தேவியின் திருத்தலங்கள் 11: சீர்காழி திருநிலை நாயகி

அம்பிகை ஒளி வடிவமானவள். உருவமற்றவள். அவளின் இருப்பிடம் தன் குழந்தைகளின் இதயம்தான். தூயவள்.
தேவியின் திருத்தலங்கள் 11: சீர்காழி திருநிலை நாயகி

"த்வதீயம் செüந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும் 
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சி ப்ரப்ருதய:'

-செளந்தர்ய லஹரி

அம்பிகை ஒளி வடிவமானவள். உருவமற்றவள். அவளின் இருப்பிடம் தன் குழந்தைகளின் இதயம்தான். தூயவள். அனைத்திற்கும் உயர்வானவாள். அவள் இதயம் சுத்த ஸ்படிகமானது. அந்த நிர்மலம் அவள் முகத்திலும் பிரதிபலிக்கிறது. எனவேதான் ஒப்புமை இல்லாத அழகுடன் திகழ்கிறாள்.

தாயாக இருப்பதே உயர்ந்த நிலை. அது தன்னலம் இல்லாதது. இறைவனின் அன்புக்கு ஒப்பானது. அது ஆற்றல், வலிமை. அறிவு. உலகம். "அம்மா'என்ற குரலை எங்கிருந்தாலும் கேட்டு அவள் ஓடி வருவாள். "அம்மா' என்று அழுத குழந்தைக்கு ஓடோடி வந்து ஞானப்பால் அளித்த தலம் சீர்காழி.

"காசியில் பாதி காழி' என்பது சொல்மொழி. காசியைக் காட்டிலும் மிகப்பெரிய பைரவ நக்ஷத்திரம். பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூல ஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழிதான்.

திருஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் அளித்த தலம் இது.

சிவபாத இருதயர், பகவதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் சம்பந்தர். இவர் முருகனின் அம்சம் என்று கூறுவார்கள். இவருடைய மூன்றாவது வயதில் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்த சிவபாதர், குழந்தையை கரையில் உட்கார வைத்து விட்டுக் குளிக்கச் சென்றார். 

நீண்ட நேரமாகியும் வரவில்லை. சம்பந்தருக்கு பசி ஏற்பட, "அம்மா! அம்மா!' என்று அழ ஆரம்பித்தார். அப்போது அம்பிகை ஈசனிடம் உத்தரவு பெற்று, தங்கக் கிண்ணத்தில் பாலுடன் வந்து சம்பந்தருக்கு பால் புகட்டுகிறாள். 

வாயில் பால் வழிய அமர்ந்திருந்த குழந்தையைப் பார்த்த சிவபாத இருதயர் ""யாரிடமும் எதையும் வாங்கக் கூடாது என்று உனக்குத் தெரியாதா? அபசாரம் செய்து விட்டாயே!'' என்று குழந்தையை அடிக்கக் குச்சியை ஓங்க... 
சம்பந்தர் பாடுகிறார்:

"தோடுடைய செவியன் விடையேறிய தூவெண் மதி சூடி, 
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்...' 
என்று, தன் குழந்தையின் பசி தீர்க்க அன்னை வந்து அருள் விளையாடல் நடத்திய தலம் இது. 

பிரளய காலத்தில் எங்கும் கடல் பொங்கி எழுந்த காலத்தில் ஈசன் அறுபத்தி நான்கு கலைகளை உடையாக அணிந்து, பிரணவத்தை தோணியாக அமைத்து, உமாதேவியுடன் அதில் கிளம்பி வருகிறார். எல்லா இடங்களும் அழிந்து சீர்காழி நகரம் மட்டும் அழியாமல் இருந்தது. 

அங்கு இந்தத் தோணி நிலை நிற்க, இதுவே மூலஸ்தானம் என்று ஈசன் உமாதேவியிடம் கூற, அவள் திருநிலை நாயகியாக இங்கு கோயில் கொள்கிறாள். அவளுக்கு "பெரியநாயகி',  "ஸ்திர சுந்தரி' என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. தோணியை இயக்கி வந்ததால் ஈசனுக்கு "தோணியப்பர்' என்று பெயர். பிரம்மா சிவனை வணங்கி, மீண்டும் படைப்புத் தொழிலை ஆரம்பித்த தலம் என்பதால் "பிரம்மபுரீஸ்வரர்' என்ற பெயரும் வழங்குகிறது.

