மூலதனமும் லாபமும்!

நுண்ணறிவு, திறமை, காலம் கருதி செயல்படுதல், சாதிக்க வேண்டும் என்ற வேட்கை, தூய்மையான எண்ணம் உடையவர் எவரோ அவரே வாழ்வில் வெற்றி பெறுவார்.
மூலதனமும் லாபமும்!

நுண்ணறிவு, திறமை, காலம் கருதி செயல்படுதல், சாதிக்க வேண்டும் என்ற வேட்கை, தூய்மையான எண்ணம் உடையவர் எவரோ அவரே வாழ்வில் வெற்றி பெறுவார். இதனை ஆண்டவர் இயேசு ஓர் உவமைக் கதை மூலம் விளக்கினார்:

பொருட்செல்வம் நிரம்பிய சீமான் ஒருவர் அதிகாரமும், அறிவும் கொண்ட ராஜாவைப் போல் வாழ்ந்து வந்தார். அந்த நாட்டின் அரசன் அவரின் பெருமைகளைக் கண்டுணர்ந்து, அவரை வேறு ஒரு நாட்டுக்கு ஆளுநராக நியமித்தான். 

அவர் புறப்படும் முன்பு தமது பணியாளர்கள் மூன்று பேரை அழைத்தார். ""உங்கள் மூவருக்கும் நான் தனித் தனியே மூலதனம் கொடுப்பேன். அந்த மூலதனத்தைக் கொண்டு நீங்கள் தனித் தனியே தொழில் செய்து வரவேண்டும். நான் திரும்பி வரும்பொழுது, மூலதனத்தை மட்டும் எனக்குத் திரும்பத் தரவேண்டும்'' என்றார். மூவரும் இதற்கு ஒத்துக்கொண்டனர். 

சீமான் முதல் பணியாளரை அழைத்து, அவரிடம் ஐந்து தாலந்து தங்கக் காசுகளைக் கொடுத்தார் (ஒரு தாலந்து என்பது மூன்றரை கிலோ எடை உள்ளது!).

இரண்டாவது பணியாளருக்கு இரண்டு தாலந்துகளைக் கொடுத்தார். மூன்றாவது பணியாளரிடம் ஒரு தாலந்து கொடுத்தார். பின்னர் செல்வச் சீமான் விடைபெற்றுச் சென்றார். 

முதல் பணியாளர், தம்மிடம் கொடுக்கப்பட்ட 5 தாலந்துகளைப் பயன்படுத்தி வியாபாரம் செய்தார். திறமையுடன் அவர் வியாபாரம் செய்து லாபமாக மேலும் 5 தாலந்துகளைச் சம்பாதித்தார். இப்போது அவரிடம் 10 தாலந்துகள் இருந்தன.

இரண்டாம் பணியாளரும் நல்லவிதமாக வியாபாரம் செய்து மேலும் இரண்டு தாலந்துகளைச் சம்பாதித்தார். இப்போது அவரிடம் 4 தாலந்துகள் இருந்தன. 

ஒரு தாலந்து மட்டும் பெற்றிருந்த மூன்றாம் பணியாளர் சற்றும் திறமை இல்லாதவர். அவர் "வியாபாரம் செய்து ஒரு தாலந்தை இழந்து விடுவோமோ?' என்ற பயத்தினால் அந்த தாலந்தைப் பயன்படுத்தாமல் பத்திரமாக மண்ணில் புதைத்து வைத்துக் காவல் காத்தார். வேறு எந்தப் பணிக்கும் செல்லாமல் மிகவும் ஏழ்மையில் வாழ்ந்தார். இதனால் அவர் குடும்பம் வறுமையில் வாடியது (மத்தேயு } 25: 14 - 30).
சில காலங்களுக்குப் பிறகு வெளிநாடு சென்றிருந்த சீமான் திரும்பி வந்தார். அப்பொழுது மூன்று பணியாளர்களையும் அழைத்து ""என்ன சம்பாதித்தீர்கள்?'' என்று கேட்டார். 

முதல் பணியாளர் கூடுதலாக 5 தாலந்துகள் சம்பாதித்ததை எஜமானரிடம் சமர்ப்பித்தார். அதுபோலவே இரண்டாம் பணியாளரும் 4 தாலந்துகளை அவர் பாதத்தில் வைத்தார். எஜமானர் மகிழ்ச்சி
யடைந்தார். 

"உங்கள் திறமையை சோதிக்கவே பணம் கொடுத்தேன். மூலதனத்தையும், லாபத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்'' என்று சொன்னதும் இரண்டு பணியாளர்களும் ஆனந்தமடைந்தனர்.  
மூன்றாவது பணியாளரை அழைத்து ""என்ன சம்பாதித்தீர்கள்?'' என்று கேட்டார். அவர், தான் புதைத்து வைத்திருந்த ஒரு தாலந்தைக் கொண்டு வந்து கொடுத்தார். 

"எஜமானரே! எனக்குத் தெரியும் நீங்கள் மிகவும் கறாராக இருப்பீர்கள். "கொடுத்த தாலந்து எங்கே?' என்று கேட்பீர்கள். அதைத் தெரிந்துதான் ஒரு தாலந்தைப் புதைத்து வைத்திருந்தேன். இதோ பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றான். 

எஜமானர் மிகவும் கோபம் கொண்டு, ""புத்தியில்லாத வேலைக்காரனே! இந்தப் பணத்தை வட்டிக்குக் கொடுத்திருந்தால் கூட இப்பொழுது லாபம் கிடைத்திருக்குமே!  இப்படி செய்து விட்டாயே!'' என்று கூறி அந்தப் பணியாளரை அடித்துத் துரத்தினார். அந்த ஒரு தாலந்தை அன்பளிப்பாக முதல் பணியாளரிடமே கொடுத்தார். ""திறமை உள்ளவனுக்கே கொடுக்கப்
படும்!'' என்றார்.

இறைவன் நமக்குக் கொடுத்த திறமையைப் பயன்படுத்தி உழைத்து முன்னேறி, இறைவனைப் போற்றி வாழ்வோம். 
என்றும் இறையருள் நம்மோடு! 

-முனைவர் தே.பால் பிரேம்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com