உடையவர் தியாகத்தின் உயர்வு!

"உடையவர்' என உலகம் போற்றும் ஸ்ரீமத் ராமாநுஜரின் 1004}ஆவது அவதார வைபவத்தைக் கொண்டாடும்..
உடையவர் தியாகத்தின் உயர்வு!

"உடையவர்' என உலகம் போற்றும் ஸ்ரீமத் ராமாநுஜரின் 1004}ஆவது அவதார வைபவத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், அம்மகானின் சாதனைகளுக்குப் பின் அவர் பட்ட இன்னல்களையும் ஆன்மிக உலகம் தெரிந்து கொள்வது அவசியம் என்பதை நினைவூட்டுவதற்காகவே இக்கட்டுரை!

நாகரீகத்தின் தொட்டில்: எத்தனை, எத்தனையோ மகான்களின் திருவடி ஸ்பரிசம் பெற்ற பாக்கியத்தினால்தான், நமது பாரதம்"புண்ணிய பூமி' எனும் பெருமை பெற்றுத் திகழ்கிறது.

உலகில் வேறு எந்த வாழ்க்கை நெறிமுறையும் தோன்றியிருக்காத காலத்திலிருந்தே இருந்து வருகிறது, நமது சனாதன வேத தர்மம். இதன் காரணமாகத்தான் நம் பாரத தேசத்தை உலக நாகரீகத்தின் தொட்டில் எனப் போற்றிப் புகழ்கின்றனர், சரித்திர ஆராய்ச்சியாளர்கள்.

இத்தகைய ஒப்புயர்வற்ற தர்ம நெறிமுறைக்கும், கலியின் தோஷத்தினால், அவ்வப்போது கொடிய சோதனைகள் ஏற்பட்டு வருவதையும்  உலகம் அறியும். அத்தகைய தருணங்களில்தான் இறைவனின் எல்லயற்ற கருணையினால் மகான்கள் அவதரித்து, தங்களது ஆத்ம பலத்தினால், மக்களையும், அவர்களது தெய்வீக நம்பிக்கைகளையும் காப்பாற்றி வருவது கண்கூடு!
அவ்விதம் நமக்குக் கிடைத்த விலைமதிப்பிட இயலாத தெய்வீக பொக்கிஷமே, ஸ்ரீமத் ராமாநுஜர்!

ஆதிசேஷனின் அம்சம்...!: கி.பி.1017-ஆம் ஆண்டு, சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரம் கூடிய நன்னாளில், ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்த ஆச்சார்ய மகா புருஷர் ஸ்ரீமத் ராமாநுஜர்! இறைவன், மனிதப் பிறவிக்கு அளித்துள்ள பூரண ஆயுள் 120 ஆண்டுகள். இந்தப் பூரண ஆயுளை முழுமையாக ஏற்ற மகான்கள் இருவர்.

ஒருவர் ஸ்ரீமத் ராமாநுஜர். மற்றொருவர், மத்வ சித்தாந்த மகானான úஸôதே ஸ்ரீவாதி ராஜஸ்வாமிகள் (இம்மகான் உயிருடன் ஜீவ பிருந்தாவனம் பிரவேசித்த ஆச்சார்ய மகா புருஷர்). 
இந்த ஆண்டு ஸ்ரீமத் ராமாநுஜரின் 1004}ஆவது ஜெயந்தி வைபவம் (ஏப்.18) மற்றும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவமும் சேர்ந்தாற்போல் அவரது அவதார ஸ்தலமாகிய ஸ்ரீபெரும்புதூர் உள்பட, பாரத தேச முழுவதும் அனைத்து வைணவ ஆலயங்களிலும் மே 5}ஆம் தேதி வரையிலும் கொண்டாடப்படவுள்ளது. 

இவை தவிர, மாதந்தோறும் ஸ்ரீபெரும்புதூரில், உடையவருக்கு திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்புத் திருமஞ்சனமும், ஆராதனையும் நடைபெறுகின்றன. இவ்வைபவங்களில் கலந்துகொள்வது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும். 

ஆச்சார்ய மகாபுருஷர்!: தனது 120 ஆண்டு அவதார காலத்தில், ஸ்ரீவைணவ சித்தாந்தத்திற்காக ஸ்ரீமத் ராமாநுஜர் ஆற்றிய, தன்னிகரற்ற தொண்டுகள், மகிமைகள் ஆகியவை பற்றி ஏராளமான அறிஞர்களும், சரித்திர ஆராய்ச்சியாளர்களும் அவரவர்களது கண்ணோட்டத்திற்கும், கொள்கைகளுக்கும், நோக்கங்களுக்கும் ஏற்றவாறு அர்த்தம் கற்பித்து எழுதிவருகின்றனர். 

திருக்கோட்டியூரில் அனைவருக்கும் ஸ்ரீஅஷ்டாக்ஷர மகா மந்திரத்தை உபதேசித்ததால் அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்றும், தில்லி பாதுஷாவின் பெண், திருநாராயணபுரம் எம்பெருமான் செல்லப் பிள்ளையிடம் வைத்திருந்த பிரேமையை ஏற்றதால், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை ஏற்ற மத நல்லிணக்கவாதியாகவும், சைவ சமயத்திற்கு எதிரியாகச் செயல்பட்ட தீவிர வைணவர் போன்றும் தத்தம் மனத்திற்குத் தோன்றியவாறு இம்மகானைச் சித்தரித்து எழுதி வருகின்றனர். 

