பொருநை போற்றுதும் - 140

அப்போதைய ராணுவக் கைகலப்பில் தலைமை அதிகாரியாகவிருந்த கேப்டன் வெல்ஷ் (பின்னாட்களில் ஜெனரல் வெல்ஷ்) இவ்வாறு பதிவிட்டார்.
பொருநை போற்றுதும் - 140

அப்போதைய ராணுவக் கைகலப்பில் தலைமை அதிகாரியாகவிருந்த கேப்டன் வெல்ஷ் (பின்னாட்களில் ஜெனரல் வெல்ஷ்) இவ்வாறு பதிவிட்டார். 

1801 பிப்ரவரி 2-ஆம் நாள் மாலை, சுமார் 30 மைல்கள் வடக்காக இருக்கும் சங்கர நயினார் கோயிலில் எங்கள் பிரிவினர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மேஜர் மெக்காலேயின் பாலங்கோட்டா தோட்ட வீட்டில் இருபது சீமாட்டிகளும், பெருமகன்களும் உணவருந்திக் கொண்டிருந்த நிலையில், கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த பாளையக்காரக் கைதிகள் பலர், தங்களின் காவலர்களையும் கோட்டை வாயில் காவலரையும் வீழ்த்திவிட்டுத் தப்பித்து விட்டனர். 

முக்கியஸ்தர்களாகவும் அரசியல் கைதிகளாகவும் இருந்ததால், இவர்கள் மிகக் கடுமையான காவலிலும் இரும்புச் சங்கிலிகளில் பிணைக்கப்பட்டும் வைக்கப்பட்டிருந்தனர். 

இருப்பினும், சமீபத்தில் பெரியம்மை இவர்களில் சிலரைத் தாக்கியிருந்ததால், இவர்களின் சங்கிலிகள் நீக்கப்பட்டிருந்தன. இன்று மாலை, இவர்களின் ஆதரவாளர்கள், மாறுவேடத்திலும் ஆயுதங்களுடனும் வந்து, தக்க சமிக்ஞையில் காவலாளிகளைத் தாக்கியுள்ளனர்.............. கைதிகளும் ஆதரவாளர்களும் எந்த அளவுக்கு விரைவாகச் செயல்பட்டுள்ளனர் எனில், 30 மைல் தொலைவிலுள்ள பாஞ்சாலங்குறிச்சியை இவர்கள் அதிகாலைக்குள்ளாக அடைந்துள்ளனர்.

பாஞ்சாலங்குறிச்சியை அடைகிற அவசரத்தில், மெக்காலேயின் இல்லத்தை கவனிக்க புரட்சியாளர்கள் தவறிவிட்டனர். ஒருவேளை அந்த இல்லத்தைச் சூழ்ந்திருந்தனர் எனில், ஒரேயொரு காவல்காரரைத் தவிர வேறெந்தக் காவலும் இல்லாமல், கேளிக்கைக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்த உயர் அலுவலர்களை வீழ்த்தியிருக்கக்கூடும். ஒருவேளை இது நடந்திருந்தால், வரலாறு மாறியிருந்திருக்கும். வாய்ப்பு நழுவி விட்டது என்பதை வெல்ஷேகூட பதிவு செய்துள்ளார். 

பாளையத் தலைவர்கள் தப்பி விட்டனர் என்னும் தகவல் கிட்டிய நிலையில், அடுத்த நாள், சிப்பாய்களைத் திரட்டிக்கொண்டு மெக்காலே புறப்பட்டார். சங்கர நயினார் கோயிலிலிருந்து படைகளைத் திரட்டிக் கொண்டு மேஜர் ஷெப்பர்ட் வந்தார். இரண்டு படைகளும் பிப்ரவரி 8}ஆம் தேதி கயத்தாற்றை அடைந்தன. அன்றிரவு, உணவருந்துவதற்காகக் குலையநல்லூர் என்னும் இடத்தில் படையிறக்கினர். 

எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் வேகமாகத் தாக்க, ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சண்டையில் கம்பெனிப் படைகள் காயமுற்றுச் சோர்ந்தனர். 

