திருவெம்பாவையில் வரும் நீராட்டு

பாவையர் பாவையை விளித்துப் பாடும் பாட்டு "பாவைப் பாட்டு' எனப்படும். பாவை என்னும் சொல் பெண்ணைக் குறிக்கும்.
திருவெம்பாவையில் வரும் நீராட்டு

பாவையர் பாவையை விளித்துப் பாடும் பாட்டு "பாவைப் பாட்டு' எனப்படும். பாவை என்னும் சொல் பெண்ணைக் குறிக்கும். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் நாச்சியார் பாடிய திருப்பாவையும், சைவ சமயத்தில் மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவையும் குறிப்பிடத்தக்கவை. 

பாவைப்பாட்டு என்பது தமிழ்நாட்டுப் பழம்பெரும் திருவிழாப்பாட்டாகும். திருப்பாவையும், திருவெம்பாவையும் "ஏலோர் எம்பாவாய்' என்று முடியக் காண்கிறோம். கன்னிப் பெண்கள் பாடினால் மழை வரும் என்று அக்கால மக்கள் நம்பினர். 

தமிழ்நாட்டில் தைந்நீராடல்: தமிழ்நாட்டில் தைந்நீராடல் பெருங்கடவுள் நோன்பாக விளங்கிற்று. தூய்மையைப் பெருக்கிக் கொள்வதே அதன் நோக்கம். இப்போது கோயில்களில் "தீர்த்தவாரி' என்பது இதனையே நினைவூட்டுகிறது. ஆற்றிலே மூழ்கும்போது ஆற்றினைத் தாய்க் கடவுளாக எண்ணி முழுகுகின்ற வழக்கமும் உண்டு. 

கங்கையாடல், காவிரித் துலா முழுக்கு முதலானவை இந்த கடவுள் கருத்தில் வளர்ந்தவை. இந்த வளர்ச்சி மார்கழி நீராடலில் உண்டு எனலாம். நீராடல் என்பது குமரியாடலை என்பர் வைணவப் பழம் பெரும் உரையாசிரியார்கள். எனவே இருவேறு போக்குகள் நீராட்டில் நாம் கண்டாலும், கடவுள் நோன்பின் தூய்மைக் கோலமே தமிழ்நாட்டில் நிலைத்து நின்றுவிட்டது எனலாம்.

மார்கழி நீராடல்: கடவுள் நோன்பின் தூய்மைக் கோலம் என்ற புரட்சியைச் செய்தவர்கள் ஆண்டாளும், மாணிக்கவாசகருமே. ஆம்! மார்கழி நீராடலை ஆண்டாளும் பாடுகிறார். "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ' என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு நீராடப் போவது போலவே தொடங்குகிறது அவரது திருப்பாவை. "மழை வேண்டும் வேண்டுகோள் மார்கழி நீராடலே'என்று திருப்பாவை பாடுகிறது. 

"வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்'என்கிறாள் ஆண்டாள் நாச்சியார். மார்கழி நீராடும்போது மேலையாம் செய்வனவற்றைக் கூறி அவற்றை ஆண்டவன் அருளுமாறு வேண்டுகின்றது திருப்பாவையின் 26-ஆம் பாட்டு.

மாணிக்கவாசகர்: மாணிக்கவாசகப் பெருமான் பாடிய திருவெம்பாவையோ நீராட்டை நெடுகப் பாடுகிறது.
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும் போது பாடப்பெற்றது திருவெம்பாவை. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. இதற்குச் சிறப்பாக விளங்குவது எம்பாவாய் என்னும் தொடர் மொழி.

மாணிக்கவாசகர் நீராடலைக் குறிப்பாக அன்றி நேர்முகமாய் விளக்கிப் புனைந்துரைத்து அருள்கிறார்.

திருப்பாவை - திருவெம்பாவை - ஒப்பாய்வு: "அம்பா ஆடல் எனத் தைந்நீராடலைப் பரிபாடல் குறிக்கும்; தாய்க்கடவுளின் வடிவை மணலில் அமைத்து வணங்கிப் பின் நீராடுவதே மார்கழி நீராடல்' எனத் தமிழறிஞர் மு. இராகவையங்கார் விளக்குவார். இன்றும் காவிரிக்கரையிலும், கங்கைக் கரையிலும் இத்தகைய வழிபாடு நடைபெறுவதைக் காணலாம். 

சிவபெருமானே நீலமேனி வாலிழை பாகத் தொருவன் ஆதலின் அம்மையப்பன். தாயின் தண்ணருள் தோன்றும் இடமெல்லாம் அப்பனின் ஆரருளும் உண்டு. ஆற்றினையோ நீரினையோ கண்டால் தாயருளாகவும், அம்மையப்பனின் அருளாகவும் தோன்றுகிறது. சிவன் வழிபாடு இது.

திருப்பாவையும் மழையைத் திருமால் விடும் அம்புகளோடும், மேகத்தின் நிறத்தினை அவனுடைய நிறத்தினோடும், மின்னலை அவன் சக்கரத்தின் ஒளியோடும், இடியினை அவன் சங்கொலியோடும் ஒன்றுபடுத்திக் காண்கிறது. 

