சிம்மக்கல்லின் சின்னத்திருவடி

மதுரையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. மீனாட்சியம்மனின் பக்த தம்பதிகள்..
சிம்மக்கல்லின் சின்னத்திருவடி

மதுரையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. மீனாட்சியம்மனின் பக்த தம்பதிகள் தங்களுக்குப் பிறக்கும் தலைமகவை மீனாட்சியம்மன் சேவைக்கென விட்டு விடுவதாக வேண்டிக் கொண்டனர். பிரார்த்தனையில் பிறந்த முதல் ஆண் குழந்தையை நேர்ந்து கொண்டபடி மீனாட்சி சந்நிதியில் விட்டுச் சென்றனர். 

அக்குழந்தை கோயிலில் வளர்ந்த நிலையில், உலகத்தைப் புரிந்து கொண்டு தன்னலம் இல்லாமல் அடுத்தவருக்காக செயலாற்றும் சுத்தயோகியாக வாழத் தொடங்கினான். மீனாட்சியின் பிள்ளையாக வளர்ந்த அவரை "குழந்தை சுவாமி' என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர். 

கோயிலில் பணிகள் ஏதுமில்லாதபோது கிருதமாலா நதிக்கரையில் மரத்தடியில் தங்கி வந்தார். பொதுமக்கள் அவரை குருவாக நினைத்து வழிபடத் தொடங்கினர். தினமும் நீராடல், தவம், மக்களுடன் கூட்டு வழிபாடு என இருப்பார். மக்கள் அவருக்கு உணவு கொண்டு வருவார்கள். வேண்டும் உணவை மட்டும் சிறிது உண்டு பசியாறுவார். சில நாள்களில் உபவாசத்துடன் தவத்திலேயே இருப்பார். பல பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் நல்ல ஆலோசகராக வழிகாட்டியாக இருந்து வந்தார்.

ஊர்மக்கள் பலரின் கனவில் ஒருநாள் ஸ்ரீஆஞ்சநேயர் தோன்றினார். அவர் விக்கிரக வடிவில் கிருதுமால் நதியில் இருப்பதாகவும், தன்னை எடுத்து வழிபட்டு கலியுகத்தில் ஏற்படும் அல்லல்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். 

அதேபோன்ற கனவு, அதே நாளில் பல பேருக்கும் ஒன்றாகவே வந்ததால் அனைவரும் அதனைப் பற்றியே பேசினர். அனைவரும் சிலையைத்தேடி எடுக்க வழிகாட்டும்படி குழந்தை சுவாமியிடம் கேட்டனர்.  
தவத்திலிருந்த குழந்தை சுவாமி கண் விழித்து, மக்கள் கூட்டத்துடன் நதிக்கரைக்குச் சென்றார். ஓரிடத்தில் இறங்கி தேடச் சொன்னார். நீண்டநேரத் தேடலுக்குப்பின் முதலில் ஸ்ரீநரசிம்மர் விக்கிரகமும் பிறகு ஆஞ்சநேயர் விக்கிரகமும் கிடைத்தன. மக்கள் ஆனந்தக் கூத்தாடினர். மேலும் அதே இடத்திலிருந்து மஹாலட்சுமி, கருடாழ்வார் விக்கிரகங்களும், இரண்டு விநாயகர் விக்கிரகங்களும் கிடைத்தன.

கிருதமாலா நதியில் கிடைத்த ஸ்ரீஆஞ்சநேயரை இலுப்பை மரத்தின் கீழ் தன் கையாலேயே நிறுவினார் குழந்தை சுவாமி. அருகிலேயே மற்ற விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்தார். 

பட்டுப்போய் வெறும் கிளைகளாய் நின்ற இலுப்பை மரம் புதியதாகத் துளிர்விட்டு தழைத்தது. வெளிறிக் கிடந்த அந்தப் பகுதி முழுவதும் பசுமை செழிக்கத் தொடங்கியது. குழந்தை சுவாமி காலை, மாலை இருவேளையும் அனைத்து விக்கிரகங்களுக்கும் பூஜை செய்யத் தொடங்கினார். 

மக்கள் குழந்தை சுவாமிக்கு கொண்டு வந்த உணவுகளை தெய்வங்களுக்குப் படைத்து, மக்களுக்குக் கொடுத்துத் தானும் உண்டார். மக்களுக்கும் ஆஞ்சநேயரிடம் வேண்டியதெல்லாம் நடந்தது. வேண்டுதல்கள் அனைத்தும் வெற்றியில் முடிந்ததால் "ஜெயம் தரும் வீரஆஞ்சநேயர்' என வழங்கப்பட்டார்.

மக்களும், குழந்தை சுவாமியும் அங்கு ஓர் ஆலயம் அமைத்து வழிபாட்டைத் தொடர்ந்தனர். குழந்தை சுவாமி ஓர் அர்ச்சகரை நியமனம் செய்து, தான் இல்லாத போதிலும் பூஜைகள் நடைபெற ஏற்பாடுகளைச் செய்தார். 

அபிஷேகம் செய்யும் போது ஆஞ்சநேயர் பக்குவப்பட்ட வயது முதிர்ந்தவராக (விருத்தர்) தோன்றுவதால், "விருத்த ஆஞ்சநேயர்' எனவும் அழைக்கிறார்கள். "தாத்தா கோயில், ஆதி ஆஞ்சநேயர் கோயில்' எனவும் கூறுகின்றனர். உற்சவ மூர்த்தி மூலவரின் பக்கத்தில் எழுந்தருளியுள்ளார். 

நதியிலிருந்து ஸ்ரீநரசிம்மர் முதலில் வெளிவந்தவராதலால் ஆடிமாதம் வரும் சுவாதி நட்சத்திரத்தில் இக்கோயிலின் பிரம்மோற்சவம் 15 நாள்கள் விமரிசையாக நடக்கிறது. இதில் "விருத்த அலங்காரம்' பக்தர்களைப் பெரிதும் கவர்ந்த அலங்காரமாகும். 

அனுமன் ஜயந்தி விழா இந்த ஆண்டு மார்கழி 28}ஆம் நாள் (12.1.2021) செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்கள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அதிகமானோர் வந்து தரிசிக்கிறார்கள். அமாவாசை அன்று பிரார்த்தனை செய்தால் எந்தக் குறை இருந்தாலும் நிவர்த்தியாகும். ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றி பிரார்த்தனை செய்வது வழக்கம். 

இருப்பிடம்: மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து, பெரியார் பேருந்து நிலையம் செல்லும் வழியில் வைகை பாலத்தை அடுத்துள்ள சிம்மக்கல் பகுதியில் ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. ஷேர் ஆட்டோக்கள் நிறைய உள்ளன. 

திருக்கோயில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
-ஆர்.அனுராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com