தேவியின் திருத்தலங்கள்: 38. திருநீலக்குடி ஒப்பிலாமுலையாள்

அம்பிகையை திருப்தி செய்ய, பூஜையோ, யாகமோ தேவையில்லை. நமக்குள் எளிமை, அடக்கம், பணிவு நிரம்பி இருந்தால் போதும்.
தேவியின் திருத்தலங்கள்: 38. திருநீலக்குடி ஒப்பிலாமுலையாள்
தேவியின் திருத்தலங்கள்: 38. திருநீலக்குடி ஒப்பிலாமுலையாள்

"யயோ: காந்த்யா யாந்த்யா: ஸசிகிரண - ஸாரூப்ய -ஸரணே:
விதூதாந்தர் - த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ!' 

- செளந்தர்ய லஹரி 

அம்பிகையை திருப்தி செய்ய, பூஜையோ, யாகமோ தேவையில்லை. நமக்குள் எளிமை, அடக்கம், பணிவு நிரம்பி இருந்தால் போதும். "தயா சர்வ பூதேஷு' என்று எல்லா உயிர்களிடமும் அருள் இருக்க வேண்டும். இதனால் நம் ஆத்மகுணம் அதிகரிக்கும்.

அந்த குணத்தைத் தருபவள் அன்னை ஸ்ரீ ஒப்பிலாமுலையாள்.  

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி விரோதம் வளர்ந்து, நிறைய உயிர்ச் சேதம் ஏற்பட்டதால், இரண்டு தரப்பு குருமார்களும் யோசித்து, பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கலாம், அதை அருந்தினால் சாகாவரம் கிடைக்கும் என்று முடிவு செய்கிறார்கள்.

அதன்படி மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருப்பாற்கடலைக் கடைந்தனர். 

அசுரர்களும், தேவர்களும் இருபக்கமும் பிடித்து இழுத்ததில் வாசுகியின் உடல் மலையில் அழுந்தி இழுபட்டதில், வலி தாங்க முடியாமல் வாசுகி விட்ட  பெருமூச்சு ஆலகால விஷமாக வெளிப்பட்டது. அதை அழிப்பது எப்படி என்று அனைவரும் திகைத்தனர்.

சகல பிரபஞ்சங்களையும் அழிக்கும் வல்லமை பெற்ற சர்வலோக நாயகனான ஈசன், விஷத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அது அவருக்குள் இறங்கி விட்டால், அவருள் அடங்கி இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆபத்து என்றுணர்ந்த தேவி உடனடியாக ஈசனின் கழுத்துப் பகுதியை இறுக்கிப் பிடித்து விஷம் உடலுக்குள் செல்லாமல் தடுத்து விட்டார். 

விஷம் தொண்டையிலேயே நின்று அந்தப் பகுதி நீல நிறமாகி  விட்டது. இதனால் ஈசன் "நீலகண்டன்' என்று அழைக்கப்பட்டார்.

அந்தப் பெயருடன் அருள்மிகு ஒப்பிலாமுலையாள் உடனிருக்க, ஈசன் திருநீலக்குடி என்ற திருத்தலத்தில்  வீற்றிருக்கிறார். 

இங்கு அம்பிகை, இறைவன் தொண்டையில் நிற்கும் விஷத்தின் பாதிப்பைக் குறைக்க, தினமும் எண்ணெய் அபிஷேகம் செய்வதாக ஐதீகம். 

எனவே, நல்லெண்ணெய் பாத்திரத்தை அம்பிகையின் பாதத்தில் வைத்து பூஜை செய்த பிறகே, ஈசனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. 

குடம் குடமாக எண்ணெய்  ஊற்றினாலும், அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுகிறது.

அடுத்தநாள் பார்த்தால் அவரது திருமேனி பல வருடங்களாக எண்ணெய் தடவாதது போல உலர்ந்து காணப்படும். அபிஷேகம் செய்த எண்ணெய் எல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இதுவரை யாராலும் கண்டு பிடிக்க முடியாத மர்மம். 