திருவெம்பாவையோ, பழைய நீராட்டு வழக்கப்படி மழையைத் தாயோடு ஒன்றுபடுத்திக் காண்கிறது. மேகத்தின் நிறமே தாயின் கருமையாகவும், அதன் குமுறலை அவள் சிலம்பாகவும், வானவில்லை அவள் திருப்புருவமாகவும், வான்மழையை அவள் அருள் மழையாகவும் ஒன்றுபடுத்திக் காண்கிறது.

மழையையும், பொய்கையையும் அம்மையப்பனாகக் காண்பது, உலகம் முழுவதையும் அம்மையப்பனாகக் காணும் அருட்காட்சியின் அரிய அடையாளம். இந்தக் காட்சியைத் தானே திருநாவுக்கரசர், திருவையாற்றில் கயிலைக் காட்சியாகக் கண்டாரெனப் பெரிய புராணம் பாடுகிறது.

"மாதர் பிறைக் கண்ணியானை'என்ற தேவாரப் பாடல் இந்த நுட்பத்தை விளக்குகிறது. தென்பாண்டி நாட்டைச் சிவலோகமாகக் கண்ட மாணிக்கவாசகப் பெருமான், கன்னிப் பெண்களும் இக்காட்சியில் பழகுமாறு திருவெம்பாவையைப் பாடியருளினார். 

நீராடல் என்பது பேரின்பத்தில் திளைத்துப் பெருமானோடு ஒன்றாகி நிலைப்பது என்று குறிக்கிறது. ஆண்டவனையே "ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்' (திருவெம்.12) என்று குறிக்கிறார். திருவெம்பாவையின் கடைப் பாட்டில் கடவுளே எல்லாவற்றிற்கும் முதலும், முடிவும், யோகமும், அருளுமாகியிருக்கின்ற அழகினைப் பாடி அந்த இறைவனின் அழகிய திருவடி மலர்களே, "போற்றியாம் மார்கழி நீராடும் பொன்மலர்கள்' (திருவெம்.20) என்று பாடி முடிக்கிறார்.

பூம்புனல் பாய்ந்து ஆடுதல்: இருள் மறைகிறது. கதிரவன் எழ, அவ்வொளியில் எல்லாம் ஒளி மயமாக விளங்குவது போல, இறைவன் அவர்களுக்கு எல்லாமாகி, வேறும் ஆகி, கண்ணார் அமுதமுமாய் நிற்கின்றான். இக்காட்சியால் தம்மை மறந்து  அவன் கழலைப் பாடுகின்றனர். கன்னியர் தம் தோழியரை விளித்து, இத்தகைய பேரின்பத்தில் பாடியாடுவதே பெரும்பேறு என்பதுபோல, "பெண்ணே! இம்பூம்புனல் பாய்ந்து ஆடு' (18) என்று தனித்தனியே வருந்தியழைத்து ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.

"எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்று ஒன்றும் காணற்க' (19)
என்று வேண்டுகின்றனர்.

"இவ்வுலகில் எங்கட்கு இறைவா நீ அருள் செய்யின், ஞாயிறு எந்தத் திக்கில் தோன்றினால் என்ன? எங்கட்குக் கவலையில்லை!' என்கின்றனர்.

நீராடல் - தொகுப்பு: திருவெம்பாவையின் 11, 12, 13, 14, 15, 17, 18, 19 என்ற எட்டுப் பாடல்களில் புனலாடுவதைப்பாடி 16}ஆம் பாட்டாகிய மழைப்பாட்டில் "மழையே பொழிவாய்' எனப் பாடுவதைப் பார்க்கின்றோம். 
நீராடலுக்கிடையே மழைப்பாட்டு ஏன் வருகிறது? என்றால் நீராடல் எல்லாம் மழையால் நனைவதுபோல் ஆடி, அந்தப் போலியான மழைக்கு எதிரே உண்மை மழையே வர வேண்டுமென வேண்டிக் கொள்வதற்கே, நீராடலை இவ்வாறு விரிந்தும், புனைந்துரைத்தும், விளக்கம் கூறியும் பாடுவது திருவெம்பாவையின் தனிச்சிறப்பு என்பர்.

கல்வி கற்பிக்கும் முறையில் சிறந்த முறை "விளையாடல்களின் வழியே' என்பர் இந்நாளைய அறிஞர். ஞானப் பெருங்கல்வியினை இவ்வாறு கன்னிப் பெண்கள் பாடி, ஆடி, விளையாடும் நாடக நீர் விளையாட்டாக மாணிக்கவாசகர் பாடிய பெருமையைச் சொல்லவும் சொற்கள் இல்லை.

இவ்வாறு தமிழ்நாட்டில் மார்கழி நீராடல் ஞானப் பெருக்கில் திளைப்பதாக முடிகிறது. 

இப்பாடல்களின் விளக்கத்தையும் பொதிந்துள்ள உட்கருத்துக்களையும் படித்து, இறைவன் அருளைப் பெற்றுஉய்வோமாக! 

- தி.வே. விஜயலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com