அம்பிகை இங்கு மஹாலட்சுமி வடிவமாக, சக்தி பீடத்தில் பதினொன்றாவது பீடமாக இருக்கிறாள். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் ஜீவசமாதி அடைந்த இடம். இவரின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடி உச்சியில் இருக்கும் சட்டை நாதரைத் தரிசிக்க முடியும்.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் பெரியநாயகி அம்மன், குழந்தை சம்பந்தருக்கு அமுது ஊட்டிய நிகழ்ச்சி ஆண்டுதோறும், சித்திரை இரண்டாம் நாள் "திருமுலைப்பால் உற்சவம்' என்று கொண்டாடப் படுகிறது. திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா நடைபெறுகிறது.

இத்தலம் சீர்காழி நகரின் நடுவில், நான்கு கோபுர வாயில்களுடன் அமைந்துள்ளது. இதன் முன்பாக பிரம்ம தீர்த்தம் உள்ளது. இதன் கரையில்தான் அன்னை, சம்பந்தருக்கு ஞானப்பால் அளித்தது. 
சம்பந்தர் திருநாவுக்கரசரை "அப்பர்' என்று அழைத்தது இத்தலத்தில்தான்.  

இக்கோயிலுக்கு சோழ மன்னர்கள் திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். கோயிலின் உள்ளே, கட்டுமலை மீது தோணியப்பருடன் பெரியநாயகி காட்சி அளிக்கிறாள். அம்பாள் சந்நிதி தனிக் கோயிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 

இங்கு பவள மல்லி தலமரமாக இருக்கிறது. இருபத்தி இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்திற்கு வந்து பிரம்மன், குரு பகவான், திருமால், ராகு, கேது, சூரியன், அக்னி, ஆதிசேஷன், வியாச முனிவர், முருகன் ஆகியோர் வழிபட்டு இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மூல சேத்திரமாக சீர்காழி விளங்குகிறது. அம்பிகை, அறிவு, ஞானம், கவி புனையும் ஆற்றல் என்று அனைத்தும் அளிக்கிறாள். 
இதையே ஆதிசங்கரர், 

"தவ ஸ்தன்யம் மன்யே தரணிதர கன்யே ஹ்ருதயத்.......
......தயாவத்யம் தத்தம் திரவிடஸிஸý ஆஸ்வாத்ய தவ யத் 
கவீனாம் ப்ரௌடானாம் அஜனி கமனீய கவயிதா..!' 
என்று பாடுகிறார்.

"உன்னுடைய திருமுலைப்பாலில் வாக்தேவதையான சரஸ்வதி இருக்கிறாள். எனவேதான் உன்னுடைய பாலை அருந்திய குழந்தை தலை சிறந்த கவிஞர்களுக்கும் கவிஞன் ஆனான் அல்லவா?' என்று போற்றுகிறார்.  

அம்பிகையை வணங்கினால் கவித்துவ புலமை பெருகும் என்பது கண்கூடு.

வாழும் வாழ்க்கையில், ஞானமும், நல் வித்தையும் மிக முக்கியம். இந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ள, இதைச் சிறப்புடன், மகிழ்ச்சியுடன் வாழ அம்பிகையின் அருள் மிக முக்கியம். அவள் அள்ளித் தரும் ஞானமே வாழ்வைப் புரிந்து கொள்ள உதவுகிறது. 

உலகின் அனைத்து விதமான ஆனந்தத்துக்கும் அவளே மூலம். தயை நிறைந்த தாய். அறிவிலிருந்துதான் அத்தனை ஆனந்தமும் உண்டாகிறது. "சித் சத்' என்ற வடிவாயிருக்கும் அம்பிகை அந்த அனுபவத்தை, அறிவைத் தன் குழந்தைகளுக்கு அள்ளித் தருகிறாள்.

பெரியநாயகி அம்மையை "அம்மா!' என்று கை தொழுதால், அவள் நாம் வேண்டுவது எல்லாம் தருவதுடன், அதற்கு மேலும் நல்லன எல்லாம் தருவாள்..!
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com