தினசரி எண்ணெய் அபிஷேகம் செய்வதால் வழுவழுப்பாக இருக்க வேண்டிய சிவலிங்கம், உலர்ந்து சொரசொரப்பாகவே காட்சி தருகிறது. இந்த அபிஷேக எண்ணெயை உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தலத்தில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உண்டு. ஒன்று பக்தனின் விருப்பத்தை நிறைவேற்றும் "பக்த பீஷ்டப் பிரதாயினி' எனும் "தவக்கோல நாயகி'. மற்றொன்று "அநூபமஸ்தனி' எனும் திருமணக் கோலத்தில் உள்ள  "அழகாம்பிகை'. 

இக்கோயிலில் ராஜகோபுரம் இல்லை. இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. 

ஐந்து இலைகள் கொண்ட பஞ்ச வில்வமரம் தல விருட்சமாக இருந்தாலும், உள் பிரகாரத்தில் இருக்கும் பலாமரம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது தெய்வீக மரம் என்றும் அழைக்கப்படுகிறது. 

இதில் காய்க்கும் பலாப்பழத்தைக் கொய்து, முதலில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்த பின்னரே நாம் சாப்பிட வேண்டும்.

நிவேதனம் செய்யாமல் பழத்தை வெளியில் கொண்டு போனால் அதில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப் போகிறது. இங்கு தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன. 

மார்க்கண்டேயருக்கு சிரஞ்சீவித் தன்மை வழங்கிய இடம் திருநீலக்குடி. இங்கு வழிபட்டால் ஆயுள் பலம் கூடும். ராகு, கேது தோஷ பரிகாரங்களும் இங்கு செய்யப்படுகிறது.

தன்னை வழிபடும் பக்தர்களின் அபிலாஷைகளை தேவியானவள் ஸ்ரீமனோக்கியநாத சுவாமியிடம் தைல அபிஷேகத்தின்போது சொல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். 

அழகாம்பிகை சந்நிதியில் வழிபட்டு, நெய் விளக்கு ஏற்றினால், திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிடைக்கும். வரங்களை வாரி வழங்குவதில் ஒப்பில்லாதவள் என்பதால்தான் இத்தலத்து அன்னை "ஒப்பிலாமுலையாள்' என்ற பெயரும் தாங்கி நிற்கிறாள். பிரிந்திருக்கும் தம்பதியினர் இறைவியை வழிபட்டால் ஒன்று சேருவார்கள்.

அப்பர் பெருமானை, பல்லவ மன்னன், சமணர்களின் ஆலோசனைப்படி  கல்லோடு கட்டி, கடலில் எறிந்த போது, இத்தலத்து இறைவனைப் பாடித்தான் மீண்டு வந்தார். 

"கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே..!' 
- என்று பாடுகிறார் அப்பர்.

சித்திரைத் திருவிழா இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரம், பெளர்ணமி, கார்த்திகை, சிறப்பு விழா நாள்களில் அபிஷேகம், பூஜைகள் மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது.  

"தாயே! உன்னையே நான் நினைந்துருகிய பின், என் வேதனைகள் நின்னதன்றோ? அறிவிலி போல் நான் ஏன் ஏங்கி  நிற்க வேண்டும்?' - என்கிறார் மூககவி.

துன்பக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும் நம்மைத் தோணியாகக் காப்பது அம்பிகையின் கண் அசைவே. அவளின் உருவத்தை மட்டுமே சிந்தையில் வைத்து வாழ்பவர்களுக்கு அபாயம் என்பது இல்லை..!

அமைவிடம்: கும்பகோணம் - காரைக்கால் வழித்தடத்தில், ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ளது தென்னலக்குடி எனும் திருநீலக்குடி திருத்தலம்.
(தொடரும்)

படம்: பொ. ஜெயச்சந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com