172. பொருநை போற்றுதும்! அழகான குற்றாலம்

தென்காசியில் திருக்கோயில் எழுப்புவது தம்மால் மட்டும் முடியாது என்றுணர்ந்த மன்னர், பக்தர்களின் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டார்.
பொருநை போற்றுதும்!
பொருநை போற்றுதும்!

தென்காசியில் திருக்கோயில் எழுப்புவது தம்மால் மட்டும் முடியாது என்றுணர்ந்த மன்னர், பக்தர்களின் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டார். ஆயின், இத்தகு பேருதவியைச் செய்வதற்காக பக்தர்களை காலந்தோறும் வணங்குவதாக வாக்குக் கொடுத்தார். அதன்படியே, திருக்கோயிலின் வாயிலில் இவருடைய (சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்) உருவம் காணப்படுகிறது. எப்போதும் வணங்கிக் கொண்டேயிருக்கிறார். 

சடையவர்மன் பராக்கிரம பாண்டிய மன்னர், இறைவனாரின் ஆணைக்கேற்ப திருக்கோயிலைக் கட்டுவித்தபோது, கோயில் அமைப்புக்காகச் சிற்றாற்றின் போக்கைச் சற்றே மாற்றவேண்டி வந்தது. லேசாகத் தெற்குப் புறமாக நதியின் ஓட்டம் மாற்றப்பட்டது. 

இவ்வாறு மாற்றுவது தவறல்லவா என்னும் எண்ணம் ஒருபுறம், திருக்கோயில் என்பது காலங்காலத்திற்கும் நின்று பலருக்கும் உதவவேண்டுமே என்னும் எண்ணம் ஒருபுறம்; இரண்டுக்கும் இடையில் திருக்கோயிலைக் கட்டுவிக்க முடிவெடுத்து விட்டாலும், நதிப்பெண்ணாளிடம் மன்னிப்புக் கோருகிற முயற்சிதான், சிற்றாற்று வீரியம்மன் கோயில்களை அமைத்த பாங்கு! 

இப்போது இக்கோயில்கள் இருக்கும் இடங்களின் வழியாகவே முன்னாட்களில் சிற்றாற்றாள் பாய்ந்தாளாம். திசை மாற்றியபோது, இவ்விடங்களில் இவளின் போக்கு தடைபட்டது. தடைபட்டதற்காகவும், திசை மாற்றியதற்காகவும் வீரியம் கொண்டு சினந்து விடக்கூடாது என்பதற்காகவே, ஆற்றுப் பெண்ணாளின் ஆற்றலுக்குக் கோயில்கள் எழுப்பப்பட்டன. எனவேதாம் இவை "சிற்றாற்று வீரியம்மன் ஆலயங்கள்' ஆயின.  

 சிற்றாற்றைக் குறித்து அவ்வப்போது கண்டிருக்கிறோம் என்றாலும், சற்றே நினைவுபடுத்திக் கொள்வோம். 

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடிப் பகுதி பொதிகை, இல்லையா? மலைத் தொடர்ச்சியின் தென்முனை "பொதிகை' என்றால், சற்றே வடக்கில் உள்ள பகுதிதான் "திரிகூடமலை'. 

திரிகூடமலையில் உற்பத்தியாகும் சிற்றாறு, மலையின் மீதே பற்பல அருவிகளாகப் பிரிந்து விழுகிறது. கடைசியில், குற்றாலத்தில் குற்றால அருவியாகச் சரிகிறது. இங்கிருந்து சிற்றாறு என்னும் பெயரோடேயே கிழக்கு முகமாகப் பாய்கிறது.  

குற்றாலத்திற்கு வடக்கே சொக்கம்பட்டி மலைகள். இங்கே உற்பத்தி ஆவது "கறுப்பாறு' (இதையே கருப்பா நதி என்றும் அழைப்பதுண்டு). பைம்பொழில் (பம்புளி) மற்றும் மேக்கரைப் பகுதிகளுக்கு மேற்கே உள்ள மலைகளிலிருந்து "அனும நதி' ஆரம்பிக்கிறது. 

