குள் கொணர்ந்துவிடவேண்டும் என்று
பொருநை போற்றுதும்! 144 :  டாக்டர் சுதா சேஷய்யன்

 1910-களின் தொடக்கத்தில், புதுச்சேரி மற்றும் ஃபிரெஞ்சுப் பகுதிகளில் தங்கியிருந்த இந்திய சுதேசிகளை எப்படியாவது பிரிட்டிஷ் எல்லைகளுக்குள் கொணர்ந்துவிடவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் முயன்றது. இவர்களைப் பற்றிப் பல்வேறு தவறான தகவல்களை அப்போதைய ஃபிரெஞ்சிந்திய கவர்னரிடம் கொண்டு சென்று, சுதேசிகளை பிரிட்டிஷ் எல்லைக்கு நாடு கடத்தும்படி வேண்டியது. கவர்னர் மறுத்துவிட்டார்.
 ஆனாலும், சிக்கல் தீரவில்லை. ஐரோப்பாவில் ஃபிரான்ஸுக்குப் பிரச்சனை எழுந்தது. ஃபிரான்ஸின் பரம எதிரியான ஜெர்மனி, ஃபிரெஞ்சுப் பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து, போர்க் கப்பல்களை அனுப்பி அச்சுறுத்தியது. ஜெர்மனியை எதிர்கொள்வதற்கு பிரிட்டனின் துணை வேண்டும். எனவே, பிரிட்டனின் கோரிக்கைகளுக்கு அடிபணியவேண்டிய கட்டாயம் ஃபிரான்ஸுக்கு ஏற்பட்டது. ஃபிரெஞ்சு ஆளுகைப் பகுதிகளில் இருந்த சுதேசிகளை "அந்நியர்கள்' என்று அறிவிப்பதான அந்நியர் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.
 இதன்படி, ஃபிரெஞ்சு எல்லைகளில் தங்களைப் பதிவு செய்துகொள்ளக்கூடிய ஆதரவு சுதேசிகளுக்குக் கிடைக்காது என்று பிரிட்டிஷ் அரசு நம்பியது. ஆதரவில்லாமல், அங்கிருந்து விரட்டப்படுவார்கள் என்றும் எதிர்பார்த்தது. ஆனால், அரவிந்தர், வ. வே. சு. ஐயர், பாரதியார் உள்ளிட்ட அனைவருக்கும் தக்க ஆதரவு கிட்டியது.
 கவர்னர் வழியாகவோ, சட்ட ரீதியாகவோ சுதேசிகளை வெளியேற்ற முடியவில்லை என்னும் தவிப்பிலிருந்த மதராஸ் பிரிட்டிஷார், மேல்மட்டத்திலிருந்து செயல்பட விழைந்தார்கள். தில்லியிலிருந்த பிரிட்டிஷ் தலைவர்களுக்கும் லண்டனுக்கும் கோரிக்கைகள் பறந்தன. பிரிட்டன் கைவசம் இருந்த மேற்கிந்தியத் தீவுகளின் சில பகுதிகளை ஃபிரான்ஸுக்குக் கொடுத்துவிட்டு, இந்தியாவிலிருந்த ஃபிரஞ்சுப் பகுதிகளை பிரிட்டன் எடுத்துக்கொள்ளலாம் என்னும் பரிவர்த்தனைப் பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன. இந்தப் பரிவர்த்தனையில் பாண்டிச்சேரி (புதுச்சேரி) பிரிட்டன் வசமாகிவிடும் என்பது திட்டம். பிரிட்டிஷ் மந்திரிகள் இவ்வாறு பேசத் தொடங்கினாலும், புதுச்சேரியிலிருந்த ஃபிரெஞ்சிந்தியர்களும் சரி, ஃபிரான்ஸ் அதிபரும் சரி, இதனை விரும்பவில்லை. முன்னர் பிரதமராக இருந்து, 1913-இல் ஃபிரெஞ்சு அதிபராகப் பொறுப்பேற்ற ரேமண்ட் புவன்காரே, புதுச்சேரியை விட்டுக் கொடுப்பதை மிகக் கடுமையாக எதிர்த்தார். துய்ப்ளே சிலை இருக்கும் புதுச்சேரியை விடுவதாவது என்று குரலெழுப்பினார்.
 இப்படி, அநேகமாக அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஷாருக்குப் புதிய வழி ஒன்ரு தென்படலானது. 1914-இல், முதலாம் உலகப் போர் தொடங்கியது. ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்கள், பல்வேறு கடல்களிலும் சஞ்சரித்தன. வங்கக் கடலுக்கும் "எம்டன்' வந்தான்.
