இழந்த சொத்துகளை மீட்டுத்தரும் ஓமந்தூர் பீமேஸ்வரர்!

பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின் போது யாருக்கும் தெரியாமலிருக்க பல்வேறு ஊர்களில் தங்கி நாட்களை கழித்து வந்தனர்.
இழந்த சொத்துகளை மீட்டுத்தரும் ஓமந்தூர் பீமேஸ்வரர்!

பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின் போது யாருக்கும் தெரியாமலிருக்க பல்வேறு ஊர்களில் தங்கி நாட்களை கழித்து வந்தனர். இந்த பயணத்தின் போது அவர்கள் முன்னூர் என்ற கிராமத்தில் ஒரு நாள் தங்கினர். அன்று இரவு அவர்களுக்கு கடும்பசி எடுத்தது. ஆனால் உண்ணவோ, உணவு தயாரிப்பதற்கான பொருள்களோ எதுவும் அவர்களிடம் இல்லை. பசியின் கொடுமை தாளாமல் தருமர் பீமனை அனுப்பி உணவு கொண்டு வரச்சொன்னார். 

உணவை தேடியலைந்த பீமனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக பசி மயக்கத்தில் இத்தலத்தில் உள்ள சிவன் கோயிலில் மயங்கி விழுந்தான். உடனே இறைவன் பார்வதி தேவியை அனுப்பி அவனுக்கு சுவையான பாலை அளிக்கச் செய்தார். மயக்கம் தெளிந்த பசியாறிய பீமன் இறைவனையும், இறைவியையும் உணர்ந்து வழிபட்டான். 

பின் தனது சகோதர்களுக்கு வேண்டிய அளவு பாலை எடுத்துக் கொண்டான். கூடவே "இறைவா எங்களது பசியை போக்கியது போன்று சாதாரண மக்களின் பசி, துன்பங்களையும் தாங்கள் தான் போக்க வேண்டும்'  என்று வேண்டினான். 

இறைவனும் அவ்வாறே வாக்களித்தார். பீமன் பூஜித்ததால் இறைவன் பீமேஸ்வரர் என்றும், பாண்டவர்களுக்கு பசியாற பால் வழங்கியதால் இறைவி பாலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். புராண வரலாறு - ஒம் என்பது அயன், ஹரி, ஹரன் ஆகியோரை உள்ளடக்கிய பிரணவ மந்திரமாகும். 

அந்தூர் என்ற சொல்லிற்கு பாதகிண்கிணி என்பது பொருள். ஓம் எனும் பிரணவமந்திரத்தின் பரம்பொருளாக விளங்கக்கூடிய சிவபெருமான் மகரிஷிகளின் தவத்திற்கு இறங்கி ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய போது திருக்கயிலை நாதனான பரமேஸ்வரனின் பாத கிண்கிணி சத்தம் முதலில் கேட்ட ஊர் (ஒம் +அந்தூர்) என்று அறியப்படுகிறது. ஏகாதச ருத்ரர்களின் ஒருவரான பீமனும் திருக்கயிலாயத்தில் நிருதி (தென்மேற்கு) திசையின் காவலனாக விளங்கக்கூடிய ஸ்ரீபீமநாதனும் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பராக்கிரமம் மிக்க பீமனும் வணங்கியதால் இத்தல இறைவனுக்கு பீமேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. 

இவ்வூர் பண்டைக்காலத்தில் கிடங்கில் எனும் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த நல்லியக்கோடனின் ஒய்மா நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை சிறுபாணாற்றுப்படை என்ற பழந்தமிழ் இலக்கியத்தின் மூலம் அறிய முடிகிறது. இத்திருக்கோயிலில் உள்ள ராஜராஜ சோழனின் பதினொன்றாவது ஆட்சியாண்டு( 885}1014) கல்வெட்டு இத்தலத்தை ஒவ்வூர் என்றும் முதலாம் ராஜ நாராயண சம்புவராயர்(1337}1368) கல்வெட்டு ஓய்மா நாட்டு ஓகந்தூர் என்றும் குறிப்பிடுகின்றது. 

ஓவ்வூர், ஓகந்தூர் என்பதே மருவி தற்போது ஓமந்தூராக வழங்கி வருகின்றது. பழமையான இத்திருக்கோயில் ராஜ ராஜசோழனால் கட்டப்பட்டுள்ளது. பின்னர் வந்த முதலாம் ராஜநாராயண சம்புவ
ராயனால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆண்ட விஜயநகரப் பேரசர்களும் சம்புவராய மன்னர்களும் இத்திருக்கோயிலில் திருப்பணி செய்து வழிபட்டுள்ளனர். 

இங்கு இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சிறப்புகள்} பிரதோஷ வழிபாட்டின் போது இறைவனை மனமுருக வேண்டினால் சகல செல்வங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம். பாண்டவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட பின்புதான் இழந்த ராஜ்யத்தை போரிட்டு மீட்டனர். அதனால் பீமேஸ்வரனை வழிபட்டால் இழந்த சொத்துகள், செல்வங்கள் மீண்டும் நம்மை தேடி வந்தடையும். 

திருமணம் ஆகாதவர்கள் இறைவனை வழிபட்டால் திருமணம் கைக்கூடும் பிரார்த்தனை தலமாகவும் இத்திருக்கோயில் விளங்குகிறது.  திண்டிவனத்தில் இருந்து ஓமந்தூர்க்கு பேருந்து வசதிகள் உள்ளது.

-பொ.ஜெயச்சந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com