அனைத்து பருவங்களுக்கான ஓர் அடையாளம்!

இந்துக்கள் மிக பக்தியுடன் ராமரைப் போற்றி வணங்கினாலும் எந்த ஒரு கோயிலிலும் அனுமன் இல்லாத ராமர் இல்லை.
அனைத்து பருவங்களுக்கான ஓர் அடையாளம்!

இந்துக்கள் மிக பக்தியுடன் ராமரைப் போற்றி வணங்கினாலும் எந்த ஒரு கோயிலிலும் அனுமன் இல்லாத ராமர் இல்லை. ஆனால் பல அனுமன் கோயில்கள் சிறிதாகவோ, பெரிதாகவோ இருந்தாலும் அனுமன் மட்டும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  இது, ராமனுக்கும் அனுமனுக்கும் உள்ள நுட்பமான உறவின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.  பல கோடி இந்தியர்கள் "அனுமன் சாலிசா'வை தினமும் படிக்கின்றனர். 

துளசிதாசர் (கிபி.1532}1623) நாற்பது பாக்களைக் கொண்டு "அனுமன் சாலிசா' எழுதியபோது அந்தப் புத்தகம் இந்து மதத்தின் மிக முக்கிய நூலாக விளங்கும் என்று நினைத்திருக்க மாட்டார்.  இன்று அனுமனை வணங்க, இந்திய மக்கள் இனம், மொழி, எல்லைகள் கடந்து, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மறந்து அனுமன் சாலிசாவைப் பல மொழிகளில் படிக்கின்றனர். 

துளசிதாசர் எழுதிய பாக்களுள் குறைந்தபட்சம் 2 பாக்களாவது பலதரப்பட்ட மக்களுக்கும் மனப்பாடமாகத் தெரியும்.  அவர் எழுதிய பாக்களுள் பெரிதும் மக்கள் அறியாதவையாக இருப்பவை அவர் தனது ஹரித்வார் கும்பத்தில் தனது சமாதி நிலையில் எழுதியதாக இருக்கலாம். மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்ட அவரது பாடல்கள் பெரும்பாலானவை அவர் ஒளரங்கசீப்பின் சிறைச்சாலையில் இருக்கும் பொழுது எழுதப்பட்டது.

ஒளரங்கசீப்பிடம் துளசிதாசர் "நேர்மையான பக்தி இன்றேல் கடவுளைக் காண இயலாது' என்று கூறியதால் சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் அவர் அனுமன் சாலிசா எழுதி முடித்தவுடன், ஒளரங்கசீப்பின் கோட்டைக்குள் பெரிய வானரக் கூட்டம் ஒன்று நுழைந்து, அங்கு சிறைக் கைதியாக இருந்த துளசிதாசரை விடுவிக்குமாறு கட்டளையிட்டது வரலாற்று நிகழ்வாகும்.

துளசிதாசர் சாதாரண கவியல்ல. சமஸ்கிருதத்தில் ராமாயணத்தை எழுதிய வால்மீகியின் மறுபிறவி என்றே நம்பப்பட்டார். வாராணசியைச் சேர்ந்த துளசிதாசர் ராமபிரானின் தீவிர பக்தர். துளசிதாசர் அனுமனைச் சந்தித்த இடமாக கூறப்படும் வாராணசியில் உள்ள "சங்கட்மொசன்' அனுமன் கோயில் அவரது பெருமைக்குரியதாக விளங்குகிறது. 

சீதையின் தேடலின் போது, அயோத்தியில் ராமனுக்குத் துணைபுரிந்த அனுமனின் சேவைகளைக் கண்டு பெரிதும் வியந்து போன துளசிதாசர், தனது பெரும் பக்தியை அனுமன் மீது செலுத்தினார்.  
அனுமனின் தைரியம், பலம், ஞானம், பிரம்மச்சரியம், பக்தி மற்றும் அனைத்தையும் கண்டு வியந்தார்.  வாயு பகவானின் மகனாகிய அனுமன், சிவபெருமானின் அம்சமாகிய ருத்ரரின் மறுபிறவியாகவே காணப்பட்டார்.  