 ஆமாம், ஜெர்மன் பேரரசக் கப்பற்படையின் போர்க் கப்பலான எஸ். எம். எஸ். எம்டன், 1914 செப்டம்பரில் வங்கக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. கல்கத்தா வரை சஞ்சரித்தது. கிரேக்க, நார்வீஜிய, இத்தாலியக் கப்பல்களைப் பிடித்தது; பிரிட்டிஷ் கப்பல்களை மூழ்கடித்தது. செப்டம்பர் பிற்பகுதியில் மதராஸ் துறைமுகப் பகுதிகளை அடைந்தது. இருட்டடிப்பு ( போர்க்கால பிளாக் அவுட்) ஆணைகள் இருந்தபோதிலும், செப்டம்பர் 22-ஆம்தேதி இரவு பத்து மணி சுமாருக்கு எம்டன் மதராஸ் துறைமுகத்துள் நுழைந்தபோது, விளக்குகள் ஜகஜ்ஜோதியாக எரிந்து கொண்டிருந்தனவாம். எம்டன் வீசிய குண்டுகளில், எண்ணெய்க் கிடங்குகள் பற்றியெரிந்தன; துறைமுகத்தில் நின்ற வணிகக் கப்பல் ஒன்று சிதைந்தது. மதராஸ் மட்டுமல்லாது கிழக்குக் கடற்கரையோர ஊர்களின் மக்கள் பீதியில் உறைந்தனர்.
 முன்னதாக எம்டன் கிழக்குக் கடலோரம் சஞ்சரித்தபோதும், தொடர்ந்து மதராஸிலிருந்து இலங்கையின் மேற்குப் பகுதிகளுக்குத் திரும்பியபோதும், எம்டனுக்கும் சுதேசிப் புரட்சியாளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஆனால், அந்தக் காலகட்டத்தில் புதுச்சேரியிலிருந்த வ. வே. சு, பலவற்றைத் தாம் கற்றுக் கொண்டிருந்தார். தமக்கு ஏற்கெனவே பரிச்சயமாகவிருந்த ஃபிரெஞ்சு மொழியின் இலக்கணத்தை, அரசியல் போர்களின் வரலாற்றை, இந்தியத் தத்துவார்த்தங்களை, இன்னும் பலவற்றைக் கற்றுக் கொண்டிருந்தார். சந்தேகக் கண்கள் சுற்றிலும் சுழன்றுகொண்டிருக்கும்போது, சில மணிநேரங்கள் நண்பர்களோடு கலந்துரையாடுவது, தேசத்தைச் சிந்திப்பது போன்றவை தவிர வேறென்ன செய்ய முடியும்? அவ்வபோது டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு கடலையே நோக்கிக் கொண்டிருப்பார். பொழுதைக் கழிப்பதற்காகச் செய்தாரேயன்றி, எந்தக் கப்பலோடும் இவருக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.
 ஏதாவது வாய்ப்புக் கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்த பிரிட்டிஷாருக்கு இப்போது அவல் கிடைத்துவிட்டது. ஜெர்மனோடு இவருக்குத் தொடர்பிருந்ததாகவும், எம்டனைத்தான் எடை போட்டுக் கொண்டிருந்தார் என்றும் கதை கட்டினார்கள். விளைவு..? அரண்டுபோயிருந்த ஃபிரெஞ்சு அரசு, இவரை நாடு கடத்தலாம் என்னும் நிலை உருவானது. ஃபிரெஞ்சு வசமிருந்த வட ஆஃப்ரிக்க நாடான அல்ஜியர்ஸுக்கு நாடு கடத்தும் திட்டம் தயாரானது.
 தாம் நாடு கடத்தப்படக்கூடும் என்பதை அறிந்த வ. வே. சு, இம்மண்ணிலிருந்து தம்முடைய உடல் நீங்கினாலும், வருங்காலத்திற்குத் தாம் ஏதாவது வைத்துவிட்டுப் போகவேண்டுமென்று ஆசைப்பட்டார். காலம் குறுகியது; இன்றோ நாளையோ தெரியாது - அதற்குள் என்ன செய்வது?
 சிந்தித்தார். மானுடச் சிந்தனையின் மகத்துவமான திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால், அது இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் தலைமுறைகளுக்கு உதவும் என்று தீர்மானித்தார்.
 1914 நவம்பர் 1-ஆம் நாள் பணியைத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும், இன்றிரவோ நாளைக் காலையோ நாடு கடத்தல் உத்தரவு வந்துவிடும் என்னும் பதைபதைப்பில், அதிவேகமாக மொழிபெயர்த்தார். ஃபிரெஞ்சுக் குற்றவாளி ஒளிந்திருப்பதாகப் பொய்க் குற்றம் சாட்டி, போலீஸார் இவர் வீட்டையே சோதனையிட்டனர். அப்போதும் பணியை நிறுத்தவில்லை. தம்முடைய அறைக்கு வரும்வரை எழுதினார். மீண்டும் அறையை விட்டு அவர்கள் வெளியேறியதும் எழுதினார். எழுதினார், எழுதினார், எழுதினார்.
 1915 மார்ச் 15-ஆம் நாள் - நான்கரை மாதங்களில் நூல் நிறைவுற்றிருந்தது. தமிழ்த்தாய்க்குப் புதியதொரு அணிகலன் (ஆங்கில மொழிபெயர்ப்பாக இருந்தாலும், தமிழ்தானே ஆதாரம்) கிடைத்திருந்தது.
 (தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com