தேவியின் திருத்தலங்கள் - 19: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி

"தாயே! உனக்கு அனைத்தும் தெரியும். எனக்கு என்ன தேவை, எதை எப்பொழுது தரவேண்டும் என்றும் உனக்குத் தெரியும்.
தேவியின் திருத்தலங்கள் - 19: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி

"முகம் பிந்தும் க்ருத்வா குசயுக - மதஸ் தஸ்ய தததோ 

ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹர மஹிஷி தே மந்மதகலாம்:'

-செளந்தர்ய லஹரி 

"தாயே! உனக்கு அனைத்தும் தெரியும். எனக்கு என்ன தேவை, எதை எப்பொழுது தரவேண்டும் என்றும் உனக்குத் தெரியும். இருந்தாலும் உன்னிடம் என் குறைகளைச் சொல்லி அழும்போது என் மனதில் ஒரு நிம்மதியும், தைரியமும் தோன்றுகிறது!' என்று ஸ்ரீநீலகண்ட தீட்சிதர் தன் "ஆனந்த சாகர ஸ்தவம்' என்ற நூலில் கூறியிருக்கிறார்.

அம்பிகை தாயாய் இருக்கிறாள். அழும் குழந்தை தாயின் புடவைத் தலைப்பை பிடித்துக் கொண்டு அலைவது போல, நம் மனமும் அன்னையின் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

கண்ணே, மணியே என்று தாய் கொஞ்சுவது போல் அவளும் நம்மைக் கொஞ்சி உச்சி முகர்ந்து பசி தீர்க்கிறாள். மனப் பசி, மன வலி, உடல் வலி, நோய்களைத் தீர்க்கிறாள். அப்படி தன் குழந்தைகளின் நோய்களைத் தீர்க்க ஒவ்வொரு தலத்திலும் கோயில் கொண்டுள்ள அம்பிகை, கண் நோய் தீர்க்க கோயில் கொண்டிருப்பது நாட்டரசன் கோட்டையில்! 

சண்டாசுரனை அழிக்க மகா காளியாக வடிவெடுத்த சக்தி அப்போரைக் காணும் வகையில் தேவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருவைக் காட்டுகிறாள். எனவே இவள் கண்ணுடையாள், கண்ணாத்தாள், நன்னுடை நாயகி, நேத்ராம்பிகா என்றும் அழைக்கப்படுகிறாள்.

கண் கொடுத்த கண்ணாத்தாள்: நாட்டரசன் கோட்டையின் தென்புறம் "பிரண்ட குளம்' என்ற ஒரு கிராமம் உள்ளது. அங்கிருந்து பால், மோர் விற்பவர்கள் நாட்டரசன் கோட்டைக்கு வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் பால், மோர் ஆகியவை ஒரு குறிப்பிட்ட இடம் வரும்போது கால் இடறி, கீழே கொட்டிவிடும். தினமும் இப்படியே நடந்தது.

இது வாடிக்கையாகத் தொடர்ந்ததால், வியாபாரிகள் மன்னரிடம் சென்று முறையிட்டனர். அதற்கு முதல்நாளே மன்னரின் கனவில் தோன்றிய அம்பாள் "பிரண்ட குளம் கிராம எல்லையில் பலாமரம் பக்கத்தில் நான் இருக்கிறேன்' என்று கூறியிருந்தாள். தனக்கு கனவில் வந்த இடமும், வியாபாரிகள் கூறிய இடமும் ஒன்றாக இருக்கவே மன்னர் வியப்படைந்தார். 

உடனே அவ்விடத்தில் தரையைத் தோண்டிப் பார்க்க, அங்கு சிலை வடிவில் அம்பாள் காட்சி அளித்தாள்.

பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரின் கண்ணில் கடப்பாரையின் நுனி பட்டு, ரத்தம் கொட்டி, பார்வை மறைந்தது. ஆனால், அவர் தொடர்ந்து மண் அள்ளும் பணியில் ஈடுபட்டார். அம்பிகையின் சிலை மேலே வந்த நிமிடம் அவரின் கண் பார்வை சரியானது. எனவே, அம்பிகை "கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்' என்றும் அழைக்கப்படுகிறாள்.