அனுமன் சாலிசாவைப் பக்தியோடு படிப்பதால், நம் வாழ்வில் ஏற்படும் கடுமையான துன்பங்கள் அனுமனின் தெய்வீகத் தலையீட்டால் குறையும் என்று கூறப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் அனுமனை செவ்வாய்க்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் பிரார்த்திக்கின்றனர். அனுமனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்தது என்றாலும் சனி மற்றும் செவ்வாய் தோஷம் உடையவர்கள் அனுமன் சாலிசாவை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் படிக்கலாம்.

ஒருமுறை, தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் என்னிடமிருந்து "அனுமன் சாலிசா' நூலின் கையடக்கப் பிரதியைப் பெற்றுச் சென்ற ஓர் இளைஞரை நீண்ட நாள்களுக்குப் பின் சந்தித்தேன்.  அப்பொழுது நான் அவரிடம், ""அனுமான் சாலிசாவை தினமும் படிக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அவர் தந்த பதில் எனக்கு அதிருப்தியளித்தது. 

"நான் படித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் இப்பொழுது நேரம் இல்லை!'' என்றார். நான் சற்று அவரை உற்று நோக்கினேன். 

"கடவுளுக்காக ஐந்து நிமிடம்  ஒதுக்க முடியாத நீங்கள், இவ்வளவு நேரம் மெட்ரோவில் சும்மா அமர்ந்து நேரத்தை வீணாக்குகிறீர்களே!'' என்றேன். அவர்  தன்னை மாற்றிக் கொள்வதாக உறுதி அளித்தார்.
அனுமன் சாலிசாவை தினமும் படிப்பது, நம் வாழ்க்கையில் நாளடைவில் பெரும் பயன்களை ஈட்டித் தரும். முதலில் அது உங்களது மன அழுத்தத்தைப் போக்கும்.  இரவு உறக்கத்தில் கெட்ட கனவு வருவதைத் தடுக்க, மாணவர்கள் தங்களது தலையணையின் கீழே அனுமன் சாலிசாவை வைத்திருப்பது நல்லது. 

உறங்கச் செல்வதற்கு முன்பு அனுமன் சாலிசா பாக்களை ஒருமுறை படிக்கலாம்.  ஆனால், ஒவ்வொரு முறையும் அனுமன் உங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பது போல, ஒவ்வொரு வார்த்தையின் உச்சரிப்பையும் உற்றுநோக்கி பக்தியுடன் படித்தல் வேண்டும். 

பலர் அனுமன் சாலிசாவை தங்கள் பயணத்தின்போது அனுமன் தங்கள் பாதுகாப்புக்கு வரவேண்டி படிக்கிறார்கள். வேலை வாய்ப்பு, நேர்காணல், தேர்வு நேரம், திருமணம் போன்ற வாழ்க்கையின் எல்லா முக்கிய நிகழ்வுகளுக்கும் முன்னால் அனுமன் சாலிஸôவைப் படிப்பது நன்மை பயக்கும். 

தமிழில்... 

"அறம் பொருள் இன்பம் வீடென நான்கும்
தரும் எங்கள் ஸ்ரீராமன் திருப்புகழ் தன்னை
திறம் மிக்க சற்குரு ஸ்ரீகிருஷ்ணானந்தரின்
திருவடித் தூசியின் ஆசியால் பாடுகின்றேன்....' 

என்று தொடங்கும் நூலில், 1 முதல் 10 வரையுள்ள பாக்கள் அனுமனின் நல் உருவத்தையும், அறிவையும், நல்லொழுக்கத்தையும், தைரியத்தையும் போற்றும். 11 முதல் 20 வரை உள்ள பாக்கள் ராமருக்கு அனுமன் உரைத்த சேவைகளையும், அனுமனின் பக்தியைப் பற்றியும் விளக்கும். இறுதியாக 21முதல் 40 வரை உள்ள பாக்கள் அனுமனின் கருணை குணத்தையே பேசும். 

நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அனைத்திற்கும் ஏதோ ஒரு "பா'வில் அதைத்தீர்க்கும் வழியும், ஆற்றலும் இருக்கும்.

அனுமனை தினமும் வணங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதன் விளைவாக உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்வதைக் காண்பீர்கள். அனுமன் லட்சக்கணக்கானோரை ஈர்க்கும் ஓர் தெய்வீக உருவம்!

- கட்டுரையாளர்: எம்.ஆர்.நாராயணசுவாமி

தமிழில்: ஜெய பிரியங்கா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com