புரட்சியாளர்களை விரட்டிப் பிடிக்கக்கூடத் திராணியின்றிக் கம்பெனியார் களைத்தனர். நடுநிசியில், புரட்சியாளர்கள் மீண்டும் தாக்கினர். மிகுந்த சேதத்துடனும், சோர்வுடனும் காலையில் புறப்பட்ட கம்பெனிப் படை, காலை ஒன்பது மணிவாக்கில் பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தது. அவர்களின் விழிகளை அவர்களாலேயே நம்பமுடியவில்லை. 

பானர்மென்னின்ஆணைப்படிப் பாளையக் கோட்டைகள் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன அல்லவா! சிதைவுகளையும், சிதிலங்களையும் எதிர்நோக்கி வந்த கம்பெனிப்படையினர், கண்ணெதிரில் கண்ட காட்சியில் மேலும் சோர்ந்தனர். கோட்டைச் சுவர்கள் மீண்டும் நிமிர்ந்து நின்றன. 

“To the surprise of all, the walls presented exactly the same appearance as when they had last been seen, and were manned by several hundreds of armed men’ என்று இந்நிலையை விவரிக்கிறது வெல்ஷ் பதிவு. 

ஒரே வாரத்தில் கோட்டையை மீண்டும் கட்டியிருந்தனர். பனஞ்சாற்றில் மண்ணைப் பிசைந்து கட்டினராம். 

கோட்டையைத் தகர்க்க பீரங்கிகளும், பெருந்துப்பாக்கிகளும் இல்லாத நிலையில், பகல் நேரத் தாக்குதல் பலன் தராது என்பதைப் புரிந்துகொண்ட கம்பெனியார், இரவுத் தாக்குதலுக்காகக் காத்திருந்தனர். 

ஆனால், சுமார் 5000 புரட்சியாளர்கள் உள்ளுக்குள் ஒளிந்திருக்கின்றனர் என்னும் தகவலும், இரவுப் பொழுதில் கம்பெனிப்படை மீது பாயக் காத்திருக்கின்றனர் என்னும் செய்தியும் கிட்டிட, வழியேதும் தெரியாமல்,திருச்சியிலிருந்து மேலும் துருப்புகள் வருவதை எதிர்நோக்கியபடியே பாளை நோக்கிப் பயணமாயினர். 

காலை வேளையில், உள்ளிருந்த புரட்சியாளர்கள் வெளிவந்து போரிடத் தொடங்க, இருபக்கமும் சேதம் அதிகம். புரட்சியாளர்கள் மீண்டும் உள்ளே சென்றுவிட, கம்பெனிப் படைகள் 10}11 தேதிகளில் பாளையை அடைந்து அடங்கின. ஊமைத்துரையும் பிற புரட்சியாளர்களும் அடங்கி விடத் துணியவில்லை. பாஞ்சாலங்குறிச்சியைப் போலவே இன்னும் சில பாளையக்கோட்டைகளையும் பகுதிகளையும் கைப்பற்றினர். காடல்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளை வசப்படுத்தினர். தூத்துக்குடியையும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொணர்ந்தனர். 

திருச்சியிலிருந்து வந்த கம்பெனித் துருப்புகள், மார்ச் 27-ஆம் நாள்தான் கயத்தாற்றை அடைந்தன. பிப்ரவரி 2 முதல் மார்ச் 27 வரை, ஏறத்தாழ ஒன்றரை மாத காலம், ஊமைத்துரை உள்ளிட்ட புரட்சியாளர்களின் கை ஓங்கியே இருந்தது. 

அரசியல் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் (ஊமைத்துரை உள்ளிட்ட பாளையத்தார்) பாளையங்கோட்டைச் சிறைக்குள் இருந்த நிலையில், வெளியில் மக்கள் ஆதரவு இந்த அளவுக்குத் திரண்டிருக்க வேண்டுமெனில், கட்டபொம்மனுக்கும் பாளையத்தாருக்கும் மக்களிடம் நல்ல பெயர் இருந்திருக்க வேண்டுமல்லவா! 

கம்பெனியார் கட்டிவிட்ட புரட்டெல்லாம் பொய்க்கதை என்பதற்கு இதுவே ஆதாரமல்லவா! 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com