சிங்கக் குகைக்கு சீர்!

இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை உணர்த்த எடுத்த அவதாரம் நரசிம்மம்.
சிங்கக் குகைக்கு சீர்!

இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை உணர்த்த எடுத்த அவதாரம் நரசிம்மம். இரணியன் சாகாவரம் பெற்றவன்.  பகலிலும் இரவிலும், வீட்டின் உள்ளேயும், வெளியேயும் ஆகாயம், பூமி, நெருப்பு, நீர், காற்று, ஆயுதம், மிருகம், மனிதன் எதனாலும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்ற மிகப் பெரிய  வரத்தைப் பெற்றிருந்தான்.

"இறைவன் எங்கும் உள்ளான்' என்ற சொல்லை நிலை நாட்ட,  அந்தி வேளையில், வாயிற்படியில், மனித உடல் சிங்கமுகத்துடன் தோன்றி, ஆயுதமின்றி நகங்களினாலே இரணியனை வதம் செய்தார் நாராயணன். 

இரணிய சம்ஹாரத்தின்போது காட்சி தந்த அதேகோலத்தில் தனக்கும் தரிசனம் அளிக்க வேண்டுமென்று, சப்த ரிஷிகளுள் ஒருவரான ஜாபாலி இறைவனை வேண்டி அடர்ந்த வனத்தில் தவமிருந்தார்.  

அவரின் வேண்டுக்கோளுக்கிணங்கி, பிரதோஷ வேளையில் உக்ர நரசிம்மராக இரணியனை சம்ஹாரம் செய்த அதே திருக்கோலத்துடன் இத்தலத்தில் எழுந்தருளினார். முனிவருக்கு காட்சியளித்த பின்னர், பெருமாள் தன் கரங்களில் இருந்த ரத்தத்தை அருகிலுள்ள பெரிய நீர் நிலையில் கழுவினார். 

இதனால் அந்த நீரும், அதனருகில் இருந்த குன்றும்  சிவப்பாக மாறியது. அதைத் தொடர்ந்து, பெருமாள் அதே கோலத்தில் நாம் எல்லோரும் வழிபடுவதற்காக இத்தலத்திலேயே கோயில் கொண்டார் எனத் தல புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

சுமார் 8 அடி உயரத்தில் பெருமாள் சிங்க வடிவில் காட்சி தரும் இத்திருத்தலம் "சிங்கப்பெருமாள் கோவில்' என தெய்வத்தின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இங்கு ஆரத்தி நேரத்தில் பெருமாளின் திருமண் நகர்த்தி, நெற்றிக்கண் சேவை செய்வது சிறப்பம்சம்.  

இக்குடைவரைக் கோயில் பிற்காலப் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. சுமார் 1200 ஆண்டுகள் பழைமையானது என்று நரசிம்மர் சந்நிதியின் அருகில் உள்ள கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன. பெருமாளை வலம் வருபவர்கள், படிக்கட்டுகள் கொண்ட சிறுகுன்றினையும் சேர்த்தே வலம் வரவேண்டும். பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பௌர்ணமி கிரிவலம் பூரணபலம் தரும். 

இத்தல இறைவனின் பெயர் "பாடலாத்ரி நரசிம்ம பெருமாள்' என்பதாகும். "பாடலம்' என்றால் சிவப்பு . "அத்ரி' என்றால் குன்று என்று பொருள்.  "பாடலாத்ரி' என்றால் "செந்நிறக் குன்று' எனப் பொருள்படும். 

கோயில் கருவறையில் அருளும் சுவாமியுடன், முன்புறம் பாலநரசிம்மரும், தனி சந்நிதிகளில் அஹோபிலவல்லித் தாயார், ஆண்டாள், லட்சுமி நரசிம்மர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். 

ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் பிரகலாத வரதர் அருள்கிறார். ஆழ்வார்கள், ராமாநுஜர் சந்நிதிகளும் உள்ளன. 

நரசிம்ம அவதாரம் பிரதோஷ காலத்தில் நடந்ததால் பிரதோஷ நேரத்தில் நரசிம்ம பெருமாளை வழிபடுவது மிகுந்த பலன் தரும் . 

தலவிருட்சம் பாரிஜாதமானாலும், கிரிவலம் வரும் போது அரிய வகை அழிஞ்சல் மரத்தைப் பார்க்க முடியும். பெருமாளை வணங்கி அம்மரத்தில்  மஞ்சள், குங்குமம் இட்டு நெய் விளக்கேற்றி  திருமண வரம், மழலை வரம் வேண்டி வழிபடுகின்றனர். 

காது குத்தல், மொட்டை அடித்தல், கல்யாணம், துலாபாரம், விசேஷ அபிஷேக ஆராதனைகள் எனப் பல்வேறு பிரார்த்தனைகளை தமிழ்நாட்டில் இருந்து மட்டுமில்லாமல் ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளில் உள்ள பக்தர்களும் நிறைவேற்றுகின்றனர்.  

அனைத்து விதங்களிலும் சிறப்புற்றிருக்கும் இத்தலத்தில் பக்தர்களின் உதவியுடன் 5 நிலை, 7 கலசங்களுடன், 62 அடியுயர ராஜகோபுரம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

சிங்கக்குகைக்கு சீர் அளிக்கும் விதமாக கட்டப்பட்டுள்ள நூதன ராஜகோபுரத்தை நரசிம்மருக்கு சமர்ப்பிக்கும் வகையில் 3 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இத்தலம், சென்னை தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அருகிலேயே  உள்ளது.

மார்ச் 13-ஆம் தேதி சனிக்கிழமை  மாலை யாகசாலை பூஜைகள் துவங்கும். 15-ஆம் தேதி காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுகளில் தாங்களும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்!

மேலும் விவரங்களுக்கு: 044-27464325; 9444103372.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com