விக்கிரகம் மீட்பு: உண்மையில் ஸ்ரீமத் ராமாநுஜர் ஆற்றிய இமாலயத் தொண்டினைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அப்போது நம்நாட்டிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் நிகழ்ந்த அரசியல், பொருளாதார சூழ்நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இடுப்பில் காஷாயத் துண்டு, கையில் திரிதண்டம், அங்கத்தில் காயத்ரி மகாமந்திர சக்தியூட்டப்பெற்ற முப்புரிநூல் (பூணூல்) ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஓர் எளிய வைணவத் துறவி எவ்விதம் செயல்பட்டார்என்பதைச் சிறிதளவாவது உணர்ந்து கொள்ளமுடியும்!

பாத யாத்திரை: எவ்விதப் போக்குவரத்து வசதியும் இல்லாத அக்காலத்தில் தனது வயோதிக முதிர்வில் பாதயாத்திரையாவே தில்லிக்குச் செல்ல எவ்வாறு  முடிந்தது அவரால்? 

எளிதில் அணுகுவதற்குக்கூட முடியாத சுல்தானை எவ்விதம் பேட்டி கண்டு, அவனுடன் பேசி, செல்லப்பிள்ளை விக்கிரகத்தை மீட்க முடிந்தது? காஷ்மீர் வரை கூரத்தாழ்வாருடன் எவ்வாறு சென்றுவர முடிந்தது? (ஸ்ரீபாஷ்யம் எழுதி முடிப்பதற்காக) என்பவற்றைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். 

தமிழகத்தின் அன்றைய நிலை!: 

தமிழகத்திலோ, ஸ்ரீமத் ராமாநுஜருக்கு கரைகாண முடியாத கடலனைய பிரச்னைகள்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சைவ சமயத்தைத் தழுவியவர்கள். குலோத்துங்கச் சோழனோ வைணவத்தை வேரறுக்க உறுதிகொண்டவன். ஆதலால், வைணவம் அரண்மனை அரசியலில் சிக்கிக்கொண்டது.

மேலும், அக்காலத்தில் தமிழக மக்களின் அன்றாட வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகிய அனைத்தும் திருக்கோயில்களைச் சார்ந்தே இருந்து வந்தன. ஆதலால், மக்களிடையே போட்டியும், பொறாமையும் வளர்ந்தன. இந்துக்களிடையே ஒற்றுமை அடியோடு குலைந்துவிட்டது அப்போது. சுயநலமே மேலோங்கியது!

இது ஒருபுறமிருக்க, வைணவர்களிடையேயும் பரஸ்பர போட்டிகள், பொறாமை, ஒற்றுமைக் குறைவு ஆகிய பிரச்னைகள் கடுமையாக இருந்து
வந்தன.

அவ்வளவு ஏன்? ஊண், உறக்கமின்றி எந்த வைணவ சமூகத்திற்காக ஸ்ரீஎம்பெருமானார் பாடுபட்டாரோ, அந்த வைணவ சமூகத்தில் ஓர் பிரிவே அவரை எதிர்த்தது.

ஸ்ரீமத் ராமாநுஜரைத் தவிர வேறு எவராக இருந்திருந்தாலும், நாம் ஏன் இவர்களுக்காக இத்தனை பாடுபடவேண்டும்...? என்ற விரக்தியில் விலகியிருப்பார்கள்! 

ஆனால், எதற்கும் அந்த ஆச்சார்ய மகா புருஷர் மனம் கலங்கவில்லை! அலைகள் மோதிக் கொண்டேயிருந்தாலுங்கூட, அவற்றைத் தாங்கி நிற்கும் கற்பாறை போன்று, தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றுவதில் உறுதியுடன் திகழ்ந்தார் உடையவர்.

பாஷ்யக்காரர்: வேத சனாதன தர்மம் எனும் வாழ்க்கை நெறிமுறை, பிரம்மாண்டமான ஆலவிருட்சம் போன்றது. அதனைத் தாங்கும் ஆணிவேர்கள் ஆறு தத்துவங்கள் ஆகும். 

அவற்றில் ஒன்றுதான், ஸ்ரீவைணவம்! இந்த 6 வேர்களும் உறுதியுடனிருந்தால்தான், வேத தர்மம் நிலைத்திருக்க முடியும் என்பது எம்பெருமானாருக்குத் தெரியும். 

அவரது மகத்தான கிரந்தமான ஸ்ரீபாஷ்யத்தைப் படிப்பவர்களுக்கு இது புரியும். ஆதலால்தான், ஸ்ரீவைணவம் எனும் ஆணிவேரைக் காப்பாற்றுவதில் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தார் அம்மகான். இப்புனித, புண்ணிய தருணத்தில் அம்மகானின் திவ்ய சரணாராவிந்தங்களில் நம் நன்றியைச் சமர்ப்பிக்கின்றோம்..!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com