கிழக்காக ஓடிவரும் அனும நதியுடன்,  வடக்கேயிருந்து தென்கிழக்காகப் பாய்ந்துவரும் கறுப்பாறு சேர்ந்து கொள்கிறது. இதனால், சாம்பவர் வடகரைப் பகுதியில் அனுமநதியானது நன்றாகப் பெருகிவிடுகிறது. இவ்வாறு பெருகிய அனும நதி இன்னும் சிறிது கிழக்காகப் பாய்ந்து, வீரகேரளம்புதூருக்கு அருகே சிற்றாற்றில் கலக்கிறது. 

கழுகுமலைப் பகுதிகளில் சின்னஞ் சிறிய ஆறொன்று உற்பத்தி ஆகிறது. இதன் நீர் வரத்தும் போக்கும் குறைவு. இந்த ஆற்றைத்தான் "உப்போடை' என்றும் "கயத்தாறு' என்றும் அழைப்பார்கள். 

ஏறத்தாழ நேர் தெற்காக ஓடிவரும் உப்போடை, கங்கைகொண்டான் பகுதியில் கிழக்காக வந்துகொண்டிருக்கும் சிற்றாற்றில் இணைகிறது. இதன்பின்னர், சிற்றாறு தெற்காகத் திரும்பி, சீவலப்பேரியில் பொருநையாளுடன் கலந்துவிடுகிறது. 

ஆதியில், உப்போடையும் சிற்றாறும், கங்கைகொண்டானுக்குப் பின்னரும் தனித்தனியாகவே பாய்ந்து, சீவலப்பேரியில் பொருநை, சிற்றாறு, உப்போடை மூன்றும் இணைந்திருக்கவேண்டும். இதனாலேயே மூன்றுநதிகள் கூடிய இவ்விடம், "முக்கூடல்' என்றழைக்கப்பட்டது. "முக்கூடற்பள்ளு' என்னும் தமிழிலக்கியம் தோன்றுவதற்கு இந்த முக்கூடலே காரணம்.   
சிற்றாறு என்றவுடனேயே "குற்றாலம்' என்னும் பெயர் நினைவுக்கு வந்துவிடும். மலைகளில் சஞ்சரிக்கும் சிற்றாறு, ஓரளவுக்குத் தரையைத் தொடுவது குற்றாலம் எனலாம். 

திரிகூட மலையைப் பற்றியும், இந்த மலைகளில் வீழும் அருவிகள் பற்றியும், இந்த அருவிகளின் அழகு பற்றியும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியுமா? அப்படியே வர்ணிக்க வேண்டுமென்றால் குற்றாலத்துக் குறத்தியைத்தான் கேட்கவேண்டும். வாருங்கள், அவளையே கேட்போம்: 

 "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
        மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் 
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
        கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்
தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
        செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணி அலங்காரர் 
        குற்றால திரிகூட மலை யெங்கள் மலையே!' 

திரிகூட மலைதான் குற்றால மலை. இங்குதான் எத்தனை எத்தனை காடுகள்; சந்தனத் தோப்பு முதல் செண்பகக் காடுகள் வரை எத்தனை எத்தனை..? இன்னும் இன்னும் அருவிகள். தேனருவி, செண்பகாதேவி அருவி, வடவருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி... வானத்திலிருந்து இறைவனே நீரூற்றுவது போல் இத்தனை அருவிகள்..! 

அருவி நீரெல்லாம் துள்ளித் தெளிக்கும்போது, ஒவ்வொரு துளியிலும் எத்தனை வர்ண ஜாலம்..? 

இந்த ஜாலத்திற்கு என்ன காரணமாம்? ஒன்றுமில்லை, குற்றாலத்தைக் காண வந்த சூரியன், தேரும் தேர்ச் சக்கரமும் வழுக்கி அருவியில் வீழ்ந்துவிட்டானாம். 
இத்தனை அழகான குற்றாலம்! 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com