பிரம்மாண்டமாகக் காட்சி அளிக்கிறது கோயில். கருவறையில் சற்றே தலை சாய்த்து, கனிவுடன் வா என்று அழைக்கும் கருணை பொங்கும் விழியுடன் நம்மைப் பார்க்கிறாள் அம்பிகை. வலக்காலை சற்றே தூக்கியவாறு, இடக்காலில் அசுரனை அழுத்தியவாறு, எட்டு கரங்களுடன், ஜுவாலை நிறைந்த கிரீடத்தில், சந்திர சூரியர்களை அணிந்து கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.  

என்னை நம்பி வந்து விட்டாயல்லவா? உன் சகல கவலைகளையும் நான் தீர்க்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறது அன்னையின் தோற்றம். 

கோயில் சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்டது என்றாலும், பின்னர் வந்த சேதுபதி மன்னர்களும், நகரத்தாரும் ஆலயத்தைப் புதுப்பித்து, பலவிதங்களில் விரிவு படுத்தி, நிவந்தங்கள் அளித்துள்ளனர். இன்றும் இக்கோயில் சிவகங்கை சமஸ்தானத்தின் பராமரிப்பில்தான் உள்ளது.

ஆலயத்திற்கு எதிரில் திருக்குளம் உள்ளது. அதன் மேற்குக் கரையில் கற்சிற்பங்கள் நிறைந்த மகா மண்டபங்கள் உள்ளன். கண் பார்வைக் குறைபாடு உடையவர்கள் இங்கு வந்து, மாவிளக்கு போட்டு வேண்டி, பார்வைக் குறைபாடு நீங்கிச் செல்கிறார்கள்.

ராஜகோபுரத்தை அடுத்து சொக்கட்டாஞ்சாரி கர்ணக்கால் மண்டபம் உள்ளது. இது அபூர்வ வேலைப்பாடுகள் நிறைந்தது.

அம்பிகையின் கரத்தில் உள்ள கிளி, ஞானத்தையும், வாள் கூர்ந்த உண்மைப் பொருளையும் உணர்த்துகிறது. அம்பிகையின் அருளைப் பெற்ற அழுகுணிச் சித்தர் சமாதி, அபிஷேகத் தீர்த்தம் விழும் தொட்டியின் அடியில் இருப்பதாக தல புராணம் கூறுகிறது. 

"பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கி 

செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி 

அம்பொற் பணிபூண்டு அறுகோண வீதியிலே 

கம்பத்தின் மேலிருந்து கண்ணம்மா கண்குளிரப் பாரேன்'

-என்று பாடுகிறார் அழுகுணிச் சித்தர். 

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் சமாதியும் இங்குதான் அமைந்திருக்கிறது. வாழ்நாள் இறுதியில் இங்கு வந்த கம்பர் மாடு மேய்க்கும் சிறுவர்களிடம் "சோறு எங்க விக்கும்?' (விற்கும்) என்று கேட்டுள்ளார். 

அதற்குச் சிறுவர்கள் "சோறு தொண்டையில் விக்கும்!' என்று பதில் சொல்ல கம்பர் வியந்து போனார். 

ஈஸ்வரியின் அருளால் ஊர்மக்களின் அறிவு பிரகாசிப்பதை உணர்ந்து, 
"காட்டெருமை மேய்க்கின்ற காளையர்க்கு நான் தோற்றேன்
இனி இந்நாட்டரசன் கோட்டை நமக்கு' 

- என்று கம்பர் இங்கு தங்கி விட்டார்.

இச்சமாதி மண்ணைக் கரைத்து குழந்தைகளுக்குப் புகட்டினால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். 

ஈசன் அருந்திய நஞ்சை அமுதமாக்கிய அன்னை இந்தப் பிரபஞ்சம் முழுக்க நிறைந்துள்ளாள். அவள் பாதமே சரண் என்று தஞ்சமடைந்தால் அம்பிகைமகா பெரும் கருணையோடு நம்மைக் காத்தருள்வாள். சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது நாட்டரசன் கோட்டை. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com