வாழ வந்த நாயகியும்... வாஞ்சிநாத சுவாமியும்..!

துவாபரயுகத்தில் தெரியாமல் தவறிழைத்து அசுரனாகி மூன்று யுகம் அரக்கனாக வாழும் தண்டனை பெற்றவன் வீரதனு.
வாழ வந்த நாயகியும்... வாஞ்சிநாத சுவாமியும்..!
வாழ வந்த நாயகியும்... வாஞ்சிநாத சுவாமியும்..!

துவாபரயுகத்தில் தெரியாமல் தவறிழைத்து அசுரனாகி மூன்று யுகம் அரக்கனாக வாழும் தண்டனை பெற்றவன் வீரதனு. இவ்வசுரன் பராசர முனிவரை வணங்கி வேண்ட, பராசர முனிவர் திருவாஞ்சியம் வந்து புண்ணிய தீர்த்தத்தைத் தெளித்து சாப விமோசனம் தந்தருளினார். 

திருவாஞ்சியத்தின் பெருமைகளை ஈசன் பார்வதிக்கு உரைக்கையில் சதாசிவர் உலகை வலம் வந்து காசி, காஞ்சி, காளத்தி முதலான அனைத்துத் தலங்களையும் காட்டியபின் காசி முதலான அறுபத்தாறு கோடி தலங்களுக்கிடையில் உயர்ந்தது புண்ணிய புஷ்கரணி எனவும் விளக்க, திருவாஞ்சியத்தில் வசிக்க அம்பிகை திருவுளம் கொண்டார். 

அதனால், தானே விரும்பி "வாழ வந்த நாயகி'யாக விளங்குகிறார். மாசி மாதம் சுக்ல பட்சம் மகத்தில் வாஞ்சீசர் உமையோடு தோன்றினார். சதாசிவர் தனது அம்சத்தை காட்டிலும் மாறுபடாத வாழவந்த நாயகியுடன் திருவாஞ்சியம் புகுந்த அளவில் ஆற்றலுடையவராயும் அறம், பொருள், இன்பம், வீடு பேற்றை அளிப்பவராயுமிருக்கிறார். 

காசியில் மரித்தவருக்கு ஒரு கணமேனும் பைரவ வாதனையுண்டு, ஆனால் இங்கோ பைரவர் யோகநிலையில் வீற்றிருப்பதனாலும், சிவபெருமான் நேரில் ஆட்கொள்வதாலும் பைரவ உபாதை கிடையாது. ஆகையால் காசியிலும் மேலான தலமாக இது விளங்குகிறது. 

கலியுகத்தில் கல்மயமாக காட்சி தரும் இந்த லிங்கத்தின் சிறப்புகளை  "திருவாஞ்சிய லிங்க மகிமை வர்ணனை' என்ற நூல் (14-ஆம் அத்தியாயம்) விவரிக்கிறது. 

திருவாஞ்சியத்து இறைவனுடன் சகஜ சக்தியாக விளங்குபவள், அழகு தமிழில் "மருவார்குழலி' என அழைக்கப்படும் பெருமைமிகு அம்பிகையாகவும் திகழ்கிறாள். 

துர்க்கை திருவாஞ்சியத்தில் அஷ்டபுஜங்களுடன் மகிஷாசுரமர்த்தினியாக காட்சி அளிக்கிறார். இவருக்கு 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வேண்டியது கிட்டும் என்பதும், 21வாரம் செவ்வாய்க்கிழமைகளில் மலரிட்டு வழிபடுவோர் எண்ணியது எய்துவதும் சிறப்பாகும். 

இங்குள்ள பைரவருக்கு மூன்று கண்கள் உண்டு. இவர் காதில் குண்டலமும், சர்ப்ப ஆபரணத்தை அணிந்து நாய் வாகனத்தின் மீது அமர்ந்து அருள்பாலிப்பார். இத் திருத்தலத்தில் பைரவர் தனது கோலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் யோக பைரவராக காட்சி அளிக்கிறார். சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். நரம்பு சம்பந்தப்பட்ட எந்த வியாதிகள் இருந்தாலும் நெய்யினால் தயார் செய்யப்பட்ட வடை மாலை சாத்தி அபிஷேகம், அர்ச்சனை செய்து நிவர்த்தி பெறலாம்.              

அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியில் அச்சுதமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 2.கி.மீ.  தொலைவில் திருவாஞ்சியம் திருத்தலத்தை அடையலாம். தொடர்புக்கு: 9944681065. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com