ஞானம் அருளும் ஞானராமர்!

ஸ்ரீவியாசரின் மகன் சுகப்பிரம்ம மகரிஷி. பிரம்ம ஞானியான அவர், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக்கு..
ஞானம் அருளும் ஞானராமர்!

ஸ்ரீவியாசரின் மகன் சுகப்பிரம்ம மகரிஷி. பிரம்ம ஞானியான அவர், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக்கு அருகில் மலையடிவாரத்தில் ஓர் ஆசிரமம் அமைத்து தமது சீடர்களுடன் தங்கி வந்தார். காப்பிய நாயகன் ராமன் மீது பெரும் பற்று கொண்டவர். ராவண யுத்தம் முடிந்து திரும்பி வரும் ராமனை கௌரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

அதேபோல், இலங்கை யுத்தம் முடித்துவிட்டு, சிம்மாசனத்தில் பாதுகையை வைத்து பரதன் ராமராஜ்ஜியம் நடத்தி வரும் அயோத்தியை நோக்கி ராமர், சீதை, லட்சுமணரோடு செல்லும் வழியில், மலையடி வாரத்திலிருந்த சுகப்பிரம்ம ரிஷியின் ஆசிரமத்துக்கு வந்தனர். 

ரிஷியின் வேண்டுதல்: ராமனைக் கண்ட ரிஷி பெரிதும் மகிழ்ந்து,  தாம் சேமித்து வைத்திருந்த அரிய சாஸ்திரங்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளை ராமனிடம் கொடுத்தார். சுகப்பிரம்ம ரிஷி தன்னோடு ஒரு நாள் தங்கி உணவருந்திச் செல்லுமாறு ராமனிடம் வேண்டினார். 

அப்பொழுது, அயோத்தியில் பரதன் அக்னி குண்டம் வளர்த்து, அதில் இறங்கவேண்டிய சூழலில் இருப்பதை ரிஷியிடம் ராமர் விளக்கினார். ஆனாலும் முனிவரின் வேண்டுதலை ஏற்று, வாயு புத்திரனிடம்  தனது கணையாழியைத் தந்து, பரதனிடம் தன் வருகையை விளக்கி விட்டுத் திரும்பி வருமாறு கட்டளையிட்டார். பரதனிடம் அனுமன் சென்று சமாதானம் செய்துவிட்டுத் திரும்பி வந்தார். 

ஆசிரமத்தில் தங்கியபோது தம்பியாகிய லட்சுமணன் தம் வலப்புறம் நிற்க,  இடப்பாகத்தில் சீதையை அமரச் செய்தார். ரிஷியிடம் வாங்கிய ஓலைச் சுவடியைப் படிக்குமாறு அனுமனிடம் கொடுத்தார். அனுமனும் எதிரில் கீழே பத்மாசனமிட்டு அமர்ந்து படிக்கலானார். 

முக்தி கோபணிஷத்: ராமர் வேதத்தின் உட்கருத்தைக் கேட்டு இன்புற்று, "முக்தி கோபணிஷத்' என்ற உபநிஷத்தை அனுமனுக்கு  உபதேசித்தாரென தல வரலாறு கூறுகிறது. அந்த உபதேசக் கோலத்தை மனதில் உள் வாங்கிய சுக முனிவர் இக்கோலத்தில் இங்கேயே இருந்து அருள வேண்டும் என வேண்டினார்.

சுகமுனிவரின் ஆசிரமம் அமைந்திருந்த மலைக்குன்றுப் பகுதியில் தங்கி, உணவுண்டு, இளைப்பாறிய நெடுமாலான ராமர் தங்கியதால் "நெடுங்குன்று' என அப்பகுதி வழங்கத் துவங்கியது. தனது ஆசிரமப்பகுதியில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இருந்த கோலத்தில் தெய்வச்சிலை அமைத்து, கோயிலாக்கி வழிபடத் துவங்கினார் சுகமுனிவர்.

வில், அம்பு இல்லாத ராமர்: கருவறையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சாந்த சொரூபியாக வில் அம்பு இல்லாத யோக நிலையில் இருக்க, அவரது ஒரு கை மார்புக்கு அருகே ஞான முத்திரையோடு காட்சி தர , சீதாபிராட்டி வலது கையில் தாமரை மலரையும் இடக்கையை திருவடிச் சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக அண்ணலின் இடப்புறம் அமர்ந்து அருள்கிறாள். தம்பி லட்சுமணன் வலப்புறத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். 

வாயுபுத்திரன் அனுமன் ஸ்ரீராமபிரான் எதிரில் சுவடிகளைக் கையில் கொண்டு தரையில் அமர்ந்து சுவடிகளைப் படித்துக் கொண்டிருக்கிறார். ராமர் அதற்கு  வேத வியாக்கியானம் செய்யும் நிலையில் காட்சி தருகிறார்.

சுக முனிவர் ஆசிரமத்தில் இருந்த  ராமர் கோயிலை விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விரிவு படுத்தி அமைக்கப்பட்டது.  பூஜைக்காக நிலங்கள் வழங்கப்பட்டதையும்,  வைகாசி மாதம் திருவிழாவில் நாட்டியமாட நிலதானம் செய்ததையும், ஆடித்திருநாள்  விழாக்கள் நடத்த விஜயநகர மன்னர்களால் கொடைகள் கொடுக்கப்பட்டதையும்   கல்வெட்டுகள் குறிக்கின்றன. 

எட்டு ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில்: இக்கோயில் கருவறை கனக விமானத்துடன், அர்த்த மண்டபம், திருச்சுற்று மண்டபம் நூற்றுக்கால் மண்டபம் ஆகியவற்றுடன் நீண்ட ஆறு நிலைகள் கொண்ட ராஜகோபுரம், கிளி கோபுரம், பலிபீடம், ஆயிரம் கால் மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றுடன் அமைந்துள்ளது. 

விஜயராஜன் என்பது உற்சவர் பெயராகும். தனிக்கோயிலில் தாயார் பெயர் செங்கமலவல்லி. சுகப்பிரம்ம தீர்த்தமும், தலவிருட்சமாக வில்வமும் உள்ளது. ராமருக்கென்று சுமார் 8 ஏக்கர் பரப்பளவுடைய  இவ்வளவு பெரிய தனிக்கோயில் அமைந்திருப்பது தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தவிர வேறு எங்கும் இல்லை. 

பல திருவிழாக்கள் சிறப்பாக நடந்தாலும், பங்குனியில் கொடியேற்றி ஸ்ரீராமநவமி உற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். மாணவர்கள் அறிவுத்திறன் பெருகவும், கல்வி மேன்மை, குடும்ப ஒற்றுமை, பிரிந்தவர் ஒன்று சேருதல் ஆகியவற்றுக்காக இக்கோயிலில் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

அமைவிடம்: நெடுமால்குன்று என்பது நெடுங்குன்று என்றாகி, தற்போது "நெடுங்குணம்' என மருவி வழங்குகிறது.  வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் 24 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. தொடர்புக்கு: 6380947204; 6379277062. 

ஆர்.அனுராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com