பொருநை போற்றுதும் - 139

வீரபாண்டிய கட்டபொம்மன் இனி இல்லையென்னும் நிம்மதியுடன் கயத்தாற்றையும் நெல்லைப்பகுதியையும் விட்டுப் புறப்பட்ட ஜான்..
பொருநை போற்றுதும் - 139

வீரபாண்டிய கட்டபொம்மன் இனி இல்லையென்னும் நிம்மதியுடன் கயத்தாற்றையும் நெல்லைப்பகுதியையும் விட்டுப் புறப்பட்ட ஜான் அலெக்ஸாண்டர் பானர்மென், அடுத்த சில மாதங்களிலேயே (அதாவது 1800-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே) பிரிட்டன் திரும்பினார். 

அப்போதைய கவர்னர் ஜெனரல் மார்னிங்டன் ரிச்சர்ட் வெல்லெஸ்லியின் "வலது கரம்' என்று தன்னைக் கற்பனை செய்துகொண்டு, இங்கிலாந்தில் அரசியல் பதவிகளைத் தேடினார். குறுகிய காலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு கிட்டியது. கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர்களில் ஒருவரும் ஆனார்; அதுவும் நிலைக்கவில்லை. எப்படியோ, 1816}இல், மலேசியப் பினாங்கு வட்டாரத்தை உள்ளிட்ட வேல்ஸ் இளவரசர் தீவுக்கு கவர்னர் ஆனார். 1819, ஆகஸ்ட் 8}ஆம் நாள், காலரா நோய்க்கு பலியானார். 

யானை நதியும் ராமர் கதையும்: நேரடியாகப் பொருநைக் கரையில் இல்லையென்றாலும், பொருநையின் சிறப்பிடங்களில் ஒன்றாகக் கயத்தாறு ஆகிவிட்டதென்னவோ உண்மை! இப்போதிருக்கும் ஊருக்கும் சற்று வடக்காகவே, பண்டைக் காலத்துக் கயத்தாறு (கட்டபொம்மனுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்) இருந்திருக்கும் போலும்! 

ஊருக்கு மேற்காகப் பாயும் உப்போடையின் கரையிலிருக்கும் கோதண்டராமேச்வரர் கோயிலே பண்டைய கோயில். இக்கோயிலின் அஸ்திவாரப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்பதிவுகளில் ஸ்தல புராணச் செய்திகள் கிடைத்தன. 

மாய மானைத் தேடி ஓடிவந்தாராம் ராமபிரான்; தாகம் அதிகமாகவே, அருகிலிருந்த யானை மலையில் இருந்த நீரோடை ஒன்றை அழைத்தாராம்; யானை மலையிலிருந்து வந்ததால், இந்த ஓடை "கஜத்தாறு' (கஜம்=யானை) ஆனது; முகம் கழுவிவிட்டு நீரைப் பருக முற்பட்டபோது, அது உப்புக் கரிப்பது தெரிந்தது; எனவே, தம்முடைய அம்பால், நிலத்தில் குத்தி நீரெடுத்துப் பருகினாராம்; அதுவே, இப்போது கோயிலுக்குள் இருக்கும் நன்னீர் ஊற்று ஆனதாம்; "கஜத்தாறு' என்பதே "கயத்தாறு' ஆக, உப்புக் கரித்ததால், ஓடையும் "உப்போடை' ஆனது.  

இந்தக் கோயிலைச் சுற்றியிருந்த குடியிருப்புகளெல்லாம், பிரிட்டிஷார் காலத்திலேயே காணாமல் போயிருந்தன. இப்போதைய ஊர்ப்பகுதியில், கோட்டைச் சிதிலங்கள் காணப்படுகின்றன. 15}ஆம் நூற்றாண்டு வாக்கில், இப்பகுதியை ஆட்சி செய்த வெட்டும் பெருமாள் ராஜா என்பவர் இக்கோட்டையைக் கட்டியதாகத் தெரிகிறது. 

தங்கள் ராணுவத்தின் படைப்பிரிவு ஒன்றினைக் கயத்தாற்றில் நிறுத்தி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த கம்பெனியார், என்ன காரணம் பற்றியோ, 1799}இல், இந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டதாகத் தெரிகிறது. மேலும், 1801 மார்ச் மாதம், மேஜர் காலின் மெக்காலே தலைமையில் இந்த வழியாகச் சென்ற படையினர், மிச்சம் மீதியிருந்த கோட்டைத் தடயங்களை அழித்துவிட்டுச் சென்றுள்ளனர். 

இப்போதும்கூட, கயத்தாறு வழியாகச் செல்பவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. ஊருக்குச் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் வடக்கில்தான், கட்டபொம்மன் தூக்கிட்டுக்கொண்ட இடம் இருக்கிறது. 
1916}ஆம் ஆண்டின் நெல்லை மாவட்ட ஆவணத்திலேயே, "அந்தக் குறிப்பிட்ட புளியமரம் இப்போது இல்லை' என்னும் தகவல் காணப்படுகிறது (வீரப் பெருமகன் ஒருவனின் மறைவுக்குத் தான் காரணம் என்பதால், தன்னையே அழுகச் செய்து கொண்டதோ என்னமோ!). 

ஆங்காங்கே சிறியதும் பெரியதுமாய்க் கற்கள்....... இறந்துபோன குல முதல்வருக்கு நடுகல் வைக்கும் வழக்கத்தை ஒட்டி மக்கள் இவ்வாறு செய்வதும் உணவு படைத்து வழிபடுவதும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே நிகழ்ந்துள்ளன. 

தலை மறைந்தாலும் தணல் மறையவில்லை கட்டபொம்மன் அழிந்தவுடன்,பொருநைப் புதல்வர்களின் சுதந்திரக் கனல் குன்றிவிடவில்லை. நீறு பூத்தநெருப்பாக மறைந்து கிடந்தது. மணியாச்சிக்கு அருகிலுள்ள ஒட்டநத்தம் என்னும் கிராமத்தில் இளைஞர்கள் பலர் கூடிப் பேசுவது வழக்கம். என்ன பேசினார்கள் என்பது அப்போதைக்குத் தெரியாது. அவர்களின் உரையாடல்கள் எதை நோக்கி இருந்திருக்கக்கூடும் என்பது 1801 பிப்ரவரி 2}ஆம் நாள் மாலை வெளிவந்தது. 

அப்போதைய ராணுவக் கைகலப்பில் தலைமை அதிகாரியாகவிருந்த கேப்டன் வெல்ஷ் (பின்னாட்களில் ஜெனரல் வெல்ஷ்) பதிவிட்டார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com